தடுப்பூசி தழும்பு!
ஒரு காலத்தில், 'பெரியம்மை' என்ற பெயரைக் கேட்டாலே, பயத்தில் அலறியடித்து, ஓடி ஒளியும் நிலை இருந்தது. இருப்பிடத்தையே காலி செய்தவர்களும் உண்டு.
இந்த நோயை ஒழிக்க, மருந்து கண்டுபிடித்தவர், எட்வர்டு ஜென்னர் என்ற அறிஞர்.
ஒரு பால்கார பெண்ணின் அனுபவத்தை கேட்டு, தடுப்பு மருந்து கண்டுபிடித்தார் என்றால் நம்புவீர்களா...
ஐரோப்பா கண்டத்தில் உள்ள இங்கிலாந்து, பெர்க்ஸி என்ற ஊரில், 1749ல் பிறந்தார், ஜென்னர். சிறுவயதிலே தந்தையை இழந்தார்; தாய்மாமன் தயவில் வளர்ந்தார்.
கல்லுாரி படிப்புக்குப் பின், மருத்துவர், ஜான் அண்டரிடம் மாணவராக சேர்ந்தார். 1792ல், மருத்துவ பட்டம் பெற்றார். இந்த நேரத்தில், பெரியம்மை என்ற தொற்று நோய் பாதிப்பால், ஏராளமான மக்கள் இறந்தனர்.
இந்த கொடிய நோயை ஒழிக்க, மருத்துவ உலகமே போராடிக்கொண்டிருந்தது.
ஒருமுறை, லட்லோ என்ற மருத்துவரை சந்தித்தார், ஜென்னர். அவர் பால் விற்கும் பெண் விரலுக்கு மருந்து போட்டுக்கொண்டிருந்தார்.
அந்த நேரம், அம்மை நோய் பற்றிய பேச்சு வந்தது.
அந்த பேச்சில் பங்கேற்ற, பால் விற்கும் பெண், 'எனக்கு, 'மாட்டம்மை' என்ற நோய், வந்தது; குணமாகிவிட்டேன். இனி, எந்த வகை அம்மை நோயும் என்னை தாக்காது...' என்றார். இதைக் கேட்ட, ஜென்னாரின் மனதில் சீரிய சிந்தனை உதித்தது.
மாட்டம்மை உட்பட அனைத்து அம்மை நோய்கள் பற்றிய விவரங்களையும் சேகரித்தார்.
'மாட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்திருந்த ஒரு சிறுவன், மீண்டும் அம்மை நோய் தாக்கி மடிந்து விட்டான்' என்ற தகவலை அறிந்து குழப்பமடைந்த ஜென்னர், முடிவுக்கு வர முடியாமல் தவித்தார்.
ஒருமுறை, சிகிச்சை பெற வந்த நோயாளி கையில், மாட்டம்மை கொப்பளத்தைக் கண்டார். அந்த கொப்பளத்தில் இருந்த நீரை சேகரித்து, சோதனை அடிப்படையில், ஒரு சிறுவன் உடலில் செலுத்தினார்.
சில நாட்களில், அந்த சிறுவனை, மாட்டம்மை நோய் தாக்கியது. விரைவில் குணமடைந்தான். வைசூரி என்ற அம்மை நோய் பாதித்தவரின் உடல் கொப்பளத்திலிருந்த நீரை, அந்த சிறுவன் உடலில் செலுத்தினார். அவனை, வைசூரி அம்மை நோய் தாக்கவில்லை.
இது போல், 14 ஆண்டுகள் ஆய்வு நடத்தி, பெரியம்மை என்ற கொடூர நோய்க்கு மருந்து கண்டுபிடித்தார், ஜென்னர்.
அதை, 75 பக்க அறிக்கையாக வெளியிட்டார். மருத்துவ உலகம், அவரது முடிவை ஏற்க மறுத்தது. அவரது ஆராய்ச்சிக்கு, அவமதிப்பே பரிசாக கிடைத்தது.
அவரிடம் சிகிச்சை பெற்ற மக்கள் பாராட்டினர். பின், மருத்துவ உலகம், அவரது முடிவை ஏற்றது.
இந்நோய் வராமல், தடுக்கும் மருந்தை, ஜென்னர் அறிமுகப்படுத்தினார். குழந்தை பிறந்து, ஆறு மாதத்திற்குள், அம்மை தடுப்பு ஊசி போடும் நடைமுறையை உருவாக்கினார்.
அவரது, அரிய சேவையை பாராட்டிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கவுரவ பட்டம் தந்தது. ஜென்னர், 1823ல் மறைந்தார்.
அம்மை நோய் தடுப்பு ஊசி தழும்புகளை, முதியவர்களின் கை புஜங்களில் காணலாம். இது, ஜென்னர் புகழ் பாடும் முத்திரை.
- என்றென்றும் அன்புடன்,
அங்குராசு