ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் விரிந்திருக்கும், ரஷ்ய நாட்டில் உள்ள போல்ஸ்நேயி கிராமத்தில், 1937ல் வாலண்டினா என்ற பெண் பிறந்தார். தந்தை, தறிப்பட்டறைத் தொழிலாளி; தாய் ஆசிரியை.
பள்ளிப்படிப்பு முடித்தவுடன், ராணுவத்துக்கு சீருடை தயாரிக்கும் தொழிற்சாலையில் சேர்ந்தார் வாலண்டினா.
அங்கு, பாராசூட்டில் குதிக்கும் ராணுவப் பிரிவு வீரர்கள் ஒருமுறை வந்தனர். அவர்களுடன் நட்பு கொண்ட வாலண்டினா, பாராசூட்டில் குதிக்க பயிற்சி பெற்றார்.
'எவ்வளவு உயரத்தில் இருந்தும், அநாயசமாக குதிக்கும் பெண்' என, புருவம் உயர்த்த வைத்தார். மாஸ்கோ சதுக்கத்தில், ரஷ்யபுரட்சி தினக் கொண்டாட்டம், 1958ல் நடந்தது. அப்போதைய ரஷ்ய அதிபர் முன்னிலையில், பல ஆயிரம் மீட்டர் உயரத்திலிருந்து, பாராசூட்டில் குதித்து சாதனை புரிந்தார்.
இதையடுத்து, ரஷ்யா முழுவதும், வாலண்டினா புகழ் பரவியது.
சோவியத் விண்வெளி ஆராய்ச்சிக் கூட பணிக்கு தேர்வு பெற்றார். அங்கு, ராக்கெட் இயங்கு அறிவியலைக் கற்று தேர்ந்தார். பின், பூஜ்ய ஈர்ப்பு விசைக்கு ஏற்ப உடலை தயாராக்கும் பயற்சியை மேற்கொண்டார்.
அப்போது, விண்வெளியில் பறந்து பூமியைச்சுற்றி வரும் ஆய்வு பணிக்கு, தேர்ந்தெடுத்துள்ளதாக, ரஷ்ய ராணுவத் தலைமை தெரிவித்தது.
இந்த பணியில் சேர, குறைந்தபட்சம், 1,500 மணி நேரம் விமானம் ஓட்டி, பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் பொறியியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்வெளியில், யாருமற்ற இடத்தில், எதையும் சமாளிக்கும் திறனை வளர்த்திருக்க வேண்டும். இவற்றை எல்லாம் மனம் ஊன்றி கற்றார். விண்ணில் ஆராய்ச்சிக்கு திட்டமிடுதல், நேர மேலாண்மை பயிற்சியையும் பெற்றார்.
உள்ளூர்வாசிகள், 'ஒரு பெண்ணிற்கு இது தேவையா...' என்றனர். பெற்றோரும் கூட தயங்கினர். ஆனால், வாலண்டினாவின் மனமோ, விண்ணில் பாய துடித்தது. கடும் பயிற்சிகளால் கனவு வென்றது.
'ஆகாயத்திலும் கோட்டை கட்ட முடியும்' என்ற புது மொழியை உருவாக்கினார்.
வானம் வசப்படுமா என, 18ம் நுாற்றாண்டில் மனிதன் ஏங்கினான். புதிய முயற்சிகளை, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், 19ம் நுாற்றாண்டில் மேற்கொண்டனர்.
அதில் உச்சக்கட்டமாக, 1963ல், விண்கலத்தில் பறந்த வாலண்டினா, பூமியை, 48 முறை சுற்றி வந்தார். முதல் விண்வெளி வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார்.
உலகம் உள்ள வரை, அவர் புகழை அசைக்க முடியாது.