ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஜெர்மனி நாட்டில், மால்மோ மிகச்சிறிய ஊர்; அது, ஸ்வீடன் நாட்டு எல்லைக்குள் இருந்தது. அந்த ஊரில் பிறந்தவர், வில்ஹம் ஷீல். பள்ளிக்கு போனதில்லை. சிறு வயதிலிருந்தே, மருந்துக் கடைகளில் வேலை செய்து வந்தார். வேதிப்பொருட்கள் மீது, ஒருவித ஈர்ப்புடன் செயல்பட்டார்.
டார்டாரிக், காலிக், மாலிக், சிட்ரிக், ஆக்சாலிக் போன்ற அமிலங்களை கண்டறிந்தார். விஷ வாயுக்களான, ஹைட்ரஜன் சல்பைட், ஹைட்ரஜன் ப்ளுரைட், ஹைட்ரஜன் சயனைட் ஆகியவற்றை, தனித்து பிரித்தெடுத்தார்.
மனித எலும்பில், கால்ஷியம் பாஸ்பேட் இருப்பதைக் கண்டறிந்தார். காப்பர் ஆர்சனைட் எனும், பச்சை நிறமியையும், மாங்கனீசு, நைட்ரஜன், ஆக்சிஜன், டங்ஸ்டன், பேரியம், குளோரின் ஆகியவற்றையும் கண்டுபிடித்தார். ஆனால், அந்த பெருமைகள் எல்லாம், வேறு நபர்களுக்குப் போனது.
மருத்துவத் தேவைக்காக, 1774ம் ஆண்டிலேயே குளோரினைப் பிரித்தெடுத்து விட்டார். ஆனால், 1790ல் ஹம்ப்ரீ டேவி என்பவர் கண்டுபிடித்ததாக வரலாறு சொல்கிறது. ஆக்சிஜனை, 1771ல் கண்டுபிடித்து பிரித்தெடுத்தார். ஆனால், ஜோசப் பிரீஸ்ட்லி என்பவர், 1774ல் கண்டுபிடித்ததாக பதிவில் உள்ளது.
கண்டுபிடிப்புகளை, உடனே பதிவு செய்யாமல், அடுத்தடுத்த பணிகளில் கவனம் செலுத்தியதால், இது போன்ற நிலை ஏற்பட்டது.
ஐரோப்பாவில் உள்ள சுவீடன் மன்னர், மூன்றாம் கஸ்டவ் அவையில், ஒரு அறிஞர், ஷீல் கண்டுபிடித்தவற்றைப் பற்றி விளக்கி, வியந்து பாராட்டினார். உடனடியாக, ஷீல் பற்றி விசாரிக்க மன்னர் உத்தரவிட்டார். அரசவையில் அவருக்கு இடம் தரவும் குறிப்பிட்டார். ஆனால், விதி வேறாக இருந்தது.
ஷீல் பெயரில், பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர் ஒருவர் இருந்தார். அவரை தவறுதலாக அழைத்து கவுரவித்தனர். கவுரவிக்கப்பட வேண்டிய, ஷீல் மறைக்கப்பட்டார்.
இத்தனை வேதிப் பொருட்களை கண்டுபிடித்திருந்தாலும், மருந்துக்கடை உதவியாளராகவே, காலம் தள்ளினார். கொடும் நோயால் பாதிக்கப்பட்டு, 43ம் வயதில் இறந்தார்.