இளஸ்... மனஸ்... (169) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
இளஸ்... மனஸ்... (169)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2019
00:00

அன்புள்ள ஜெனிபர் மகளுக்கு, அன்பு அம்மா எழுதுவது... எனக்கு ஒரே மகன்; ஒரே பேரன். எட்டாம் வகுப்பு படிக்கிறான். மருமகளும் வேலைக்குச் செல்கிறாள். துரித உணவுகள் தான் அவனுக்கு பிடித்தது; சத்தான உணவை சாப்பிடுவதில்லை.
நாம் அதை செய்து கொடுத்து பழக்கியிருந்தால் தானே சாப்பிடுவான். வேலைக்குச் செல்லும் அவசரத்தில், மகன் எதை கேட்கிறானோ, அதை வாங்கி கொடுத்து விடுகின்றனர். இப்படி சாப்பிட்டு குண்டாக இருக்கிறான்.
எனக்கு தெரிந்ததெல்லாம், இட்லி, தோசை, வடை, பஜ்ஜி தான்.
'தினமும் இட்லி தானா...' என்று, முணு முணுக்கிறான். அவனுக்கு பிடித்தமாக செய்து கொடுப்பதற்கு, ஏதேனும் வழி சொல்லுமா... நானே செய்து கொடுத்து, பேரனது ஆரோக்கியத்தை கவனிக்க நினைக்கிறேன்.
எனக்கு, மொபைல் போனில், வீடியோ பார்த்து சமைப்பதெல்லாம் தெரியாது. நீயே எனக்கு சுலபமான வழி சொல்லுமா. இந்த கடிதத்திற்கான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ஹா... ஹா... எத்தனை பாசக்கார பாட்டி... உங்களை பார்க்க... எனக்கே பொறாமையா இருக்கும்மா. இந்த காலத்துல, பெரியவங்க வீட்டில் இருப்பதே பாக்கியம் தான்.
உங்களுக்கு ஏத்த மாதிரி, எளிமையான சமையல் குறிப்புகள் சொல்றேன்.
தினமும், தோசை கொடுத்தால் சாப்பிட மாட்டாங்க... அதனால, இரண்டு கேரட்டை எடுத்து, தோல் சீவி, அரைத்து, ஒரு கரண்டி அளவிற்கு, மாவில் கலந்து, தோசை ஊற்றி கொடுங்கள். ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் கேரட் தோசையை, விரும்பி சாப்பிடுவான்.
இப்படியே, பீட்ருட்டை தோல் சீவி, அரைத்து, ஒரு கரண்டி அளவிற்கு மாவில் கலந்து தோசை ஊற்றினால், ரோஸ் கலர் தோசை வரும்; அழகாகவும், வித்தியாசமான சுவையில் இருக்கும்.
எந்த கீரையாக வேண்டுமானாலும் இருக்கலாம்; கொஞ்சம் கீரையை அரைத்து, மாவில் கலந்து, பச்சை தோசை செய்து கொடுங்கள்; விரும்பி சாப்பிடுவான். இதற்கு, நாம் வைக்கும், தேங்கா சட்னி, தக்காளி சட்னியே போதுமானது. இவற்றின் சத்துக்களும், பேரன் உடம்பிற்குச் செல்லும்.
* குட்டி ஊத்தப்பம் போட்டுக் கொடுங்க... கோஸ், கேரட், குடை மிளகாய் இவற்றை சீவி, தோசை மாவின் மேல் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு கொடுங்கள்; விரும்பி சாப்பிடுவான்
* வண்ண வண்ண இட்லி, குட்டி குட்டி பூரி செய்து கொடுங்கள்; கோதுமை மாவு பிசையும் போது, அரைத்த கேரட்டோ, பீட்ரூட்டோ சேர்த்துக் கொண்டால், அது, அழகிய கலரில் பூரியாக வருவதை பார்ப்பதற்கே அழகாக இருக்கும்
* குட்டி இட்லி செய்து, வீட்டில் கருவேப்பிலை பொடி இருந்தால், ஒரு வாணலியில் கடுகு தாளித்து, அதில் கருவேப்பிலை பொடியை போட்டு, குட்டி இட்லியையும் போட்டு, கடாயை சலிப்பது போல் செய்து, அதன் மீது, சிறிது நெய் விட்டுக் கொடுங்கள். இந்த கருவேப்பிலை இட்லியின் சுவையில் குடும்பமே மயங்கி, 'அம்மா... அம்மா...' என்று, உங்களை சுற்றி வருவர்.
இதை செய்து கொடுத்த பின், வீட்டில் என்ன நடந்தது என்று எனக்கு கடிதம் எழுதுங்கம்மா...
- அன்புடன்,
ஜெனிபர் பிரேம்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X