பேரம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:00

மணியோசை கேட்டு, படித்துக் கொண்டிருந்த பேப்பரை மடித்து வைத்து, கதவை திறந்தான், மதியழகன். அறிமுகமில்லாத இருவர், கையில் சில கோப்புகளுடன் வெளியே நின்றிருப்பதை கண்டு அதிர்ந்தான்.
''யார் நீங்க... உங்களுக்கு என்ன வேணும்?''
''இங்கே, மதியழகன்ங்கிறது?''
''நான் தான், மதியழகன். உங்களுக்கு, என்ன வேணும்?''
''நீங்க, அமுதா கலைக் கல்லுாரியில, உதவி பேராசிரியர் வேலைக்கு, விண்ணப்பித்து இருந்தீங்களா?'' என்றான், கையில் கோப்புகளுடன் நின்று கொண்டிருந்தவன்.
''ஆம்... அதுக்கென்ன இப்போ?''
பக்கத்தில் இருந்தவனிடம், ''வெரிகுட்... சரியான விலாசத்துக்கு தான் வந்திருக்கோம்!'' என்றான்.
மதியழகனைப் பார்த்து, ''உள்ளே போய் பேசலாமா?'' என்றான்.
''வாங்க,'' என்று இருவரையும் அழைத்து, கூடத்தில் அமர வைத்தான்.
''அப்பா... அமுதா கலைக் கல்லுாரியிலேர்ந்து வந்திருக்காங்கப்பா... எதுக்குன்னு தெரியலை,'' என்று, உள் நோக்கி குரல் கொடுத்தான்.
மதியழகன், வயது 25, மாநிறம், அகன்ற நெற்றி, அறிவாளிகளுக்கே உரிய கூர்ந்த நாசி, ஒளி வீசும் கண்கள், ஆண்களை வசீகரிக்கும் ஆணழகன். முதுகலை பட்டம் பெற்று, மூன்று ஆண்டுகளாக, வேலைக்கு அலைந்து கொண்டிருப்பவன்.
இரண்டு வாரங்களுக்கு முன், பேப்பரில் வந்த, 'உதவி பேராசிரியர்கள் தேவை' என்ற விளம்பரத்தைப் பார்த்து, அமுதா கலைக் கல்லுாரிக்கு சென்றவன், நேர்முக பேட்டியில் வெற்றியும் பெற்றான். 'தகவல் சொல்லி அனுப்புறோம்...' என்று வழியனுப்பிய, மதியழகனைத் தேடி, வீட்டுக்கு வந்திருந்தனர்.
தோட்டத்தில், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ராமநாதன், குழாயை மூடி, கையைத் துடைத்தவாறே வந்தார்; அவர்கள் இருவரையும் பார்த்து, கை குவித்து வணங்கினார்.
''ஐயா... உங்க மகன், மதியழகன், அமுதா கலைக் கல்லுாரியில, உதவி பேராசிரியர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்... அது விஷயமாத்தான் பேச வந்திருக்கோம்,'' என்றான், ஒருவன்.
''அதுல, பேச என்ன இருக்கு... அவனுக்கு, தகுதியும், திறமையும் இருக்குறதா, நிர்வாகம் நம்பினா, நியமனம் பண்ணுங்க... இல்லைன்னா, விட்டுடுங்க... பேச்சு நடத்த, நாம என்ன, தேர்தலிலா நிக்குறோம்... தொகுதி உடன்பாடு பத்தி பேச,'' என்றார், ராமநாதன்.
இருவரில், கொஞ்சம் அடர் மீசை வைத்திருந்த ஒருவன், ''ஐயா... வேடிக்கையா பேசுறீங்க... நாட்டுல, வேலை வாய்ப்பு, எந்த அளவுக்கு இருக்குன்னு, உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்... இன்றைய நிலைமையில, ஒரு பதவி, 50 லட்சம் ரூபாய் வரைக்கும் விலை போகுது...
''எங்க நிர்வாகம், 30 லட்சத்துல முடிக்க, முடிவு பண்ணி இருக்கு... ஒரு வாரத்துல நீங்க, பணத்தை தயார் பண்ணி கொடுத்தீங்கன்னா, உங்க மகனுக்கு, வேலை, நிச்சயமாகிடும். என்ன சொல்றீங்க?'' கொஞ்சம் கூட பிசிறடிக்காமல் துாண்டிலை வீசினான்.
''என்னது, 30 லட்சமா?'' அதிர்ந்தார், ராமநாதன்.
''ஐயா... உங்க மகன், இந்த வேலையில சம்பாதிக்க போற வருமானத்தை கணக்கு பண்ணுனா, 30 லட்சமெல்லாம், ஒரு விஷயமே இல்லை!''
''அது சரி... 30 லட்சத்துக்கு, நாங்க எங்கே போறது?''
''சார்... உதவி பேராசிரியர் வேலைக்கு என்ன சம்பளம் வரும்?'' என்று வினவினான், மதியழகன்.
''தொகுப்பூதிய அடிப்படையில தான், நியமனம் பண்ணுவாங்க... 35 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். உங்க செயல்திறனை பார்த்து, ஒன்று அல்லது இரண்டு வருஷத்தில் நிரந்தரம் பண்ணுவாங்க... அப்படி ஆச்சுன்னா, 90 - 95 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.
''ரொம்ப யோசிச்சிட்டு இருக்காதீங்க... 'டிமாண்ட்' அதிகமா இருக்கு... எவ்வளவு சீக்கிரம் பணத்தை புரட்டறீங்களோ, அவ்வளவு சீக்கிரம், நியமனம் கிடைக்கும்; அதுக்கு நாங்க உத்தரவாதம்... அப்ப, நாங்க புறப்படுறோம்... பணம், தயார் பண்ணதும் இந்த எண்ணுக்கு போன் பண்ணுங்க,'' என்று, போன் நம்பரை, துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்து, எழுந்தனர்.
''என்னங்க... இதுல, வெறும் போன் நம்பர் தான் இருக்கு... பேரு, ஊரு, ஒண்ணையும் காணோமே,'' என்று, தன் சந்தேகத்தை கேட்டான், மதியழகன்.
''தம்பி... நீங்க எந்த ஊருல இருக்கீங்க... இது, அமைச்சரோட பி.ஏ., நம்பர். அவர் தான் போனை எடுப்பாரு... அவுங்கள்லாம், பேரு, விலாசத்தை கொடுக்க மாட்டாங்க... நமக்கு வேலைதானே... பேரும், ஊருமா முக்கியம்?''
''சரிங்க... பணத்தை, தயார் பண்ணிட்டு, நாங்களே தொடர்பு கொள்றோம்!'' என்று, வழியனுப்பி வைத்தான், மதியழகன்.
மகளின் திருமணத்திற்காக, வங்கியில், 10 லட்ச ரூபாய், 'டிபாசிட்' செய்திருந்தார், ராமநாதன். அதை எப்போது வேண்டுமானலும் எடுத்து கொள்ளலாம். ஆனால், மீதி, 20 லட்சத்திற்கு?
ராமநாதனின் மனைவி, மல்லிகா, பீரோவிலிருந்து நகைகளை எடுத்து, கணவர் முன் பரப்பி வைத்தாள்.
''என்ன இது?'' என்றார், ராமநாதன்.
''தெரியலையா... நகைங்க, நகை!'' என்றாள்.
''அது தெரியுது... இதை எடுத்து, ஏன் பரப்பி வெச்சிருக்கே?''
''மதியோட வேலைக்காக, 30 லட்ச ரூபாய் புரட்ட என்ன வழின்னு யோசிச்சிட்டு இருக்கீங்க... பீரோவுல இதெல்லாம் துாங்கிகிட்டுத்தானே இருக்கு... இதையும் வெச்சு சமாளிக்க முடியுமான்னு பாருங்க!''
''அது சரி... எத்தனை பவுன் தேறும்?''
''கல்யாணத்துல, எங்கப்பா போட்ட, 25 பவுன். அப்பப்போ உங்க, 'சர்வீஸ், அரியர்ஸ்' கிடைச்சப்ப வாங்கிக் கொடுத்தது, 15 பவுன். மொத்தம், 40 பவுன் தேறும்ங்க!''
கணக்குப் போட்டுப் பார்த்த ராமநாதன், உதடு பிதுக்கி, ''ப்ச்... அப்படியும், 10 கொறையுதே... 30 தேறலியே,'' என்றார்.
அதுவரை அமைதியாக இருந்த, மதியழகன், ''அப்பா... நம் வீட்டை, வங்கியில அடமானம் வெச்சா, 30 லட்ச ரூபாய் புரட்டிடலாமேப்பா,'' என்றான்.
''அதானே... இந்த யோசனை எனக்கு வரலியே... நாளைக்கே, வங்கிக்கு போய், அடுத்த வேலையை ஆரம்பிச்சிடலாம்.''
பணப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்ததில், அனைவருக்கும் மகிழ்ச்சி.
முப்பது மாடி கட்டடம் ஒன்றின், தரை தளத்தில் தான், அந்த வங்கி அமைந்திருந்தது.
ராமநாதனும், மதியழகனும் வீட்டை அடகு வைத்து, பணத்தை பெற்று, வெளியே வரும் போது, உள்ளே நுழைந்த ஒருவன், அவர்களை நெட்டித் தள்ளியதில், ராமநாதனின் கையிலிருந்த பணப்பை தவறி விழுந்தது.
இருவரும் அவனை முறைக்க, பையை எடுத்து கொடுத்தவனை பார்த்து அதிர்ந்தான், மதியழகன்.
அவன், மதியழகனின் பள்ளித் தோழன், லோகநாதன்.
''ஏய்... நீ எங்கப்பா இங்கே?'' என்றான்.
வேலை விஷயத்தை கூறினான்.
''இரண்டு நிமிஷம் இருங்க... வந்துடறேன்!'' என்று சொல்லி, உள்ளே சென்று, இரண்டு நிமிடத்தில் வந்தான்.
''வாங்க... உட்கார்ந்து பேசலாம்!'' என்றான்.
''இல்லை, லோகு... கொஞ்சம் அவசரம்... இன்று இந்த பணத்தை, அந்த அரசியல்வாதிகிட்ட கொடுக்கலேன்னா, வேலை கிடைக்காதுடா,'' என்றான், மதியழகன்.
''அதை கொடுக்கறதுக்கு முன், உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... அதுக்குத்தான் கூப்பிடுறேன்... புரிஞ்சுக்க!''
அரை மனதோடு, மீண்டும் வங்கிக்குள் சென்று, வரவேற்பறையிலிருந்த சோபாவில் அமர்ந்தனர்.
லோகநாதன் தான், முதலில் பேச்சைத் துவங்கினான்...
''அந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?''
''முப்பத்தஞ்சாயிரம்!'' என்றான், மதியழகன்.
''நீங்க வாங்கி இருக்குற கடனுக்கு, மாசம் எவ்வளவு வட்டி கட்டணும்ன்னு தெரியுமா?''
இருவரும் முழித்தனர்.
லோகநாதனே தொடர்ந்தான்...
''வங்கி கடன், 30 லட்ச ரூபாய்க்கு, 30 ஆயிரம் வட்டி கட்டணும்... வேலைக்கு போய் நீ வாங்குற, 35 ஆயிரத்துல, 30 ஆயிரம் ரூபாய வட்டியா கட்டிட்டேன்னா, மீதி எவ்வளவு?''
''ப்ச்... என்னப்பா நீ, கணக்கு வாத்தியார் மாதிரி கேள்வி கேட்டிட்டிருக்கே... மீதி, 5,000... அதுக்கென்ன இப்போ?'' என்றான், மதியழகன்.
நேரம் ஆக ஆக, அந்த வேலை கை நழுவிப் போய் விடுமோ என்ற கவலை மதியழகனுக்கு.
''மதி... ஏழெட்டு மாசம், வேலை வாங்கிகிட்டு, உன் செயல்திறன் சரியில்லைன்னு சொன்னா என்ன பண்ணுவே?''
தந்தையும், மகனும் திரு திருவென்று முழித்தனர்.
''மதி... நான் சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதே... வேலையில்லா திண்டாட்டத்தை மூலதனமாக்கி, ஒரு கூட்டம், ஏமாத்தி பொழச்சிட்டிருக்கு... இவங்களும், அந்த கூட்டம் தான்... பணம் போனா போனது தான்... திரும்பி வராது... பணமும் போயி, நீங்க இருக்குற வீடும் போனா?''
ராமநாதனும், மதியழகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
''பணம் சம்பாதிக்க, 100 வழி இருக்கு, மதி... லஞ்சம் கொடுத்துத்தான் வேலை வாங்கணும்ன்னு அவசியமில்லே... உழைக்கத் தயார்னா சொல்லு, பிழைக்க ஏற்பாடு பண்றேன்!'' என்றான், லோகநாதன்.
''சொல்லுப்பா... என்ன பண்ணணும்ன்னு சொல்லு?''
''ஒண்ணுமில்லே, இந்த, 30 மாடி கட்டடத்துல, 12, 13, 14 என, மூணு மாடியிலேயும் சேர்த்து, 1,000 பேர், வேலை செய்றாங்க. அவுங்களுக்கு, காலை டிபன், மதிய சாப்பாடு தயார் பண்ணி, வரவேற்பு அறையில் இருக்கும் ஆளிடம் கொடுத்தாப் போதும்... அவுங்க பகிர்ந்துப்பாங்க...
''ஒரு நாளைக்கு, 2,000 ரூபாய் கிடைக்கும். நேத்து தான், 'ஆர்டர்' கிடைச்சது. ஏற்கனவே இதே, கட்டடத்துல, 3,000 பேருக்கு, 'கேட்டரிங்' பண்ணிட்டிருக்கேன்... அதோட, இந்த, 'ஆர்டரும்' கிடைச்சிருக்கு... எப்படி சாமாளிக்கறதுன்னு முழிச்சிட்டிருந்தேன்... கடவுளா பார்த்து, இன்று, உன்னை சந்திக்க வெச்சிருக்காரு!''
''கேட்டரிங் பத்தி, எனக்கு எதுவும் தெரியாதே, லோகு!''
''சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்ன்னு படிச்சிருக்கோம்ல... கவலைப்படாதே, 15 நாளைக்கு, என் கூடவே இருந்து, தொழிலை கத்துக்க... அதுக்கப்புறம் நீயே நேரடியா களத்துல இறங்கலாம்... ஐந்து லட்ச ரூபாய் முதலீடு தேவைப்படும்... அதையும், நாலைஞ்சு மாசத்துல தயார் பண்ணிடலாம்... என்ன சொல்றே?''
ராமநாதனை பார்த்தான், மதியழகன்.
''அப்பா... ஐந்து லட்ச ரூபாயை கையில வெச்சிக்கிட்டு, மீதியை வங்கியில, 'டிபாசிட்' பண்ணிடலாம்பா... அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கட்டிடலாம்!'' என்றான்.
வங்கியில் பணம் செலுத்துவதற்கான சீட்டு எடுத்து, பூர்த்தி செய்யத் துவங்கினான், மதியழகன்.
லோகநாதனின் கைகளைக் குலுக்கி, ''ரொம்ப, நன்றி லோகு!'' என்றான்.
''மதி... உங்கப்பா, கஷ்டப்பட்டு சம்பாதிச்சதுல, கட்டுன வீடுடா... அது, கை நழுவிப் போறதுக்கு முன், கடவுள் வழி காட்டி, காப்பாத்தி இருக்கார்!'' என்றான்.
இருவரையும் பெருமையாக பார்த்தார், ராமநாதன்.
மதியழகனின் மொபைல்போன் சிணுங்கவே, ''ஹலோ!'' என்றான்.
''ஹலோ... அமுதா கலைக் கல்லுாரியிலிருந்து பேசுறோம்... பணம், தயார் பண்ணிட்டீங்களா... எப்ப எடுத்து வர்றீங்க?''
''ஹலோ... என்ன சொல்றீங்க... எதுவும் சரியா கேக்கலை!'' என்று, இணைப்பைத் துண்டித்தான், மதியழகன்.

எஸ். ராமசுப்ரமணியன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
23-ஜூன்-201906:04:53 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இப்போதெரியுதா எதனால் எல்லா mla / எம்பி / மந்திரிகளும் கல்லூரி துவாங்கறாங்கன்னு சேவையா சாரி இல்லீங்க மக்களை ஏமாத்தி பஞ்சம் பிளக்கவே செய்யும் பிராடுகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X