திண்ணை | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
திண்ணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:00

சிவ. நாகேந்திரபிரபு எழுதிய, 'பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்வும், வாக்கும்' நுாலிலிருந்து:
அரசியலில் எத்தனையோ தலைவர்களுக்கு, ஏணியாக விளங்கினார், முத்துராமலிங்க தேவர். இன்று, காமராஜரை போற்றுகிறோம்; தியாகத்தை மதிக்கிறோம். அஸ்தியை மட்டுமே ஆஸ்தியாக வைத்து போனவர் என்ற பெருமை, அவருக்கு உண்டு.
காமராஜர், அன்று, அரசியலில் உயர்வதற்கு, பசும்பொன் தேவர் உழைத்தார் என்பது, வரலாற்று செய்தி. அது, பொய்யுரையுமல்ல, புனைந்துரையும் அல்ல.
நகராட்சித் தேர்தலில் காமராஜர், நிற்கக் கூடாது என்பதற்காக, அவரை கடத்தி, நீதி கட்சியை சேர்ந்த, பல பெருமக்கள் இருந்த, விருதுநகரில், ஓர் இடத்தில் அடைத்து வைத்தனர்.
விருதுநகர் கூட்டத்தில், 'நான் பேச ஆரம்பிக்கிறேன். பேச்சை முடித்து, மேடையை விட்டு இறங்குவேன். இறங்கும்போது, காமராஜர், என் எதிரில் நிற்க வேண்டும். யார் அவரை அடைத்து வைத்திருக் கின்றனரோ, அவர்கள், அவரை, என் கண் முன் அழைத்து வந்துவிட வேண்டும்.
'பேச்சை முடித்து இறங்கும்போது, காமராஜரை பார்க்காவிட்டால், அதன்பின் விளையக்கூடிய விபரீதங்களுக்கு, நான் பொறுப்பாளி அல்ல...' என்று சொல்லி, பேச ஆரம்பித்தார், முத்துராமலிங்க தேவர்.
பேசி முடித்து இறங்குகிறபோது, எதிரில் வந்து வணங்கினார், காமராஜர்.
ஆற்றல் மிக்கவர், தன் சொல்லுக்கும், செயலுக்கும் எந்தவிதமான இடைவெளியும் கிடையாது என்று எடுத்துக்காட்டக் கூடிய, நிலைநாட்டக் கூடிய பெருந்தகையாளராக விளங்கினார், பசும்பொன் தேவர்.

எழுத்தாளர், முகில் எழுதிய, 'எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை' நுாலிலிருந்து: கடந்த, 1949ல், தமிழர் திருநாளில், ரத்தக்கண்ணீர் நாடகத்தை அரங்கேற்றினார், எம்.ஆர்.ராதா. நாடகம் துவங்குவதற்கு முன், அன்றைய செய்தித் தாளை, படிக்க சொல்லி கேட்பார். பின், ஒப்பனை அறைக்கு செல்வார். ஒப்பனை முடிந்தவுடன், உட்காராமல் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தபடி இருப்பார். அப்போது, அவருக்குள், நாடகத்திற்கு, புதிய வசனம் ஒன்று உருவாகியிருக்கும். அதற்கு, 'நியூஸ் பேப்பர் சீன்' என்று பெயர்.
நாடகத்தில், முக்கிய கதாபாத்திரமான, காந்தாவின் வீட்டு வேலைக்காரன், மோகனிடம், செய்தித்தாளை கொடுப்பான். அதில் உள்ள, செய்தியை படித்து, கருத்து சொல்வான், மோகன். அது, அன்றைய செய்தியாக இருக்கும்.
அதற்கு, எம்.ஆர்.ராதா அடிக்கும், 'கமென்ட்' சம்பந்தப்பட்டவர்கள் நாக்கை பிடுங்கிக் கொள்வது போல இருக்கும். இந்த, 'நியூஸ் பேப்பர் சீனை' காண்பதற்காகவே, தினமும் நாடகத்திற்கு வந்த ரசிகர்களும் உண்டு.

மோகன், தன் மாமனாரிடம் பேசும் காட்சி ஒன்று:
'என்ன மேன்?'
'மேன் மேன்னு கூப்பிடாத, தம்பி...'
'வொய்?'
'நான், உன் மாமனாராச்சே!'
'எந்த நாராயிருந்தாலும், நான் இப்படித்தான் கூப்பிடுவேன். என்ன மேன், உடம்பு பூரா கோடு கோடா போட்டிருக்க?'
'இது பட்டை...'
'ஓ... நீ பட்டை அடிக்கிற ஜாதியா?'
'இல்லல்லை தம்பி... இது, விபூதி பட்டை...'
'ஓ... அது என்ன மேன், கழுத்துல கொட்டை?'
'தம்பி... தப்பா பேசாதே... இது, ருத்திராட்ச கொட்டை...'
'இதை எதுக்கு மேன் போட்டுக்கிட்டிருக்கிறே?'
'தம்பி... உனக்கு தெரியாது. இதில், கடவுள் இருக்காரு!'
மோகன் பாய்ந்து, தன் மாமனார் கழுத்தில் தொங்கும் ருத்திராட்ச கொட்டையை பிடித்து, 'ஏய்... போலீசுக்கு போன் பண்ணு... அவனவன், 'கடவுளை காணோம் கடவுளை காணோம்'ன்னு தேடிக்கிட்டிருக்கான். கடவுள் என்னடான்னா, இந்த கொட்டையில ஒளிஞ்சுக்கிட்டு இருக்கான்...' என்பார்.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X