தெய்வம் கொடுத்ததை மறக்கலாமா! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
தெய்வம் கொடுத்ததை மறக்கலாமா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:00

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமையைக் கொடுத்துள்ளது, தெய்வம். அதை உணர்ந்து கொள்வதே பிறவியின் பயன். உணர்ந்து கொள்ளாவிட்டால்...
அழகாபுரிக்கு அரசராக, அரவிந்தன் என்பவர் இருந்தார்; தெய்வ பக்தி, கல்வி, கேள்வி ஆகியவற்றில் தலை சிறந்தவர்; குபேர செல்வம் இருந்தது.
அரச பதவியும், செல்வ வளமும், அரவிந்தன் அறிவைக் கெடுத்தன; போகக் கூடாத வழியில் போனார்; செய்யக் கூடாதவைகளை செய்தார்; செல்வத்தை, தானும் அனுபவிக்காமல், அடுத்தவருக்கும் கொடுக்காமல், வாழ்ந்தவருக்கு, இறுதி காலத்தில், கொடிய நோய் உண்டானது.
மந்திர, தந்திரம் என, பல வழிகளில் முயன்றும், அரவிந்தனின் நோய் தீரவில்லை. மூத்த மகனான, அரிச்சந்திரனை அழைத்த அரவிந்தன், 'மகனே... சந்தனம் முதலானவைகளை அள்ளிக் கொட்டியும், இந்த கொடிய நோய் தீருவதாக இல்லை. வடக்கே, சீதையாற்றங்கரையில் இருக்கும் சோலையில் என்னை அழைத்து போய் விடு... அங்குள்ள குளிர்ச்சியால், இந்த நோய் நீங்கும்...' என்றார்.
தந்தையை அழைத்து போய், அவர் சொன்ன இடத்தில் சேர்த்தும், நோய் தீரவில்லை.
ஒருநாள்... அரவிந்தன் படுத்திருந்த இடத்திற்கு மேலே, இரண்டு பல்லிகள், சண்டை போட்டுக் கொண்டன. அப்போது, அவற்றின் உடம்பில் இருந்து ரத்தத் துளிகள் சில, அரவிந்தன் மேல் விழுந்தன.
அதே விநாடியில், ரத்தத் துளிகள் விழுந்த இடத்தில், நோயின் கடுமை குறைந்தது; அரவிந்தனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. 'ஆகா... நம் நோய்க்கு, ரத்தம் தான் சரியான மருந்து போலிருக்கிறது. ரத்தக் குளத்தில் குளித்தால், நோய் முழுதுமாக நீங்கி விடும்...' என்று தவறாக நினைத்தார்.
உடனே, மகனை அழைத்து, 'அரிச்சந்திரா... காட்டில் திரியும் விலங்குகளை கொன்று, அவற்றின் ரத்தத்தால், குளம் உண்டாக்கு, நான் அதில் நீராடுகிறேன். என்னைப் பிடித்திருக்கும் நோய் நீங்கும்...' என்றார்.
அரிச்சந்திரன் நடுங்கினான். 'என்ன இது... பைத்தியக்காரத்தனம், இவர் சொன்னபடி செய்தால், மேலும், பாவம் வருமே; நரகமல்லவா கிடைக்கும். ம், சரி... ஏதாவது ஒருவிதத்தில் இவர் சொன்னதைச் செய்வோம்...' என்று தீர்மானித்து, ரத்தம் போலவே தோற்றம் அளிக்கும் வண்ணக் கலவையால் ஆன, குளத்தை உருவாக்கினான்.
குளத்தைப் பார்த்த அரவிந்தன், மிகுந்த மகிழ்ச்சியோடு அதில் இறங்கி நீராடினார்; முழுகியவர், குளத்து நீரை, சிறிதளவு எடுத்து கொப்பளித்தார்; அப்போது அது, ரத்தமல்ல என்று தெரிந்தது.
'பெற்ற மகனாக இருந்தும், என்னை ஏமாற்றி விட்டாய்... உன்னை உயிரோடு விட்டு வைக்க மாட்டேன். இப்போதே கொன்று விடுகிறேன்...' என்று ஆவேசத்தோடு, கையில் வாளுடன், ஓடினார்.
ஓடும்போது, கால் தடுக்கி விழுந்தார், அரவிந்தன்; கையிலிருந்த வாள், அவர் வயிற்றில் பாய்ந்தது; உயிர் பிரிந்தது.
தெய்வம் எல்லாம் கொடுத்திருந்தும், அதை உணராமல், முறையற்ற வழியில், மகனை முடிக்கப் பார்த்து, முடிந்து போன அரவிந்தன் கதை, நமக்கெல்லாம் ஒரு பாடம்.
தெய்வம் நம்மிடம் அளித்திருப்பதை உணர்வோம், உயர்வோம்!

பி. என். பரசுராமன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X