அன்பின் கோப்பை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:00

வழக்கமான காலை நேர பரபரப்புகளுடன் இயங்கிக் கொண்டிருந்தாள், கல்பனா.
ஒரு அடுப்பில், புடலங்காய் கூட்டு, அடுத்ததில், கோதுமை நுாடுல்ஸ்.
'இன்டக் ஷனில்' கொதித்துக் கொண்டிருந்தது, சுண்டைக்காய் வத்தக் குழம்பு. 'மைக்ரோ அவனில்' வைப்பதற்காக... தயாரிப்பில் இருந்த சாக்லெட் வெனிலா கேக்.
நடுவில், அலுவலகத்தின் இன்றைய வேலைகளும் நினைவிற்குள் ஓடிக்கொண்டே இருந்தன.
புது ஆண்டின், 'லீவ் ரிஜிஸ்டரை அப்டேட்' செய்வது, எல்லாருடைய வருமான வரி கணக்கையும் சரி செய்வது, பதவி உயர்வு மனுக்களை, சீனியாரிட்டி சகிதம் அடுக்குவது என்று, இன்றைக்குள் முடிக்க வேண்டிய வேலைகள்.
''அம்மா... அம்மா... சட்டுன்னு ஒரு சாணக்கிய பொன்மொழி சொல்லும்மா... வாடிக்கையாளர் பத்தி இன்று, தமிழ் ஆசிரியர் வகுப்பில் பேசணும்,'' என்றான், வேகமாக ஓடி வந்த, பரத்.
''அப்பாகிட்ட கேளேன் கண்ணா... உடனடியா ஒண்ணும் தோணலியே,'' என்றாள்.
''அப்பாகிட்டயா... போம்மா... எப்ப பார்த்தாலும், 'சர்க்கிள் ஆபீஸ், ஹெட் ஆபீஸ்' மற்றும் ஏ.ஜி.எம்.,ன்னு போன்லயே இருக்காரு... என்ன கேட்டாலும், 'அம்மாகிட்ட கேளு அம்மாகிட்ட கேளு'ன்னு எழுந்து போயிடறாரு... ப்ளீஸ்மா, நீயே யோசிச்சு சொல்லும்மா!''
''சரி... நீ டிபன் சாப்பிடு, பரத்... அதுக்குள்ள முயற்சி பண்றேன்,'' என்று, மற்ற வேலைகளை முடித்தபடியே யோசித்தாள்.
''பரத்... உன் நெருங்கிய நண்பன், திலீபுக்கு பிறந்த நாள் கேக் பண்ணி கொடுன்னு சொன்னியே... 'மக் கேக்' பண்ணியிருக்கேன்... சரி, சாணக்கிய பொன்மொழி சொல்லட்டுமா?'' என்று, டிபன் டப்பாவையும், கேக் டப்பாவையும் மகனிடம் கொடுத்தாள்.
''வாவ்... என்ன ஞாபகசக்திம்மா உனக்கு... திலீப் அவ்ளோ சந்தோஷப்படுவான்... தாங்க்ஸ்மா... சரி, சொல்லு!''
''வேடன், பறவையை, அதன் குரலை போலவே ஒலி எழுப்பி, அருகில் வர செய்து பிடிப்பான். நாம் யாரை வசப்படுத்த விரும்புகிறோமோ, அவருக்கு பிடித்ததை செய்து, அவரை வசப்படுத்த வேண்டும்... வாடிக்கையாளர் பத்தி சாணக்கியா சொன்னது இது... சரியா கண்ணா?''
''சூப்பர்மா... இது போதும்மா... லவ் யூ மா,'' என்று, உற்சாகத்துடன் ஓடினான், பரத்.
குளியலறை நீரின் ஓசை, வாசு எழுந்து விட்டதை சொன்னது. மறுபடி பாலையும் சூடுபடுத்தினாள்.
''குட்மார்னிங் கல்பனா... என்ன, கேக் வாசனை துாக்குது... கூடவே, வத்தக் குழம்பு வாசனையும்,'' என்று சிரித்தபடியே, காபியை வாங்கிக் கொண்டான்.
''நண்பனுக்கு பிறந்த நாள், கேக் பண்ணி தர சொன்னான், பரத்... சரி, ஒரு வேலை இருக்கு வாசு... கூடைப்பந்து போட்டி வருது... பரத்துக்கு, விளையாட்டு சீருடை வாங்கணும்... ஆபிஸ் விட்டு வரும்போது, வாங்கிட்டு வரீங்களா?''
''எனக்கு, 'இன்வெஸ்டார் மீட்டிங்' இருக்கு, கல்பனா... இந்த வாரம் முழுக்க நான் பிசி!'' என்றான்.
''அப்படியா... சரி, பயிற்சி வகுப்புல, கணக்கு சார் வர சொல்லியிருக்கார்... போயிட்டு வர முடியுமா... உங்க ஆபீஸ் போற வழி தான்!''
''என்ன, கல்பனா... நாந்தான் சொல்றேனே... நிறைய வேலை இருக்கு. மார்ச், 'குளோசிங்' வருதில்லே... ப்ளீஸ்... நீயே பார்த்துக்கோ,'' என்றான்.
காபியும், தினசரியுமாக சோபாவில் உட்கார்ந்தான்.
பின் வாசல் பக்கமாக கேட்டது, கோமதியின் குரல்.
''வா, கோமதி... என்ன சீக்கிரம் வந்துட்டே... இரு, இன்னும் பாத்திரம் ஒழிக்கலே,'' என்றாள்.
''இல்லம்மா... வேலைக்கு வரலே... அய்யாவ பாத்துட்டு போகலாம்ன்னு வந்தேம்மா... 50 ஆயிரம், வங்கி கடனுக்கு,'' என்றாள், கவலையுடன்.
''சரி, வா... அய்யாகிட்ட சொல்லியிருக்கேன்... நீயும் கேளு,'' என்று, உள்ளே விரைந்தாள், கல்பனா.
''கோமதிக்கு கடன் வேணும், வாசு... அவள் புருஷன் இஸ்திரி வேலை பண்றார்; நடை வண்டி தான். நிலையான இடம் இல்லே. இப்போ, ஒரு சின்ன அறை மாதிரி கிடைச்சிருக்கு, புது கட்டடத்துல நல்ல இடம்... முன்பணம், வாடகை, 'ஸ்டீம் அயர்ன், ஸ்ப்ரே மெட்டீரியல்'ன்னு நிறைய செலவு இருக்காம்... 50 ஆயிரம் கடன் வேணுமாம்... ரொம்ப நாளா கேட்கறா, வாசு... உங்களால உதவ முடியுமா?''
''தாராளமா பண்ணலாம்... சிறு தொழில் தானே... கடன் கொடுக்கறதுல ஒரு பிரச்னையும் இல்லே... ஆனா, 10 சதவீதம், 'மார்ஜின்' போடணும்... அதுக்கு ரெடி பண்ணிட்டு, என்னை வங்கியில வந்து பாக்க சொல்லு... உடனே பண்ணிடலாம்,'' என்றான், வாசு.
''என்ன, 10 சதவீதம்னா, 5,000 ரூபாய்... அவளால எப்படி முடியும், வாசு... மூணு குழந்தைகளை வெச்சுகிட்டு அவ ரொம்ப கஷ்டப்படறா... அது இல்லாம கொடுக்க முடியாதா?''
''என்ன பேசறே கல்பனா... வங்கி விதிகள், எல்லாருக்கும் ஒண்ணு தான்... நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே,'' என்று, போனில் அழைப்பு வர, எழுந்து போனான்.
வாடிய முகத்துடன் நின்றாள், கோமதி.
''என்னம்மா... அய்யா இப்படி சொல்றாரு... அஞ்சாயிரத்துக்கு நான் எங்கம்மா போவேன்... ஏற்கனவே வேலை செய்யிற வீடுகள்ல முன் பணம் வாங்கியிருக்கேன்... நீங்களே, 10 ஆயிரம் வரைக்கும் கொடுத்திருக்கீங்களேம்மா... நல்ல இடம்மா... கொஞ்சம் நல்லா வேலை செஞ்சா, கடை சூடு பிடிக்கும்மா,'' என்றாள்.
''சரி, விடு... இன்னொரு தடவை நான் பொறுமையா பேசி பாக்கறேன்,'' என்றாள்.
''ரொம்ப நன்றி... வரேம்மா,'' என்று முகத்தை தொங்கப் போட்டு, வெளியேறினாள், கோமதி.
அன்றைய நாள், மிகுந்த வேலைகளும், அலைச்சல்களும் கொண்டதாக இருந்தது. நிறைய நாட்கள் அப்படி தான்.
அனைத்து நகர ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சு போட்டிக்கு, பரத்தை தயார் செய்தது; அண்ணாநகர் மையத்துக்கு அழைத்து போனது; அதற்காக சிரமப்பட்டு, அலுவலகத்தில் அரை நாள் விடுப்பு வாங்கியது; பயிற்சி வகுப்பு பாடங்கள் தொடர்பாக பேசியது...
விளையாட்டு போட்டிக்கான புது உடைகளை வாங்கி, 'ஆல்டரேஷ'னுக்கு கொடுத்தது; சளி அதிகமாகி, அவன் சிரமப்பட்டபோது, ஆயுர்வேத கடையில் மருந்து வாங்கி வந்தது; தமிழ் மனப்பாட பகுதிக்கு உதவியது என, பரத் தொடர்பான அத்தனை விஷயங்களுக்கும், அவள் தான் அலைய வேண்டியிருந்தது.
'என் அலுவலக பணியை விட, உங்கள் பணி இன்னும் பொறுப்பானதாக, நேரம் பிடிப்பதாகவே இருக்கட்டும்... அதற்காக, வீட்டின் மேல் கொஞ்சம் கவனம் வைக்க முடியாதா... ஒரே குழந்தை, என்ன படிக்கிறான், எப்படி படிக்கிறான், பள்ளியில், டியூஷனில், விளையாட்டில் அவன் பங்கு என்ன, திறமைகள் என்ன...
'அதை எப்படி மேன்மைபடுத்துவது, உடல்நலம், நண்பர்கள் சூழல் எப்படி, உண்ணும் உணவுகள் என்னென்ன என்று ஏதாவது கவலைப்பட்டிருக்கிறீர்களா... சம்பாத்தியம் மட்டுமா வாழ்க்கை... ஏன் இப்படி இருக்கிறீர்கள், வாசு...' என மனதிற்குள் நினைந்தபடி, வருத்தப்பட்டாள், கல்பனா.
அதிசயமாக, 7:00 மணிக்கே வீடு வந்து சேர்ந்திருந்தான், வாசு.
அவனுக்கு மிகவும் பிடித்த, உப்புமா கொழுக்கட்டை தயார் செய்து, பரத் கேட்ட, வேர் கடலை சட்டினியும் செய்திருந்தாள், கல்பனா.
ஆசையுடன் சாப்பிட்டு, ஏதோ விடுகதை புத்தகத்துடன், பரத் உட்கார, உணவு தட்டுடன் வாசுவிடம் போனாள்.
''சூப்பர் கல்பனா... எவ்வளவு நாளாச்சு உப்புமா கொழுக்கட்டை சாப்பிட்டு... நேத்திக்கு தான் நெனைச்சேன். வாவ்... கல்பூ கல்பூ தான். வாடி என் செல்ல பொண்டாட்டி,'' என்று மகிழ்ந்து போனான், வாசு.
''அதெல்லாம் சரி வாசு... கோமதிக்கு கடன் என்ன ஆச்சு?''
''நாந்தான் சொன்னேனே... 'மார்ஜின்' விஷயம்... ரெடி பண்ணிட்டாளா, கோமதி?''
''எதுக்கு வாசு, மார்ஜின்?''
''வங்கி விதி அது... அன்னிக்கே சொன்னேனே கல்பனா!''
''அதான் வாசு... வங்கி ஏன் அப்படி ஒரு விதி வெச்சிருக்கு?''
''ஒரு தொகையை கடனா வாங்கி, தொழில் செய்யும்போது, உண்மையான ஈடுபாட்டோட, அக்கறையா செய்யணும், கடனை ஒழுங்கா கட்டணும்னெல்லாம் நினைக்கணும். அவனோட சொந்த பணமும் அதுல போட்டிருக்கும்போது இன்னும் பயம் வரும், கவலை வரும், வேகமும் வரும்... இல்லையா? அதுக்கு தான் இந்த, 'மார்ஜின்' என்ற, 'கான்செப்ட்' கல்பனா... சரிதானே?''
''சரிதான் வாசு,'' என்ற அவள், நிதானமாக அவனை நிமிர்ந்து பார்த்து, ''வாழ்க்கைக்கும் இந்த விதி பொருந்தும், வாசு... குழந்தை வளர்ப்பு என்பதும், ஒரு வகையில் கடன் தான், கடமை தான்... நல்லபடியா செஞ்சு முடிக்கணும் தான்... அப்பாவோட, 'மார்ஜினும்' அதுக்கு வேணும்... அப்போ தான் அந்த வளர்ப்பு முழுமையா இருக்கும்...
''அம்மாவோட அன்பும், அப்பாவோட கண்டிப்பும் இருக்கணும். நாம எல்லாருமே அப்படிதானே வளர்ந்தோம். இரக்கம், ஈரம், கருணைன்னு அம்மாகிட்ட கத்துகிட்டோம். வலிமை, நம்பிக்கை, தைரியம்ன்னு அப்பாகிட்ட கத்துகிட்டோம். ஒரு சத்தான வாழ்க்கைக்கு, ரெண்டுமே முக்கியமான தேவைகள், இல்லையா... உங்களால சரியா புரிஞ்சுக்க முடியும், வாசு!''
திகைப்புடன் அவளையே பார்த்தான்.
மெல்ல அவன் முகம் தெளிவடைந்தது. வாழ்வை கடந்து செல்கிற தோணியில் உட்கார்ந்ததை போல, ஒரு புன்னகை தோன்றியது.
''கோமதியை வரச்சொல்லு... நாம உதவலாம்,'' என்று அவன் சொன்னபோது, வாழ்வின் கோப்பை, அன்பால் நிறைந்திருப்பதை போல, அவள் மனம் நெகிழ்ந்தது.

வானதி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
18-ஜூன்-201913:32:20 IST Report Abuse
Girija மைய கருத்து 35 சதவிகிதம் வரை எடுத்துக்கொள்ளலாம் ஆனால் தானே தாங்குவது போல் ஓவர் அன்றைய ஒரு தினத்தின் சமையல் மெனுவே அதுவும் வேலை நாளில் ரொம்ப அதிகம். வீட்டில் அக்கறை கொள்ளாத ஆண்களுக்கு சரியான மெசேஜ், ஆனால் அப்படிப்பட்ட ஆண்கள் இதுபோன்ற கதைகளை படிப்பார்களா முதலில், அட்டைப்படம் சுவாரசியமாக இருந்தால் கொஞ்சம் மேய்வார்கள்
Rate this:
Share this comment
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23-ஜூன்-201905:58:24 IST Report Abuse
skv srinivasankrishnaveniசரிம்மா 98% வேலைகள் குடுமபத்தலைவிகளின் மீதுதான் கிரிஜா மேடம் உங்கள் வீட்டுலே எப்படி தெரியாது என்போல பல வீடுகளில் சரவம் தலைவிகளுக்கே என்று இருக்கு வேலைக்குப்போனாலும் போகாட்டியும் கூட (இன்னம் அதிகம் வேலைகள்) என்று இருக்கே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X