ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2019
00:00

விநாயகரின் கையில் அங்குசம், பாசம், தந்தம் ஆகிய ஆயுதங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர். ஆனால், காதல் திருமணங்களுக்கு கை கொடுக்கும் வகையில், பூவை மட்டும் கையில் ஏந்தி காட்சி தரும், விநாயகரை, கடலுார் மாவட்டம், திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் தரிசிக்கலாம். திருப்பாபுலியூர் என்றும், இவ்வூரை அழைப்பர்.
சிவனும், பார்வதியும், சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். தொடர்ந்து, சிவனே ஜெயிக்க, ஊடல் கொண்ட பார்வதி, அவரது கண்களை விளையாட்டாக மூடினாள். சூரிய, சந்திரராக கருதப்படும், சிவனின் கண்கள் மூடப்பட்டதால், உலகம் இருண்டது; உயிர்கள் சற்று நேரம் சிரமப்பட்டன. எனினும், அந்த சிரமம், அளவிட முடியாததாக இருந்தது.

இதனால், பார்வதியிடம், 'விளையாட்டு வினையாகி விட்டது. இந்த வினை தீர்க்க, நீ பூலோகம் சென்று தவமிரு. எப்போது உன் இடது கண்ணும், இடது தோளும் துடிக்கிறதோ, அன்று நான் பூலோகம் வந்து, உன்னை மணந்து கொள்வேன்...' என்றார், சிவன்.
இதன்படி, பார்வதி, பாதிரி மரங்கள் அடர்ந்த ஒரு காட்டில் தங்கினாள். சிவன் சொன்னது போல நடக்கவே, அவரைத் திருமணம் செய்து கொண்டாள். பாதிரி மரங்கள் அடர்ந்த இந்த ஊர், திருப்பாதிரிபுலியூர் எனப்பட்டது.
பிற்காலத்தில், இங்கு கோவில் எழுந்தது. சுவாமி, பாடலீஸ்வரர் என்றும், அம்பாள், பெரியநாயகி என்றும், பெயர் பெற்றனர். சிவன், பார்வதியை காண வரும்போது, ஆயிரம் சந்திர கலைகள் சூடி, பிரகாசமாக வந்தார். அவரது அழகு, அம்பாளை கவர்ந்தது. அழகான கணவனை, யாருக்கு தான் பிடிக்காது... சிவனை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என, பார்வதி, நினைத்தாள்.
இதனால், இந்த கோவிலின், பள்ளியறை பூஜையின் போது, அம்பாளே, அங்கு எழுந்தருளி விடுகிறாள். மற்ற கோவில்களில், சிவன் தான், பள்ளியறைக்கு எழுந்தருளுவார். இது ஒரு வித்தியாசமான நிகழ்வு.
திருநாவுக்கரசருக்கு, நின்ற நிலையிலுள்ள சிலையே, அனைத்து கோவில்களிலும் இருக்கும். இங்கு, அமர்ந்த நிலையில் காண்பது விசேஷம்.
இங்குள்ள கன்னி விநாயகர், ஆயுதங்கள் இல்லாமல், பாதிரி மலர் கொத்துடன் இருக்கிறார்.
காதலர்களின் பொதுவான சின்னம், பூ. மலர் கொத்து கொடுத்து, காதலை வெளிப்படுத்துவர், காதலர்கள். தன் தாய்க்கு கிடைத்தது போல, அழகிய காதல் கணவன், பக்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று, இவர் நினைக்கிறார்.
எனவே, இவரை, கன்னிப்பெண்கள் வணங்கி வரலாம். காதலர்கள், இவரை வணங்கி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்க வேண்டலாம்.
புதுச்சேரியிலிருந்து, 24 கி.மீ., விழுப்புரத்திலிருந்து, 52 கி.மீ., துாரத்தில், இவ்வூர் உள்ளது.

தி. செல்லப்பா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X