இது உங்கள் இடம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2019
00:00

முதுமைக்கு ஒரு பாடம்!
சமீபத்தில், பக்கத்து வீட்டு நண்பரின் உறவினரான, 80 வயது பெண்மணியை, அவரது வீட்டில் சந்திக்க நேரிட்டது. பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளான அவர், வெறும், நீர் ஆகாரம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்கிறார் என்பதை, ஏற்கனவே, நண்பர் மூலம் கேள்விப்பட்டுள்ளேன்.
அவரின் உடல் நலம் குறித்து விசாரிக்க, ஆயத்தமாகும்போதே, அதை பற்றியெல்லாம் விசாரிப்பதை விரும்ப மாட்டார் என்று, சைகை மூலம் தெரியப்படுத்தினார், நண்பர்.
கலகலப்பாக பேசிய அப்பெண்மணியின் ஒவ்வொரு வார்த்தையிலும், தன்னம்பிக்கை வெளிப்பட்டது. தன் பால்ய கால நினைவுகளிலிருந்தும், கல்லுாரி வாழ்க்கையிலிருந்தும் பல, 'பாசிடிவ்' விஷயங்களை, நகைச்சுவை ததும்ப எடுத்து உரைத்த விதம், அனைவரையும் கவர்ந்து, அந்த இடத்தையே உற்சாகம் தொற்றிக் கொண்டது.
'ஐ ஆம் எய்ட்டி இயர்ஸ் யங்; பரிதாபத்தை பகிரும் எவருடனும் நான் பேசுவதில்லை...' என்ற அவரின் ஆணித்தரமான பேச்சு, முதுமையை எவ்விதம் அணுக வேண்டும் என்பதற்கான பாடமாக அமைந்தது.
'முதுமையில் தோல் சுருங்கலாம்; ஆனால், மனம் சுருங்கக்கூடாது...' என்ற அவரின் அறிவுரை, முதுமையை நெருங்கிக் கொண்டிருக்கும் அனைவரும் பின்பற்ற வேண்டியது.
எஸ். ராமன், சென்னை.

கருப்பு நிறமென்றால் கேவலமா?
என் நண்பனின் மகள், பிளஸ்1 சேர்ந்து, முதல்நாள் வகுப்பிற்கு சென்றாள். கருப்பு நிறத்தில் இருக்கும் அவளை, வகுப்பு மாணவியரில் சிலர், 'அதோ பார், ரயில் இன்ஜின் வருது... இருட்டுக்கு கை, கால் முளைச்சு நடந்து வருது...' என்றெல்லாம் கிண்டலிக்க, அவள் மனம் உடைந்து போனாள்.
இதனால், 'எனக்கு, இந்த, பள்ளிக்கூடம் பிடிக்கல... வேற பள்ளியில் சேர்த்து விடுங்க...' என்று, ஒவ்வொரு நாளும் அழுது அடம் பிடித்திருக்கிறாள்.
அதற்கு, சற்றும் செவி சாய்க்காத நண்பன், 'ஏம்மா... இந்த பள்ளியில் 'சீட்' வாங்கவே எத்தனை அரும்பாடு பட்டோங்கிறது உனக்குத் தெரியும்... அப்படியிருக்க, இன்னொரு பள்ளிக்கு மாத்தறது சுலபமான வேலை இல்லையே...
'உன்னை கிண்டல் பண்ற, மாணவியரிடமும், அன்பை வெளிப்படுத்து... ஏதோ அறியாமையால் பேசறாங்கன்னு அவங்களை மன்னித்து, 'கருப்புங்கிறது, தெய்வ நிறம்... கோவில் சிலைகள் எல்லாமே கருப்பு நிறமா இருந்தாலும், அதை கையெடுத்து வணங்கிற நீங்க, என்னையும் ஏத்துக்கணுமே தவிர, தீண்டத்தகாதவள் போல பார்க்கக் கூடாது; பரிகாசமும் பண்ணக் கூடாது...'ன்னு எடுத்துச் சொல்லு...' என்று யோசனை கூறினார்.
அவளும், மாணவியரிடம் அப்படியே விளக்கம் கொடுத்து, வாயடைக்க செய்திருக்கிறாள்.
இருக்கும் இடத்திலேயே பிரச்னைகளை சமாளித்து பயணிக்க, பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
கே. ஜெகதீசன், கோவை.

துாய்மையின் அடையாளம்!
சமீபத்தில், சிறிய கிராமம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். அந்த ஊரை பார்க்க, மிக அழகாக இருந்தது. குப்பைகளை கொட்ட, ஆங்காங்கே குப்பை தொட்டி, வீட்டுக்கு வீடு கழிப்பறை மற்றும் குளியலறை என, வெகு சுத்தமாக இருந்தது.
இதுபற்றி ஊராரிடம் விசாரித்தேன்.
'முதலில், பெண் பிள்ளைகளுக்காக தான், கழிப்பறை மற்றும் குளியலறை கட்டினோம். நாளடைவில், பொது இடத்தில் அசுத்தம் செய்வது, அனைவருக்குமே அருவருப்பாக தெரிய ஆரம்பித்தது. அதனால், அரசு உதவியை எதிர்பார்க்காமல், வீட்டுக்கு வீடு, கழிப்பறை மற்றும் குளியலறைகளை ஏற்படுத்திக் கொண்டோம்.
'இவை இல்லாத ஊர்களில், பெண் எடுப்பதோ, கொடுப்பதோ கிடையாது. இந்த பெண் எடுப்பு, கொடுப்புக்காகவே, பக்கத்து ஊர்களிலெல்லாம், வீட்டுக்கு வீடு, கழிப்பறை மற்றும் குளியலறை வசதியை ஏற்படுத்தி விட்டனர்...' என்றனர்.
வளர்ந்துவிட்ட நகரங்களில் கூட, திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இவை, களையப்பட வேண்டும்.
சுற்றுப்புற துாய்மையே, நோய் நொடி இல்லாமல் வைக்கும். துாய்மைக்கும் நம் கவுரவத்துக்கும் அடையாளமாக இருக்கும் கழிப்பறையை கட்டிக்கொள்வரா!
- எம்.பி.ராமகிருஷ்ணன், புதுக்கோட்டை.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X