தந்தை சொல் மிக்க...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2019
00:00

காட்பாடிக்கு பக்கத்தில் ஒரு சிறிய கிராமம், கவசம்பட்டு. கண்ணுக்கெட்டிய துாரம் வரை வயல்கள் தான். நான்கு ஏக்கர், நன்செய், புன்செய் நிலம். மழையில்லாமல், தண்ணீருமில்லாமல் வறண்டிருந்தது, கிணறு.
வயலிலேயே, ஒரு ஓரமாக, 60 அடி நீளம், 40 அடி அகலத்திற்கு மொட்டை மாடியுடன், நவீன வசதிகளோடு, அவன் அப்பா, 'பிளான்' போட்டு கட்டிய வீடு. மொட்டை மாடியிலிருந்து, நிலங்களை பார்த்து, பெருமூச்சு விட்டான், சேகர்.

கரும்புத் தோட்டமும், வாழைத் தோப்பும், நெற்கதிர்களுமாய் வளமை கொழித்த பூமி தான். ஆனால், இரண்டு ஆண்டுகளாய், மழையில்லாமல் ஊரே வாடியிருந்தது. பெரும்பாலும், விவசாயம் தான். மொத்தம், 10 தெருக்கள் தான், அந்த ஊரில்.
இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானோர், விவசாயிகள் தான். சில கி.மீ., துாரத்திலேயே, காட்டு வெள்ளத்துடன் சுழன்று ஓடும், பாலாறு. வறட்சியும், பஞ்சமும் வரும் வரை, எல்லாம் நன்றாக தான் இருந்தது.
மழையும், ஆற்றிலிருந்து ஊற்று நீர் பெருக்கெடுக்கும் வரை விவசாயம் தான். அதில் வந்த வருமானத்தில் தான், சேகரை, பி.எஸ்சி., - பி.எட்., வரை படிக்க வைத்தார்.
நல்ல மதிப்பெண் பெற்றும், இன்ஜினியர், டாக்டர் என்று படிக்கவிடவில்லை. 'மற்ற வேலைக்கெல்லாம் போனால், நிலத்தை கவனிக்க முடியாது. வாழ்க்கை, அமைதியாக, நிறைவாக இருக்க, ஆசிரியர் வேலையே சிறந்தது...' என்று கூறி விட்டார், திட்டவட்டமாக.
பக்கத்து ஊரில் இருக்கும், அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தான், சேகர். அத்தை மகள், கங்காவை திருமணம் செய்து கொண்டான். அதிகம் படிக்கவில்லை என்றாலும், அமைதியாக குடும்பம் நடத்தத் தெரிந்தவள். 12 வயது பெண் குழந்தை, 10 வயது ஆண் குழந்தைக்கு தந்தை.
இரண்டு ஆண்டுகளாக மழையில்லாமல், கிணறுகளெல்லாம், கிரிக்கெட் மைதானமாகிப் போன பின் தான், சேகருக்கு புதிதாக ஒரு கிறுக்குப் பிடித்துக் கொண்டது.
நண்பர்கள் அனைவரும் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர். நாம் மட்டும் ஏன், 'பெயின்ட்' கூட அடிக்காத, சுற்றிலும் நாற்றமடிக்கிற பள்ளியில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம், உறுத்தியது.
நாமும் வெளிநாட்டில் போய் சம்பாதித்தால், பிள்ளைகளும், பெங்களூரு, ஊட்டி போன்ற நகரங்களில் உள்ள, 'கான்வென்ட்'டுகளில் படிக்கலாம். பிறகு, அமெரிக்கா போய் டாலர்களாக சம்பாதிக்கலாம் என்ற ஆசை, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, வெறியாகவே மாறியது.
சம்பளத்தில் கொஞ்சம் செலவிற்கு எடுத்து, மீதியை, அப்பாவிடம் கொடுத்து விடுவான். மதியம், வீட்டிற்கே வந்து சாப்பிட்டு போவான், சேகர்.
ஆனால், அவன் சம்பளத்தின் பெரும் பகுதி, கிணறு வெட்டுவதற்கும், தண்ணீர் இல்லாததால் வெடி வைத்து மேலும் ஆழப்படுத்துவதற்கும், விதைக்காகவும், ஆட்களின் கூலிக்காகவும் செலவானது. இதனால், காலப்போக்கில், நிலத்தின் மேல் வெறுப்பு வந்து விட்டது, சேகருக்கு.
பாதி நிலத்தை விற்று, பணமாக்கி, துபாய் போன்ற வெளிநாடுகளில் வேலை செய்தால், நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைத்தான். ஆனால், அப்பாவும் - அம்மாவும் அதற்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே என்று கவலைப்பட்டான்.
அன்று இரவு, குழந்தைகள் துாங்கிய பின், அவனிடம், ''இப்போதெல்லாம் ரொம்ப யோசனையாகவே இருக்கிறீர்களே... ஏன்?'' என்றாள், கங்கா.
''உன்னிடம் சொல்வதற்கென்ன... நீ தான், மாமியார் - மாமனாருக்கு ரொம்ப வேண்டப்பட்ட மருமகள் ஆயிற்றே... இரண்டு ஆண்டுகளாக மழையே இல்லை. ஏரி, கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. ஒரு மணி நேரம் மோட்டார் ஓடினால், கிணறுகளில் தரை தெரிகிறது.
''நான் ஆசிரியராக வேலை செய்து வரும் சம்பளமும், நிலத்திற்கே சரியாகி விடுகிறது... பேசாமல் பாதி நிலத்தை விற்று, எங்காவது வெளிநாடுகளில் வேலை செய்து, நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசைப்படுகிறேன்... நீ என்ன சொல்கிறாய்?'' என்றான்.
''உங்கள் அளவு படிக்காதவள், நான். ஏதாவது சொன்னால் உங்களுக்கு கோபம் வரும்,'' என்றாள், சிரித்தபடியே.
''பரவாயில்லை... உன் மனதில் உள்ளதைச் சொல்!'' என்றான், சேகர்.
''ஒரு குடும்பத் தலைவி, குடும்ப பாரம் தாங்கவில்லையென்று, வீட்டை விட்டு ஓடி விடலாமா என்று நினைப்பது போல் இருக்கிறது,'' என்றாள்.
''என்ன உளறுகிறாய்?''
''நான் சொல்வது, உளறல் என்றால், நீங்கள் சொன்னது மட்டும் என்னவாம்... ஒரே பெண், இன்றோ, நாளையோ வயதிற்கு வந்து விடுவாள். 10 வயதில், பையன். நீங்கள் படித்த அளவு ஒரு, 'டிகிரி'யாவது வாங்குவானா என்று தெரியவில்லை.
''எப்போதும், 'வீடியோ கேம்' மற்றும் மொபைல் போனில் விளையாட்டு. படிக்கிறானா, கணினியில் விளையாடுகிறானா என்று தெரியவில்லை. இரண்டும் கெட்டான் வயதில் உள்ள பிள்ளைகளுக்கு வழிகாட்ட, நல்லதை எடுத்துச் சொல்ல, வலுவான, படித்த ஆண் கூடவே இருக்க வேண்டும். அது, பெற்ற தகப்பனால் மட்டுமே முடியும்.
''நீங்கள் வந்த பிறகு தான் சாப்பிடுவோம் என்று, வாசலிற்கும், வீட்டிற்குமாக நுாறு முறை அலைந்து, காத்திருக்கும், வயதான அம்மா - அப்பா. கோடி, கோடியாய் கொடுத்தாலும், என்னால் உங்களை விட்டு பிரிந்து இருக்க முடியாது.
''கஞ்சியோ, கூழோ சாப்பிட்டு ஒன்றாக இருக்கலாம். அதுவுமில்லாமல், பெரியவர்கள் பாடுபட்டு, ஆயிரம் கனவுகளோடு சம்பாதித்த சொத்து இது; பாதுகாப்பது, நம் கடமை. அதை விற்பதற்கு நமக்கு என்ன உரிமை?'' என்றாள், மூச்சு விடாமல்.
''மழை இல்லை, விளைச்சல் இல்லை. ஒரு நாளைக்கு, ஒரு மணி நேரம் தான் தண்ணீர் எடுக்க முடிகிறது,'' என்று, முனகினான், சேகர்.
''நிலம் சம்பந்தமாக எல்லாவற்றையும், உங்கப்பாவே தனியாக பார்க்க முடியுமா... இப்போது தான் விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கே... விஷயம் தெரிந்தவர்களை கேளுங்கள்; குறைந்த தண்ணீரில் என்ன பயிர் செய்யலாம் என்று, பக்கத்து ஊரில் உள்ள விவசாய அதிகாரிகளிடம் கலந்து பேசுங்கள்.
''அதை விட்டு, சிங்கப்பூர் அழகாக இருக்கிறது, துபாய் சுத்தமாக இருக்கிறது என்கிறீர்களே... எவளோ ஒருத்தி அழகாக இருந்தால், அவள், உங்கள் அம்மா ஆகிவிடுவாளா... கருப்பாக இருந்தாலும், அழகில்லாமல் இருந்தாலும், அம்மா, அம்மா தான். ஊரும், நம்மைப் பெற்ற தாய் போல தான்.
''நம் ஊரையும், அதேபோல் சுத்தமாக வைத்துக் கொண்டால், அதைவிட அழகாக இருக்கும். என்னவோ, எனக்குத் தெரிந்ததை கூறினேன். தப்பாக இருந்தால், மன்னித்துக் கொள்ளுங்கள்,'' என்றாள், கங்கா.
''போதுமடி தாயே... நீ வேறு என்னைக் குழப்பாதே... வாயை மூடி துாங்கு,'' என்று, அவளை அடக்கினான்.
அடுத்த நாள் காலை, வாயில், 'பிரஷ்'ஷை வைத்தபடி, வயல் முழுவதும் சுற்றி வந்தான், சேகர். அது, அவன் தினசரி வழக்கம்.
அவன் கிளம்பும்போது, அவன் தந்தையும், வாயில் வேலங்குச்சியை வைத்து, இவன் கூடவே வந்தார். அப்படி வந்தால், ஏதோ பேச வருகிறார் என்று பொருள்.
பொதுவாக பேசியபடியே வந்த நிலையில், ''கங்காவோடு நேற்று இரவு என்ன வாக்குவாதம்?'' என்று கேட்டார், அப்பா.
''உங்களிடம், ஏதும் சொன்னாளா?''
''இல்லை. எப்போதும், எதற்கும் குறை சொல்ல மாட்டாள். அறைக்கு வெளியே சத்தம் கேட்டது; அதனால், கேட்டேன். உனக்கு என்ன கஷ்டம்... என்னிடம் சொல், முடிந்தால் தீர்த்து வைக்கிறேன்,'' என்றார்.
''சொன்னால் உங்கள் மனம் வருத்தப்படும்,'' என்று தயங்கினான், சேகர்.
''இதுவரையில், மனம் வருத்தப்படும்படி நீ எதுவும் சொல்லவில்லையே... நான் சொன்ன படிப்பைத்தான் படித்தாய், நான் காட்டிய பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டாய்... இந்த வயதிற்கு மேலா எனக்கு கஷ்டம் கொடுக்கப் போகிறாய்... தைரியமாக சொல்,'' என்றார்.
''ஒன்றுமில்லை... நண்பர்கள் அனைவரும் வெளிநாடு போய் வேலை செய்து, கை நிறைய சம்பாதிக்கின்றனர். அதனால், எனக்கும் அந்த ஆசை. மழையும் இல்லை, தண்ணீரும் இல்லை, பயிர் பண்ணவும் வழி இல்லை. அதான்,'' என்று இழுத்தான்.
''இப்போது தான் காலம் மாறி விட்டதே... ஒருவர் தொடர்ச்சியாக வேலை செய்தால், உழைப்பை நாம் மதிப்பதில்லை. அவருடைய மொத்த சக்தியையும் உறிஞ்சி விடுவோம். அதேபோல் தான், பூமியையும் பழி வாங்குகிறோம்.
''ஒரு அறுவடைக்குப் பின் நிலத்தை, கொஞ்ச நாள் தரிசாக போட்டு வைக்க வேண்டும். எங்கே அதெல்லாம் முறையாக செய்கிறோம்...
''நமக்கு ஆசை அதிகம். அது தான், இயற்கை நம்மை சோதிக்கிறது. அதற்காக, ஊர் விட்டு ஊர் போய், மக்களை, குழந்தைகளை விட்டு பிழைக்க வேண்டியதில்லை,'' என்றார்.
''பெரியோர், 'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்று, சொல்லவில்லையா, அப்பா.''
''ஆமாம், 'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்று தான் சொன்னாரே தவிர, எந்த பெரியோரும், 'திரவியத்தை விற்று, திரவியம் தேடு' என்று சொல்லவில்லையே. வாழ்வாதாரமான வயலை விற்றும், கிடைத்தற்கரிய அரசு வேலையை விட்டு சென்றால், மறுபடியும் அவற்றைத் தேடிக் கொள்ள முடியுமா?
''அதே பெரியவர்கள் தான், 'உள்ளூர் நஷ்டமும், வெளியூர் லாபமும் ஒன்று...' என்று கூறியிருக்கின்றனர்,'' என்றார், அப்பா.
''முடிவாக, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?''
''பேத்திக்கு, 12 வயதாகிறது. அவளை கண்ணும் கருத்துமாக கவனிக்கணும். பெண் குழந்தைகளின் நடத்தையில் தான் குடும்பத்தின் மானம், மரியாதை இருக்கிறது. பேரனுக்கு, 10 வயதாகிறது. இந்த பருவத்தில், அம்மா - அப்பா இருவரும், குழந்தைகளுடன் இருந்தால் தான், அவர்கள் வளர்ச்சி முழுமையாக இருக்கும்.
''ஆனால், உனக்கு, நிலத்தை விற்றுத்தான் பணம் வேண்டும் என்றால், அதற்கும் கையெழுத்துப் போட்டுத் தருகிறேன். ஆனால், 'எண்ணித் துணிக கருமம்...' என்பர். உன்னைப் பற்றி மட்டும் இனி நினைக்க முடியாது. மனைவி, குழந்தைகள் நலனைத்தான் முதலில் நினைக்க வேண்டும்.
''வெளிநாடு போக ஆசையிருந்தால், கோடை விடுமுறையில் குடும்பத்தோடு சுற்றுலா போய் வா... ஒரு வருஷம் அவகாசம் கொடு. நிலத்தின் மேல் கடன் வாங்கி, விவசாய அதிகாரிகளைப் பார்த்து ஆலோசனை கேட்டு, அதன்படி செய்யலாம்,'' என்றார், மகனின் தோளை அணைத்தபடி.
தனக்காக எதையும் தியாகம் செய்வார், அப்பா, என்ற எண்ணமே, சேகருக்கு, கண்ணீரை கசிய வைத்தது.
அடுத்த நாள் காலை, சீக்கிரமே தயாரானான், சேகர்.
''ஒன்பது மணிக்குத்தானே பள்ளிக்கு கிளம்புவாய்... இன்று என்ன இவ்வளவு அவசரம்?'' என்றாள், அம்மா.
''விவசாய இலாகா அதிகாரிகளைப் பார்த்து, மண்ணும், தண்ணீரும் பரிசோதனைக்கு கொடுத்து, அவர்களின் ஆலோசனை கேட்டு வரப் போகிறேன்... அப்பாவிடமும் சொல்லிடுங்க,'' என்ற சேகர், கங்காவிடம், கண்களால் விடை பெற்று, சிரித்தவாறே வீட்டை விட்டு கிளம்பினான்.

கி. பானுமதி பார்த்தசாரதி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Annamalai Subramaniyan - Chidambaram,இந்தியா
09-ஜூலை-201920:57:54 IST Report Abuse
Annamalai Subramaniyan கிராமத்தில் இப்படி ஒரு வாழ்க்கை கிடைப்பது வரம்...
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
26-ஜூன்-201917:35:09 IST Report Abuse
pattikkaattaan நான் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எங்களுக்கு பாடம் நடத்த வந்த வரலாறு புவியியல் ஆசிரியர் நினைவுக்கு வருகிறார் .. அவர் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு சுமார் 11 மணிக்குத்தான் பள்ளிக்கே வருவார் .. வகுப்புக்கு வந்ததும் என்னை எழுந்து பாடத்தை சத்தமாக படிக்கச்சொல்லி, தூங்க ஆரம்பித்து விடுவார் .. அடுத்த பாடத்திற்கான மணி அடித்ததும் , "சார் பெல் அடிச்சாச்சு " என்று எழுப்பிவிடவேண்டும் .. அப்படியே அரைதூக்கத்தில் எழுந்து செல்லுவார் .. இரண்டு வேலையை ஒன்றாக செய்தால் இப்படித்தான் .. பாதிக்கப்படுவது மாணவர்களே ..
Rate this:
Cancel
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
26-ஜூன்-201901:59:25 IST Report Abuse
M Selvaraaj Prabu மிகவும் அருமையான கதை. நிறைய யோசிக்க வைக்கும் கருத்துக்கள். //ஒரு குடும்பத் தலைவி, குடும்ப பாரம் தாங்கவில்லையென்று, வீட்டை விட்டு ஓடி விடலாமா என்று நினைப்பது போல் இருக்கிறது// //அதை விட்டு, சிங்கப்பூர் அழகாக இருக்கிறது, துபாய் சுத்தமாக இருக்கிறது என்கிறீர்களே... எவளோ ஒருத்தி அழகாக இருந்தால், அவள், உங்கள் அம்மா ஆகிவிடுவாளா... கருப்பாக இருந்தாலும், அழகில்லாமல் இருந்தாலும், அம்மா, அம்மா தான். ஊரும், நம்மைப் பெற்ற தாய் போல தான்// //ஒருவர் தொடர்ச்சியாக வேலை செய்தால், உழைப்பை நாம் மதிப்பதில்லை. அவருடைய மொத்த சக்தியையும் உறிஞ்சி விடுவோம். அதேபோல் தான், பூமியையும் பழி வாங்குகிறோம். ''ஒரு அறுவடைக்குப் பின் நிலத்தை, கொஞ்ச நாள் தரிசாக போட்டு வைக்க வேண்டும். எங்கே அதெல்லாம் முறையாக செய்கிறோம்// //'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்று தான் சொன்னாரே தவிர, எந்த பெரியோரும், 'திரவியத்தை விற்று, திரவியம் தேடு' என்று சொல்லவில்லை// //பெரியவர்கள் பாடுபட்டு, ஆயிரம் கனவுகளோடு சம்பாதித்த சொத்து இது பாதுகாப்பது, நம் கடமை. அதை விற்பதற்கு நமக்கு என்ன உரிமை?// //'எண்ணித் துணிக கருமம்...' என்பர். // //உன்னைப் பற்றி மட்டும் இனி நினைக்க முடியாது. மனைவி, குழந்தைகள் நலனைத்தான் முதலில் நினைக்க வேண்டும்.// //''வெளிநாடு போக ஆசையிருந்தால், கோடை விடுமுறையில் குடும்பத்தோடு சுற்றுலா போய் வா..// அனைவரும் படிக்க வேண்டிய கதை. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X