அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2019
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 27 வயது ஆண்; எனக்கு ஒரு தங்கை. சொந்த ஊரில் அப்பா, சினிமா தியேட்டரில் ஆபரேட்டராக பணிபுரிந்தார். அம்மா இல்லத்தரசி. சிறு வயது முதலே, புதிய படம் வெளியானால், முதல் நாள், முதல் காட்சிக்கே என்னை அழைத்துச் செல்வார், அப்பா.
சினிமா முடிந்ததும், அதிலுள்ள நிறை, குறைகளை நானும், அப்பாவும் அலசி ஆராய்வோம். இதில் ஆரம்பித்தது தான், திரைத்துறையில் பணிபுரியும் ஆர்வம்.
பள்ளி இறுதி வகுப்பு முடித்த பின், கேமரா தொடர்பான தொழில்நுட்ப கலைஞனாக வேண்டும் என்பதே, என் லட்சியமானது.
சினிமா சம்பந்தப்பட்ட படிப்பில் ஆர்வமாக இருந்த என்னை, குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி, பொறியியல் கல்லுாரியில் சேர்த்தனர். விருப்பம் இல்லாமலேயே, படிப்பை முடிதேன். இதற்கிடையில், திரைப்பட கேமராவில் படப்பிடிப்பு, படத்தொகுப்பு மற்றும் கார்ட்டூன் தயாரிப்பு போன்ற, 'டிப்ளமோ'வும் முடித்தேன்.
அதன்பின், ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிய வற்புறுத்தினர். நேர்முக தேர்வில் தேர்வாகவில்லை. இச்சமயத்தில், அப்பா மரணமடைந்து விட்டார்.
குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பும், தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டியும் இருந்ததால், தனியார் நிறுவனத்தில், சாதாரண வேலையில் சேர்ந்துள்ளேன்.
'என் கனவு கலைந்து விட்டதே...' என்று, ஒவ்வொரு நாளும் மனதிற்குள் அழுது கொண்டிருக்கிறேன். இப்போதும், என் சினிமா லட்சியம் அணைந்து விடவில்லை. அதை பற்றி நிறைய நுணுக்கங்களை படித்தும், கேட்டும் அறிவை வளர்த்து வருகிறேன்.
பெண் கொடுத்து, பெண் எடுக்கும் முடிவில், எனக்கும், தங்கைக்கும் திருமணம் செய்ய, அம்மாவும், தாய் மாமாவும் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதில், எனக்கு துளியும் விருப்பமில்லை.
விருப்பப்பட்ட துறையில் பணியாற்ற முடியாத ஏக்கம், வாழ்நாள் முழுவதும் துரத்துமே என்று பயப்படுகிறேன்.
இச்சிக்கலை எப்படி சமாளிப்பது, நல்வழி காட்டுங்கள் அம்மா.
இப்படிக்கு,
உங்கள் மகன்.


அன்பு மகனுக்கு —
சினிமா துறையில் பிரவேசிப்பதும், வெற்றி பெறுவதும், மாய மானை துரத்தி பிடிப்பது போன்றது; கானல் நீரில் துாண்டில் போட்டு, திமிங்கலம் பிடிப்பதற்கு சமமானது. சினிமா என்ற வன தேவதை, யாரை பார்த்து குமுறுவாள், யாரை எட்டி உதைத்து தலைகீழாய் சிதற்றுவாள் என்பது, யாருக்கும் புரியாத புதிர்.
சினிமா, ஒரு மெகா சூதாட்டம். சூதாடும் லட்சக்கணக்கானோரில், ஒற்றைப்படையில், ஓரிருவர் தான் ஜெயிக்கின்றனர். சினிமாவும், அரசியலும் பரமபத விளையாட்டு போல. எப்போது பாம்பு கடிக்கும், எப்போது ஏணி உச்சத்திற்கு ஏற்றும் என்பது, யாருக்கும் விடை தெரியாத விடுகதை.
எனக்கு தெரிந்து, லட்சக்கணக்கான இளைஞர்கள், பசித்த வயிற்றுடன், இரவல் ஆடையுடன், சென்னையில், கோடம்பாக்கத்தையும், சாலிகிராமத்தையும், வடபழனியையும் சுற்றிச்சுற்றி, 200 - 300 ரூபாய்க்கு, 'டிவி' தொடர்களுக்கு வசனம் எழுதி தருகின்றனர்.
மேலும், 20 வயதில் ஊரை விட்டு ஓடி வந்து, 45 வயதிலும் வாய்ப்பு கிடைக்காமல், கிழட்டு பிரம்மசாரிகளாய் ஆயிரக்கணக்கானோர் அவதியுறுகின்றனர். பெற்ற, தாய் - தகப்பன் மரணத்திற்கு கூட, சொந்த ஊர் செல்லாமல், சென்னையில் தங்கி விடுகிற அபாக்கியவான்கள், ஆயிரம்.
சினிமா என்ற புதைசேற்றில் சிக்கி, வெளியில் வர முடியாமல், அதிலேயே சமாதி ஆகிற, தமிழக இளைஞர்களில் ஒருவராக ஆகிவிடாதே.
வேலையில் இருப்பது ஆறுதலான விஷயம். பொறியியல் சார்ந்த, நல்ல சம்பளத்துடன் கூடிய பணிக்கு முயற்சி செய். அப்பாவின் மரணத்திற்கு பின், குடும்பத்தின் தலைவன், நீ தான். நல்ல வரன் பார்த்து, தங்கைக்கு திருமணம் செய்து வை. தங்கைக்கு திருமணம் செய்து வைத்த ஒரு ஆண்டில், வேலைக்கு செல்லும் பெண்ணாய் பார்த்து திருமணம் செய்து கொள்.
சினிமா ஆர்வமுள்ள, ஆனால், வேலைக்கு சென்று கொண்டிருக்கும் நண்பர்களை, ஒரு குழுவாய் சேர். தமிழில் பிரபலமான எழுத்தாளர்களின் பட்டியல் தயாரி. ஒவ்வொரு எழுத்தாளரின் சிறுகதைகளை வாசித்து, ஐந்து சிறுகதைகளை தேர்ந்தெடு. சிறுகதை எழுத்தாளர்களை சந்தித்து, ஒரு தொகை கொடுத்து, கதைகளின் உரிமைகளை எழுத்துப்பூர்வமாக பெறு.
நண்பர்களுடன் பணம் போட்டு, ஆறு மாதத்திற்கு ஒரு குறும்படம் எடுத்து, சர்வதேச திரைப்பட விழா போட்டிகளுக்கு மற்றும் 'யூ டியூபில்' அனுப்புங்கள். முதல் குறும்படத்திலேயே, உங்களுக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கலாம், கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தொடர்ந்து செலவுகளை பகிர்ந்து, குறும்படங்களை எடுத்து வெளியிடுங்கள்.
உங்களது குறும் படங்களை பார்த்து, சினிமா வாய்ப்பு கிடைக்கலாம். அப்படி கிடைக்காவிட்டாலும், குறும்படங்கள் எடுத்து, சினிமா ஆசையை தீர்த்துக் கொண்டதாக சந்தோஷப்படு. அதன்பின், ஐந்து ஆண்டுகள், குறும்படங்கள் எடுக்காமல், குடும்பத்தை கவனி. ஐந்து ஆண்டுக்கு பின், மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்து, குறும்படங்கள் எடு.
சினிமா வாய்ப்பே வரவில்லை என்றால் கூட, 60 வயதிற்குள், 50 குறும்படங்களை எடுத்து சாதனை புரியலாம். சிறந்த குறும்பட இயக்குனர் என்று, 'ஆஸ்கர்' விருது பெற கூட, உனக்கு வாய்ப்பிருக்கிறது.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X