முதுமை உனக்கு முடிவுரையை எழுதுவதற்குள்...
எழுந்து வா இளைஞனே
நான் உனக்கு வழி காட்டுகிறேன்...
உன்னால் எழ முடியவில்லையா, இரு
உன்னை என் தோளில் சுமக்கிறேன்!
கீதையை சொல்வதால் யாரும்
கண்ணனாக முடியாது!
சிலுவையை சுமப்பதால் யாரும்
இயேசுவாக முடியாது!
உன்னை நான் சுமப்பதால் - ஒரு
பெண்ணின் மாங்கல்யம் நிலைக்கட்டும்!
நீ மட்டும் முடிவெடு,
'இனி குடிக்க மாட்டேன்' என்று
உன் மீது விழும் எச்சங்கள் - நாளை
நீ தொடப் போகும் உச்சங்கள்!
வேலை இல்லை எனும்
கோஷங்கள்
அரசியல்வாதிகளின் காதில்
தங்களை துதிக்கும்
வேதமாக ஒலிக்கிறது!
எழுதப் பழகு, கவிதைகள் தவழும்
பேசிப் பார், மேடைகள் வரவேற்கும்
நடித்துப் பார், நவரசங்கள் ததும்பும்
உழைத்துப் பார், வேர்வை சுகமாகும்!
வரைந்து பார், ஓவியங்கள் உயிர் பெறும்
செதுக்கிப் பார், சிலைகள் நடனமிடும்
சிந்தித்துப் பார், வானம் வசப்படும்
கொடுத்துப் பார், நெஞ்சம் நிறையும்!
கசப்பையே தினமும் மென்றால், இனிப்பாகும்
வேதனைகளை தாங்கினால், வெற்றி நிச்சயம்!
வெயிலில் கைவீசி, வீதியில் நடந்து பார்
சர்க்கரை நோயும் தலைதெறிக்க ஓடும்!
இளைஞனே...
முதுமை உனக்கு
முடிவுரை எழுதுவதற்குள்
தன்னம்பிக்கையுடன் எழுந்து நட
தமிழகமே தலை நிமிரும்!
- பாரதி சேகர், சென்னை.