ஒதவாக்கரை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2019
00:00

நெஞ்சை ஏதோ அழுத்துவது போல் இருந்தது, பரசு மாமாவிற்கு. டாக்டர் சொன்னதை, அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
எப்படி முடியும், ஒரு நாளா இரண்டு நாளா... 45 ஆண்டுகள், காமுவுடன் குடும்பம் நடத்தியது எப்பேர்ப்பட்ட சுகானுபவம் என்பது, அவருக்கு தான் தெரியும்.
'குறையொன்றும் இல்லை...' பாடல், மொபைலில் சிணுங்கியது; பக்கத்து வீட்டு, ரகு பேசினார்.
''ஹலோ மாமா... நான், ரகு பேசறேன்... மாமி, எப்படி இருக்கா... டாக்டர், என்ன சொல்றார்.''

''ரகு... நான் என்னத்தை சொல்வேன். டாக்டர், 'பிப்டி பிப்டி'ங்கறார்... பயமா இருக்கு. இப்ப தான், அமெரிக்காவில் உள்ள, மகன் சுந்தரிடம் போன் பண்ணி சொன்னேன்,'' என்றார்.
''வாய்க்கு வாய், 'நீ, என் பிள்ளை மாதிரி...'ன்னு சொல்வா... நல்லபடியா ஆத்துக்கு திரும்பிடுவா, மாமி. கவலைப்படாதீங்கோ...
''மாமா... இன்னும் இரண்டு நாளிலே, என் பொண்ணுக்கு கல்யாணம் வர்றது இல்லையா... இன்னிக்கு நாள் நன்னா இருக்குன்னு, வீட்டு வாசல்ல, வாழை மரம் கட்டச் சொல்லியிருக்கேன்... எல்லாம் உங்க மாதிரி, பெரியவா ஆசிர்வாதத்துலே எந்த தடங்கலும் இல்லாம நன்னா நடக்கணும்,'' என்றான், ரகு.
''எந்தத் தடங்கலும் வராது... ஒம் பொண்ணு கல்யாணம், ஜாம் ஜாம்ன்னு நடக்கும்... கவலைப்படாதே,'' என்றார்.
மண்டைக்குள் பெரிய, 'மிஷினே' ஓட ஆரம்பித்தது, பரசு மாமாவிற்கு. காமு பிழைத்து விட்டால் பரவாயில்லை; கவலையில்லாமல் வீட்டிற்கு போகலாம். ஆனால், டாக்டர் சொன்ன, 50 சதவிகிதம் வேறு மாதிரி இருந்தால்...
வாழை மரம் கட்டி, பந்தக்கால் முகூர்த்தம் பண்ணின வீட்டிற்கு எப்படி போக முடியும்... அதுவும், கல்யாண காரியங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில்...
மாமாவிற்கு இள வயது ஞாபகம், மனக்கண் முன், சினிமா போல ஓடியது. வீட்டிற்கு மட்டுமல்ல, ஊருக்கே உபகாரி...
'காமு மாமி...' என்று கூப்பிட்ட குரலுக்கு, ஓடி ஓடி ஒத்தாசை செய்பவள்... நாக்கிற்கு ருசியாக, வித விதமாய் சமைப்பதிலிருந்து, உறவுகளை அன்பாக அரவணைத்து, குடும்பத்தில் குதுாகலத்தை காத்து வந்ததில், அவளை மிஞ்ச இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும்.
வாசலில் நிழல் ஆடியது.
''யாருப்பா?''
''நான் தான்... சீமாச்சு. மாமியை, ஆஸ்பத்திரியில சேர்த்திருப்பதா, ரகு மாமா சொன்னார். அதான் பாத்துட்டுப் போலாம்ன்னு வந்தேன். மாமி, எங்கே படுக்கையில காணும்,'' என்றான்.
''இப்பதான்பா, 'டயாலிசிஸ்' பண்ணணும்ன்னு அழைச்சுட்டு போனா... ரெண்டு மணி நேரம் ஆகும்ன்னு சொன்னா,'' என்றவர், அவனிடம், ஆதியோடு அந்தமாக எல்லா கதையையும் கூறினார்.
''மாமா... ஏதாவது ஆகாரம் சாப்பிட்டேளா... காப்பியாவது குடிச்சேளா?''
''மாமியை தனியா விட்டுட்டுப் போக முடியலே... அதனால, காபி கூட குடிக்கலே,'' என்றார்.
''மாமா... நான் இருக்கும்போது, ஏன் அனாவசியமா கவலைப்படறேள்... உங்க பிள்ளை மாதிரி தான் நான்... என்னோட வாங்கோ, 'கேன்டீனு'க்குப் போய் ஏதாவது ஆகாரம் பண்ணிட்டு வரலாம்... எத்தனை நாழி வெறும் வயத்தோட உக்காந்திருப்பேள்?''
சீமாச்சுவை கொஞ்ச நாளாக தான் தெரியும், பரசு மாமாவிற்கு. புது வீட்டிற்கு குடித்தனம் வந்த பிறகு தான் அறிமுகம். வாரந்தோறும், அடுக்குமாடி குடியிருப்புக்கு வருவான். வேண்டாத, 'பிளாஸ்டிக்' சாமான்களை, மீன்பாடி வண்டியில் எடுத்துப் போவான்.
அங்குள்ள, 130 குடியிருப்பில், அவரவர்களுக்கு, குப்பை கழிந்ததே என்று சந்தோஷம். எடுத்துப் போகும் பொருட்களுக்கு, கணக்கிட்டு பணத்தை கொடுத்து விடுவான்.
அப்படித்தான் அவன் அறிமுகம் உண்டானது. ஆனால், மகன் சுந்தருக்கு, எப்போதுமே, சீமாச்சுவை பிடிக்காது... அவனுக்கு, 'ஒதவாக்கரை' என்று திருநாமம் வைத்தான். அந்தப் பெயராலேயே கூப்பிடுவான். அதனால், குடியிருப்பில் அவனை, ஒதவாக்கரை என்றே குறிப்பிடுவதும் வழக்கமாயிற்று.
''மாமா... இட்லி சாப்பிடறேளா... வடை சொல்லட்டுமா?''
''சொல்லுப்பா... இருக்கிற வரைக்கும் வயிற்றுப் பாட்டையும் பாக்க வேண்டியிருக்கே... வயசாயிட்டாலும் நாக்கும் கேக்கறதே... ஆனா, காமுவை விட்டுட்டு நான் வக்கணையா சாப்பிடறேன்... அதான், நன்னா இல்லை,'' என்றார்.
''அட, என்ன மாமா... நீங்க, வயித்துக்கு ஒழுங்கா சாப்பிட்டா தான், மாமி சந்தோஷப்படுவா,'' என்றான்.
''அண்ணே... இரண்டு, 'பிளேட்' இட்லி, வடை, தட்டு மேலே, பிளாஸ்டிக் பேப்பர் போடாம, வாழை இலையில வெச்சு குடுங்க,'' என்றான்.
''சரி, மாமா... உங்க பிள்ளை கிளம்பிட்டாரா... தெரியுமா?''
''கிளம்பிட்டான். ஆனால், வர்றத்துக்கு, ரெண்டு நாள் ஆகுமாம். அதற்குள் ஏதாவது ஆயிட்டா, சொல்லவே கஷ்டமா இருக்குப்பா... பாடியை, 'எம்பார்ம்' பண்ணி வைக்கச் சொல்லி இருக்கான்... எனக்கென்னமோ அந்த மாதிரி செய்யறதில அவ்வளவு இஷ்டம் இல்லப்பா...
''உடம்பில இருக்கிற உறுப்புகள், ரத்தம் எல்லாத்தையும் வெளியிலே எடுத்துட்டு, ரசாயனத்தை உள்ளே செலுத்தி, சின்னாபின்னமாக்கறது எனக்கு சரியா படலே... ஆனா, வீட்டுக்கு எடுத்து போற சூழ்நிலையும் அங்க இல்ல... கையில பணம் இருந்து என்ன பிரயோசனம் சொல்லு,'' என்றார்.
இட்லி - வடை வந்தது.
''என்னமோ, சூடா வாய்க்கு நன்னா இருக்கு... நன்னா இருடாப்பா,'' என்றார்.
இருவரும் காபியையும் குடித்து, கிளம்பினர்.
அறைக்கு வந்த பின், மவுனத்தை உடைத்தார், மாமா.
''சீமாச்சு... தப்பா எடுத்துக்காதே... தினமும் வேண்டாத பல சாமான்களையும் எல்லா வீட்டிலேர்ந்தும் எடுத்துண்டு போறியே, என்ன பண்ணுவ... விலைக்குப் போட்டுடுவியா,'' என்றார்.
''ஏதோ, அந்த காலத்துல, எங்க அப்பா கட்டி வச்சுட்டுப் போன, பழைய வீடு ஒண்ணு இருக்கு... பிளாஸ்டிக் சாமான்களை, வீட்டுக்கு முன்னாடி இருக்கிற இடத்துல போட்டு வைப்பேன்... ஒரு விஷயம் தெரியுமா மாமா...
''உலகத்துல, ஒரு நிமிஷத்துக்கு, 10 லட்சம், பிளாஸ்டிக் பைகளும், தண்ணீர் பாட்டிலும், உபயோகப்படுத்தறோம்... 'ஜூஸ்' குடிக்கிறோமே, 'ஸ்ட்ரா' இதெல்லாம், 500 ஆண்டானாலும் மக்கிப் போகாது... பூமியில், 30 ஆயிரம் அடிக்கு கீழே கூட, பிளாஸ்டிக் காணப்படுகிறதாம்...
''பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனம், நம்ப ரத்தத்தில் கலக்கிறதால, பலவித நோய் வர்றது. எங்க அப்பா, புற்றுநோய் வந்து தானே செத்து போனார்... அதுலேருந்து, முடிஞ்ச வரைக்கும் பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்துறது இல்லை; உபயோகப் படுத்தறவா கிட்டேயும் சொல்லி வரேன்...
''பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்யற இடத்திற்கு அனுப்பி வைப்பேன்... உங்களை மாதிரி பெரியவா சொல்ற வேலையைச் செய்யறேன்... ஏதோ, வரும்படி வர்றது... கஞ்சி சாப்பிட போறும் மாமா,'' என்றான்.
''உன் ஒருத்தனால உலகத்தையே மாத்திட முடியும்ன்னு நினைக்கிறியா?''
''அப்படி நினைக்காதீங்கோ... நான் உங்ககிட்ட சொன்னதை, நீங்க நாலு பேருகிட்ட சொல்வீங்க... அவங்களுக்கு தெரிஞ்ச நாலு பேர்கிட்ட பரவும்... சீக்கிரம் விடிவு காலம் வரும் மாமா,'' என்றான்.
அதற்குள், ''டாக்டர், உங்களை கூப்பிடறாரு,'' என்றாள், நர்ஸ்.
சீமாச்சுவையும் கூடவே அழைத்து போனார், பரசு மாமா.
''மிஸ்டர் பரசுராமன்... மனச கல்லாக்கிக்கங்க... உங்க மனைவியின், 'பல்ஸ்' இறங்கிக்கிட்டே வருது... கொஞ்ச நேரத்துல எல்லாமே அடங்கிடும்... சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லிடுங்க.''
மாமாவின் கண்கள் கலங்கின. துக்கம் தொண்டையை அடைத்தது. கேட்டுக் கொண்டு இருக்கும்போதே, 'மானிட்டரில், கிராப் கோடு' நேராக விழுந்தது.
எல்லாமே முடிந்து விட்டது. நிரந்தரமாக பூவுலகைத் துறந்தாள், காமு. இனி, அடுத்த நடவடிக்கை என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.
அறையில் இருப்பதை, 'பேக்' செய்த சீமாச்சு, 'பிரீசர்' பெட்டிக்கு போன் செய்து, வரவேண்டிய இடத்தைக் குறிப்பிட்டான்.
கணக்கு வழக்கைப் பார்த்து, தொகையை கட்டினார், மாமா.
ஆம்புலன்ஸ் வந்து நின்றது.
'எல்லாம் சரி... எங்கே போவது... இரண்டு நாள், என் பிள்ளை வரும் வரை காபந்து பண்ணணுமேடா... பகவானே, இது என்ன சோதனை...' புலம்பினார், பரசு மாமா.
ஆம்புலன்சில் காமு மாமி உடலை ஏற்றினர். பரசு மாமாவை, ஒரு கையால் பிடித்துக் கொண்ட சீமாச்சு, மற்றொரு கையில் சாமான்களை துாக்கிக் கொண்டான்.
''நம்ம வீடு இருக்கும்போது, எதுக்கு மாமா கவலைப்படறீங்க... நானும் உங்களுக்கு ஒரு பிள்ளை மாதிரி தான்... உங்க பிள்ளை, சுந்தர் கையில் பொறுப்பை ஒப்படைக்கிற வரைக்கும், நான் இருக்கேன், கவலைப்படாதீங்கோ...''
சிறிய ஓட்டு வீடு, முன்புறம் இடம், தாராளமாகவே இருந்தது. ஒரு ஓரமாக உடைந்த, பிளாஸ்டிக் பொருட்கள், சாதாரண கயிற்றுக் கட்டில்.
ஆம்புலன்சில் இருந்து, காமு மாமி உடலை இறக்கி, 'பிரீசர்' பெட்டிக்குள் கிடத்தினர். அந்த நேரத்தில், பணம் உதவவில்லை; மனிதநேயம் மட்டுமே உதவியது.
நாளை, ஊரிலிருந்து பெண்டாட்டியோடு வந்து இறங்குவான், மகன். 'ஒய் டாட்... இன் திஸ் ஏரியா?' என்று கேட்பான்; மருமகள் முகத்தை சுளிப்பாள்.
இருக்கட்டுமே, ஒதவாக்கரை என்று பேசியவர்களுக்கு, அவனுடைய மனித நேயம் புரியப்போவது இல்லை.
வீட்டிற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே அல்லவா சேவை செய்கிறான், அவன். பிரதி உபகாரம் எதிர்பார்க்காமல் உதவும், சீமாச்சுவிற்கு, என்ன பிரதி உபகாரம் செய்ய முடியும்!
மகன், மருமகள் இருவரும் வந்தனர்.
காமு மாமிக்கு, இரண்டு நாள் காரியங்கள் செய்து, ஒருவழியாக கரையேற்றினர்.
''அப்பா... அடுத்து என்ன செய்றதா உத்தேசம்... 13 நாளும் இந்த ஒதவாக்கரையோடு தான் தங்கப் போறீங்களா எங்களால முடியாது,'' என்றான், சுந்தர்.
வீட்டு சாவியை, சுந்தரிடம் கொடுத்தார்.
''பதிமூணு நாள் காரியம் முடியற வரைக்கும் தான், நாம ஒண்ணா இருக்க முடியும்... அதுக்கப்புறம் நீயும், உன் பெண்டாட்டியும் கிளம்பிடுவேள்... மத்த காரியங்களை வருஷாப்திகத்தோட சேர்த்து செய்யலாம்னுட்ட... என் கதி... அதனால, இனிமே, சீமாச்சு தான், என்னோட இருப்பான்...
''அவன், அந்த வீட்டுக்கு வரலைன்னா, வீட்டை வாடகைக்கு விட்டுட்டு, ஓய்வூதிய பணத்த அவன்கிட்ட குடுத்துட்டு, அவனோட இருக்க போறேன்,'' என்றார்.
''என்னப்பா சொல்றீங்க... போயும் போயும், இந்த, ஒதவாக்கரை, சீமாச்சு கூடவா,'' என்றான்.
''வாயை மூடு... இன்னொரு தடவை அந்த வார்த்தைய சொல்லாதே... அவன், ஒதவாக்கரை இல்ல; உபகாரி, பரோபகாரி... வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது செய்யறான்... அவனுக்கு இருக்கிற நல்ல மனசுல கால்வாசி கூட நமக்கு இல்லை... அவன் உபகாரம் பண்ணலைன்னா உங்கம்மா பிரேதம், நாறிப் போயிருக்கும். இது தான் என் முடிவு,'' என்றார்.
சுந்தரும், அவன் மனைவியும், பரசு மாமாவை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

- மாலதி சந்திரசேகரன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Sekar - mumbai ,இந்தியா
25-ஜூன்-201919:40:38 IST Report Abuse
Ram Sekar நல்ல கதை..
Rate this:
Cancel
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
24-ஜூன்-201919:26:53 IST Report Abuse
Vasudevan Srinivasan நல்ல கருத்துள்ள கதை சீமாச்சு உதவாக்கரை அல்ல உதவும் கரம்.. இப்படிப்பட்ட நல்ல கருத்தை ஒரு அரைப்பக்க கதையில் அழுத்தமாய் சொல்லியிருப்பது பெருமகிழ்ச்சி..
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23-ஜூன்-201904:49:07 IST Report Abuse
 nicolethomson அருமை அருமை , இந்த பிளாஸ்டிக் வேண்டாம் என்று சொல்லும் உலகம் இன்னமும் அந்த பிளாஸ்டிக் இல்லாமல் இயங்க முடிவதில்லை , சீமாச்சு போன்றொரு இருப்பதினால் இன்னமும் நம்பிக்கை விட்டுப்போவதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X