இந்தியாவில் 3ஜி பரவலாகி அனைத்து மக்களையும் சென்றடைய இருக்கிறது. அநேகமாக வரும் தீபாவளியை மக்கள் இந்த குதூகலத்துடனும் கொண்டாடும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளவும், ஒருவரையொருவர் திரையில் பார்த்து நலம் விசாரிக்கவும், விரைவான இன்டர்நெட் அனுபவத்தினைத் தரவும், இனி 3ஜி நம் கரங்களில் தவழும்.
எனவே இனி நீங்கள் புதிய போன் ஒன்றை வாங்குவதாக இருந்தால், அது 3ஜி வசதியினை எந்த வகையில் தரும் என்பதனைச் சோதனை செய்தே வாங்கலாம். 3ஜி ஏலம் முடிந்த நிலையில், 3ஜி போன்களின் விலை வேகமாகக் குறைந்து வருகிறது. நிறுவனங்கள் உறுதி செய்யும் வசதிகளும் அதிகரித்து வருகின்றன.
இந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் அண்மையில் ஸ்டார் நானோ 3ஜி எஸ் 3370 என்ற மாடலை விற்பனைக்கு வெளியிட்டது. ஓரங்களில் அழகான வளைவுகளுடன், 2.6 அங்குல அகலத்தில் வண்ணத்திரையுடன் இந்த போன் தோற்றத்தில் அசத்துகிறது. இதில் டச்விஸ் 2 திரை கிடைக்கிறது. கார்பி வரிசை போன்களுக்கான 4 பேஜ் மெனு தரப்பட்டுள்ளது. கூகுள் டாக்,பால்ரிங்கோ சேட் (Palringo Chat) ஆகிய வசதிகள் பதிந்து தரப்படுகின்றன. மை ஸ்பேஸ், பேஸ்புக் மற்றும் யு–ட்யூப் தளங்களுக்கு நேரடி இணைப்பு உள்ளது. இதில் தரப்பட்டுள்ள 1.3 மெகா பிக்ஸெல் கேமராவில் சிறப்பாக எதுவும் இல்லை என்றாலும், போனின் விலைக்கு இது சரியாகவே தரப்பட்டுள்ளது. போனுடன் 2 ஜிபி மெமரி கார்ட் தரப்படுகிறது. 16 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தும் வசதியுடன் எஸ்.டி. கார்ட் போர்ட் உள்ளது. மைக்ரோசாப்ட் ஆக்டிவ் சிங்க், கூகுள் புஷ், சிங்க் காலண்டர் ஆகிய வசதிகளும் தரப்பட்டுள்ளன.
பட்ஜெட் விலையில் நவீன வசதிகளுடன் கூடிய 3ஜி போன் வாங்க வேண்டும் என எண்ணுபவர்கள் இந்த போனைப் பற்றியும் கருதலாம். இதன் குறியீட்டு விலை ரூ.7,320.