ஆறுதல்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2019
00:00

அம்மா, மிகவும் பரபரப்பாகவும், பதட்டமாகவும் இருப்பதாக அருளுக்கு பட்டது. மெதுவாக அவரிடம் வந்தவன், ''அம்மா... என்ன விஷயம்... ரொம்ப பதட்டமா இருக்கியே,'' என்றான்.
கேள்வியை முடிக்க விடாமல், ''நீ, கல்லுாரிக்கு கிளம்பு, 'கேம்பஸ் இன்டர்வியூ' இருக்குன்னு சொன்னியே, அப்படியே, மலரையும் பள்ளியில் விட்டுட்டு போ,'' என்று கூறி, அவசரமாக சமையலறைக்கு சென்றாள்.
''மலரு, வா போகலாம் நேரமாச்சு,'' என்ற அருளின் குரல் கேட்டு, பிளஸ் 2 படிக்கும் தங்கை, மலர் வந்தாள்.
''அம்மா... போயிட்டு வர்றோம்,'' என்று கூறி, வண்டியை கிளப்பினான், அருள்.
''அண்ணா... காலைல, மருத்துவமனையில் இருந்து பேசினாங்க. அப்போலேர்ந்து, ரொம்ப பதட்டமா இருக்காங்க, அம்மா. தொலைபேசி அழைப்பை, நான் தான் எடுத்தேன், அம்மா பேரை சொல்லி கேட்டாங்க,'' என்றாள், மலர்.
பள்ளியில், மலரை இறக்கி விட்டு, கல்லுாரிக்கு விரைந்தான், அருள்.
கல்லுாரியில் இன்று, ஒரு பெரிய கம்பெனியின், 'கேம்பஸ் இன்டர்வியூ' நடக்கிறது.
'வேலை கிடைச்சா, நமக்கு விடிஞ்சுடும். தையல் மிஷினோட மிஷினா தேஞ்ச அம்மாவுக்கு, முதல்ல விடுதலை கொடுக்கணும்; உக்கார வச்சு சோறு போடணும். முதல் மாச சம்பளம் வந்த உடனே, குலதெய்வம், அய்யனாருக்கு, பொங்கல் வச்சு, பூஜை போடணும். மலருக்கு, டிரஸ், அம்மாவுக்கு நல்ல புடவைகள்...' அருளுக்குள் கற்பனை குதிரை, மிக வேகமாக ஓட ஆரம்பித்தது.
மாலை, கல்லுாரியில் இருந்து வந்தவன், வீடு அமைதியாக இருப்பதை கண்டு, நிம்மதியாக உணர்ந்தான். அருள் உள்ளே வந்ததைப் பார்த்ததும், காபி கலந்து வந்தாள், அம்மா.
காபி குடித்தபடியே, அம்மாவின் முகத்தை பார்த்தான். வழக்கத்தை விட மிக அமைதியாக இருப்பது போல் பட்டது.
''சொல்லுப்பா,'' என்ற அம்மாவின் குரல், அவனை கலைத்து, நிகழ் காலத்துக்கு அழைத்து வந்தது.
''முதல் சுற்று, 'இன்டர்வியூ' நல்லா போச்சு; நாளைக்கு, 'பைனல்' நடக்குது,'' என, மனம் நிறைய சந்தோஷத்துடன் சொன்னான்.
அம்மாவின் கண் கலங்கியது, துடைத்து கொண்டாள்.
''மலருக்கு, நாளை மறுநாள், பரீட்சை ஆரம்பிக்குது. அவளுக்கு ஏதாவது உதவி வேணும்னா பண்ணு,'' என்றவள், ''எதை பத்தியும் கவலைப்படாமல், 'இன்டர்வியூ' பண்ணு... இந்தாம்மா, மலரு, உனக்கும் சேர்த்து தான் சொல்றேன்... உன் கவனம் பாடத்துலயும், பரீட்சையிலும் மட்டும் இருக்கட்டும். சரி... நான் போய், ராத்திரிக்கு, இட்லி ஊத்தி வைக்கிறேன்,'' என்று எழுந்தாள்.
அம்மாவின் வார்த்தைகளில் ஏதோ ஒன்று இருந்ததை, மிக சரியாக ஊகித்தாள், மலர்.
''அண்ணா... அம்மா என்னத்தையோ மறைக்கிறா,'' என்றாள்.
''மலரு, எதாவது உளறாதே, பாடத்தை படி,'' என, அருள் கூறினாலும், மலர் சொன்னதை மனம், அசை போட்டது.
மறுநாள் காலை, 6:00 மணிக்கு, வீட்டு வாசலில் கூடிய உறவினர் கூட்டம், அம்மா எதை மறைத்தாள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.
குளித்து தயாராகிக் கொண்டிருந்த, அருள், பெரியப்பாவின் கனத்த குரல் கேட்டு, வாசலுக்கு வந்தான்.
''உம்மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கே... என் தம்பிய, மருத்துவமனையில, அனாதை பொணமா விட்டுட்டு வந்துருக்க... இங்க வந்தா, ஒரு ஏற்பாடும் இல்லை.''
அருளும், மலரும் அதிர்ந்து நின்றனர்.
'அப்பா, போயிட்டாரா... அம்மா, ஒண்ணுமே சொல்லலயே...'
''உங்கம்மா மாதிரி, ஒரு அழுத்தகாரிய இந்த உலகத்திலேயே பாக்க முடியாது; மகா பாவி,'' குரலெடுத்து அழ ஆரம்பித்தாள், அத்தை.
''ஆமா... போய்ட்டான், அந்த பாவி மனுஷன். என்ன செய்ய சொல்றீங்க?'' அம்மாவின் குரலில் அப்படியொரு அமைதி.
''அடிப்பாவி,'' கத்தினாள், பெரியம்மா.
''என்ன பேச்சு பேசற நீ... போய் பிணத்தை எடுத்து வரணும்... வேட்டு, மோளம் ஏற்பாடு பண்ணணும்... பெரிய பூபாடை தயார் பண்ணணும்...'' பெரியம்மாவை முடிக்க விடாமல், மாமன் குறுக்கே வந்தார்...
''சரக்கு வேற வாங்கணும், அதை விட்டுடீங்களே!''
அவரவர் கவலை அவரவருக்கு.
''ஆமா, எவ்ளோ காசு வச்சிருக்க, எல்லாத்தையும் எடு... உனக்கென்ன, தையல் தச்சே ஏகமா சேத்து வச்சிருப்பியே,'' பெரியப்பாவின் குரலில் தெரிந்தது, நக்கலா, பொறாமையா...
''காலணா கிடையாது,'' என்றாள், அம்மா.
''அப்போ என்ன பண்றது; எங்ககிட்டயும் காசு கிடையாது,'' சுருதி இறங்கிய, பெரியப்பாவின் குரலை வெட்டியது, அத்தையின் அலறல்.
''அவ பொய் சொல்றா, எல்லா செலவையும் நம்ம தலையில வைக்க பாக்கறா. அருளு, நீ போய் வீட்டுக்குள்ள எவ்ளோ காசு இருக்குன்னு பாரு... உங்கம்மா, பத்திரமா எங்கயாவது வச்சிருப்பா,'' என்றாள், அத்தை.
''அருளு, நீ சாப்பிட்டு கிளம்பு... இங்க, எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்,'' அம்மாவின் குரல், இடை வெட்டியது.
''அவனை, எங்க போக சொல்ற, போடா, போய் ஆவுற வேலைய பாரு; பணத்துக்கு ஏற்பாடு பண்ணு. உங்கம்மா தையல் மிஷின விக்க முடியுதா பாரு. உங்கம்மா கைல இருக்கற வளையல,'' என, அத்தை கூறி முடிப்பதற்குள்...
''யாராச்சும் மிஷினை தொட்டீங்கன்னா, இங்க கொலையே விழும்,'' என்ற, அம்மாவின் ஆங்கார முகத்தை, முதன் முதலாக பார்த்து, அனைவரும் வாயடைத்து நின்றனர்.
''ஆமா... அந்தாள் போய்ட்டான். சும்மா போகலை, என்னையும், இந்த குழந்தைகளையும் அந்த பாடு படுத்திட்டு தான் போனான்... என்ன குடி, என்ன ஆட்டம். ஆமா, எல்லாரும் இப்ப வர்றீங்களே, 'ஏண்டா குடிக்கறே...'ன்னு ஒரு வார்த்தை கேட்டீங்களா...
''பள்ளி, கல்லுாரி கட்டணம் கட்ட, நான் உங்ககிட்ட வந்து நின்னப்ப, என்ன சொன்னீங்க... 'குடிகாரன் பசங்க, படிச்சு என்ன கிழிக்க போறாங்க...'ன்னு, நக்கல் அடிச்சீங்க... நாங்க, சோத்துக்கு இல்லாம பசியும், பட்டினியுமா இருந்தப்போ, ஒரு வாய் சோறு போட்டுருப்பீங்களா...
''கிண்டலும், கேலியும் தான், நீங்க எங்களுக்கு போட்டது. நான், தனியா போராடினேன். என் குழந்தைகளும் ரொம்ப பொறுப்பானவங்க, கஷ்டம் புரிஞ்சவங்க. இதோ, மகன், அருளுக்கு வேலை கிடைக்கும். மலரையும், அவன் படிக்க வைப்பான். டேய், அருள், நீ கிளம்புடா... கல்லுாரிக்கு நேரமாச்சு,'' அம்மாவின் குரல் அடங்கியது.
''சடங்கு பண்ணாம, என் தம்பிய, அனுப்ப விட மாட்டேன்... மோளமும், வேட்டும், பூபாடை சோடிச்சு தான் அனுப்புவேன். மரியாதையா காசை எடு, இல்லாட்டா, தம்பி பொண்டாட்டின்னு கூட பாக்க மாட்டேன்,'' என்ற பெரியப்பா, வராத கண்ணீரை துடைத்து, சத்தம் போட்டார்.
சிரித்தாள், அம்மா.
''பொணம், வராது.''
''வராதா?''
''வராது, மருத்துவ கல்லுாரிக்கு தானம் பண்ணிட்டேன். குடியினால ஒருத்தன் எப்டி நாசமா போனான்னு, அதை, அறுத்து பாக்கறவங்க கத்துக்கிடட்டும்.''
''அடியே... அடியே... அவன் நல்ல கதிக்கு போக வேணாமா... இப்டி பண்ணிட்டியே,'' மார்பில் அடித்து அழுதாள், அத்தை.
''இப்போதும் ஒண்ணும் கெட்டு போகலை... உன் வளையலையும், தையல் மிஷினையும் வித்து அமர்க்களமா எல்லாம் பண்ணிடலாம்,'' பெரியப்பா குரலில் நப்பாசை தெரிந்தது.
பெருமூச்சுடன் நிமிர்ந்தாள், அம்மா.
''ஆமா... என் வளையல் மேலயும், மிஷின் மேலயும் தான், இப்போவும் உங்களுக்கு கண்ணு, இல்ல. நீங்க, எல்லாரும் போகலாம். இதுவரை எங்க மேல இல்லாத அக்கறை, இனி வேண்டாம். இனிமேலும் இங்க நின்னு, எங்க நேரத்தை வீணாக்காதீங்க...
''கல்லுாரிக்கு கிளம்புடா, அருள். உனக்கு நேரமாச்சு. நல்லபடியா போயிட்டு வாப்பா. வா... மலர், போய் பாடத்தை படி. நல்ல மதிப்பெண் எடுத்தா தான், நீ கேக்கற, 'கோர்ஸ்' கிடைக்கும்,'' என்று சொல்லி, உள்ளே திரும்ப எத்தனித்தாள், அம்மா.
''இனிமே, இந்த வீட்டுப்படி மிதிக்க மாட்டோம்; உறவும் அந்து போச்சுன்னு வச்சுக்க,'' என்றபடியே கிளம்பினார், பெரியப்பா.
படி ஏறி வந்த, அருள், பேசினான்... ''அந்த குடிகாரப்பயல, என் தம்பின்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்குன்னு, ஊரு பூரா சொல்லிட்டு திரிஞ்சது நீங்க தானே... இப்போ என்ன, புதுசா உறவு அந்து போச்சு, நொந்து போச்சுன்னுகிட்டு... அதான், அம்மா சொல்லிட்டாங்கல்ல, கிளம்புங்க கிளம்புங்க,'' என்றான்.
தலைமுடியை அள்ளி முடிந்து வந்த அத்தை, ''அவன், நல்ல கதிக்கு போனா தான், உன் குடும்பம் நல்லா இருக்கும். என்ன, புதுசா அம்மாவும், புள்ளையும் ஆட்டம் போடறீங்களா,'' என்று, ஆவேசமாக கத்தினாள்.
''எங்கப்பன் நல்ல கதிக்கு தான் போவான். இவ்ளோ நாளா பண்ணின பாவத்துக்கு தான், அவன் உடம்பை மருத்துவமனைக்கு தானமா கொடுத்தது. இந்த நல்ல காரியத்துக்காகவே, அவன் பண்ணின பாவம் எல்லாம் போய்டும்.''
அம்மாவை பார்த்து, அருள் திரும்பி, ''எனக்கு சாப்பாடு போடு, கிளம்பணும்... நேரமாச்சு,'' என்றவாறு, வீட்டுக்குள் நுழைந்தான்.
''உங்கப்பன், இதுவரைக்கும் பண்ணின ஒரே நல்ல காரியம், இவ்வளவு மணியான புள்ளைங்களை எனக்கு குடுத்தது தான். ரெண்டு பேரும் வாங்க தட்டு வைக்கிறேன்,'' என்றாள்.
''அம்மா, நீயும் வா, ஒண்ணாவே சாப்பிடலாம்,'' அழைத்தாள், மலர்.
''இல்லம்மா, என்ன இருந்தாலும், எனக்கு தாலி கட்டின புருஷன். இன்னிக்கு, எனக்கு சாப்பாடு வேண்டாம். ரெண்டு பேரும், உங்க வேலைய பாருங்க,'' முகத்தை அழுந்த துடைத்து எழுந்தாள், அம்மா.
வீடு மட்டுமல்ல, வீட்டு வாசலும் அமைதியாகவே இருந்தது.

உமா ஸ்ரீதரன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prof. A.Venkateswaran. - Thanjavur,இந்தியா
13-ஜூலை-201918:39:53 IST Report Abuse
Prof. A.Venkateswaran. மிக நல்ல கற்பனை . இதைப்போல மனைவியர்கள் குடிகாரக் கணவன்களைக் கைவிடவேண்டும் . குடித்துவிட்டுட்டு வீதியில் கிடக்கும் அனைவரின் மீதும் அனுதாபம் கொள்ளும் குடும்பத்தார்கள் அதைக்கைவிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Durai - Bangalore,இந்தியா
13-ஜூலை-201917:52:40 IST Report Abuse
Durai மனசை தொடும் கதை
Rate this:
Share this comment
Cancel
Krishna Sridharan - chennai,இந்தியா
10-ஜூலை-201912:20:11 IST Report Abuse
Krishna Sridharan அருமையான கதை. இன்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் மற்றும் நடுத்தர மக்கள் வீட்டிலும் தினமும் நடக்கும் கூத்து இது. ஒரே தீர்வு டாஸ்மாக்கை குஜராத் ஆந்திராவைப்போல் மொத்தமாக மூடுவது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X