திண்டுக்கல், ரோட்டரி பள்ளியில், 2010ல், 5ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியை பத்மா, பொது அறிவு தகவல்களை எளிமையாக புரிய வைப்பார்.
தண்ணீர் சிக்கனம் பற்றி அறிவுரை கூறுவார். என் தோழியர் சிலர், அந்த அறிவுரையைப் பொருட்படுத்தாமல், தண்ணீரை வீணாக்கி வந்தனர். அவர்களை திருத்த திட்டம் போட்டார்.
தண்ணீரை சிக்கனமாக பேணியவர்களுக்கு, பரிசுகள் தந்து பாராட்டினார்.
இது, அந்த மாணவியர் நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. தண்ணீர் சிக்கனத்தை கடைபிடித்ததுடன், அது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆரம்பித்தனர்.
தற்போது, இன்ஜினியரிங் கல்லுாரியில், 3ம் ஆண்டு படிக்கிறேன். தண்ணீர் சிக்கனம் குறித்து பேசுவதால், ஏராளமான தோழியரை பெற்றுள்ளேன்.
இந்த உணர்வை ஊட்டிய, ஆசிரியைக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன்!
- க.காவ்யா, திண்டுக்கல்.