தசாவதாரத்தையும், சிலை வடிவில் தரிசிக்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அருகில், தசாவதார கோவில் இருக்கிறது. மதுரை அழகர்கோவிலில், தசாவதார சன்னிதி இருக்கிறது. ஆனால், தசாவதாரங்களையும் செப்புத் தகடுகளில் பொறித்து, ஒட்டியாணம் போல இடுப்பில் கட்டியிருக்கிறார், நாகப்பட்டினம், சவுந்தரராஜ பெருமாள்.
உத்தானபாத மகாராஜனின் குமாரன், துருவன். சிறு வயதில் சிற்றன்னையால் அவமானப் படுத்தப்பட்டான். அந்த அவமானத்தை துடைக்க, பூலோகம் மட்டுமின்றி, தேவலோகமும் தனக்கு அடிமையாக வேண்டும் என, பெருமாளை வேண்டி தவம் செய்தான்.
தேவலோகம், தங்களிடமிருந்து பறிபோவதை விரும்பாத தேவர்கள், அவனது தவத்தை கலைக்க, இடைஞ்சல் செய்தனர். இருப்பினும், தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவன் முன், கருடன் மீது அமர்ந்து, பேரழகு பொருந்தியவராக, தரிசனம் தந்தார், பெருமாள்.
பெருமாளின் அழகில் மயங்கிய துருவன், கேட்க வந்த வரத்தை மறந்தான்.
'பெருமாளே... இந்த உலகம், எனக்கு அடிமையாகி, நான் என்ன செய்யப் போகிறேன்? உனக்கு, நான் அடிமையாகிறேன். அதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. உன் பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை தர வேண்டும்...' என்றான்.
பெருமாளும், தன் அழகான திருக்கோலத்துடன், அவன் தவமிருந்த நாகப்பட்டினத்தில் தங்கினார். சவுந்தரராஜ பெருமாள் என, பெயர் பெற்றார்; சவுந்தரம் என்றால், அழகு.
நாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன், ஒரு இடத்தில், 'சாரபுஷ்கரணி' என்ற தீர்த்தத்தை உருவாக்கி, அதன் கரையில் அமர்ந்து, பெருமாளை நினைத்து தவமிருந்தது. பெருமாளுக்கு படுக்கையாக வேண்டும் என்பது, அதன் விருப்பம். அவரும் மகிழ்ந்து, படுக்கையாக ஏற்றுக்கொண்டார். நாகம், பெருமாளை ஆராதித்ததால், அதன் பெயரால், இவ்வூர், நாகப்பட்டினம் ஆனது.
பெருமாளின், 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. நான்கு யுகம் கண்ட இந்த பெருமாள், நின்ற, படுத்த, அமர்ந்த கோலங்களில் அருள்பாலிக்கிறார். தசாவதாரங்களை விளக்கக் கூடிய, செம்பு தகட்டாலான ஒட்டியாணம், பெருமாளின் இடையை அலங்கரிக்கிறது. இதைப் பார்த்தால் புண்ணியம் கிடைக்கும்; காள சர்ப்பதோஷம், திருமணத்தடை நீங்கும்.
நரசிம்மர், இங்கு எட்டு கரத்துடன் அருள்பாலிக்கிறார். ஒரு கை பிரகலாதனை ஆசிர்வதிக்கிறது. இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கையும் சக்தி வாய்ந்தவள்.
நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.
தி. செல்லப்பா