அதிர்ஷ்டம் கதவை தட்டும் என்பர். ஆனால், எனக்கு சினிமா வாய்ப்பு என்ற அதிர்ஷ்டம், ஜன்னலை தட்டியது. ஆம்... ஒருநாள் காலை, ரயில்வே ஆபீசில் எதேச்சையாக தலையை திருப்பி, ஜன்னல் பக்கம் பார்த்தபோது, எனக்கு பரிச்சயமான முகம் தென்பட்டது.
'இவர், எதற்கு இங்கே வந்திருக்கிறார்...' என்று, எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். அவர், 'நாகேஷ்... நீ இங்கே தான் இருக்கிறாயா... உன்னை பார்க்கணும்ன்னு தான் வந்தேன்...' என்றார்.
வந்தவர் பெயர், பஞ்சு. சினிமா கம்பெனிகளுடன் தொடர்புடைய மனிதர். அவரை, தி.நகரில், வெற்றிலை, பாக்கு வாங்கும், 'சுல்தான் சீவல்' கடையில், அடிக்கடி பார்ப்பேன். என் அருகே வந்த, பஞ்சு, 'நாடகங்களில் எல்லாம் அமர்க்களமா நடிக்கிற போல இருக்கு... சினிமாவுல நடிக்கறியா?' என்றார்.
'இன்று, ஏப்ரல் 1ம் தேதி கூட இல்லை. என்னை இப்படியெல்லாம் முட்டாளாக்க முடியாது!' என்றேன்.
'விளையாட்டு இல்லை; நான் சொல்றது நிஜம். எங்க முதலாளி, உன் நாடகத்தை பார்த்து, அசந்துட்டாரு! தான் எடுக்கும் படத்துல எப்படியும் உன்னை நடிக்க வைக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டார். உன்னை பார்த்து பேசிட்டு வரச்சொல்லி, என்னை அனுப்பியிருக்கார்...' என்றார், பஞ்சு.
'என்னை நடிக்க வைப்பதில் அவருக்கு ஆட்சேபனை இல்லை என்றால், நடிப்பதற்கு எனக்கும் ஆட்சேபனை ஏதுமில்லை!'
'சரி... புறப்படு!'
'பஞ்சு சார்... இந்த படத்துல நடிக்க, எனக்கு எவ்வளவு ரூபாய் கொடுப்பாங்க?'
'எவ்வளவு எதிர்பார்க்கறே?'
'ரயில்வேயில வேலை பார்க்கிறேன். மாதம் பிறந்தா, சுளையா சம்பளம் வாங்கி பழகிப் போச்சு. இங்கே எனக்கு, மாசம், 150 ரூபாய் சம்பளம்...' என்றேன்.
'ஐந்நுாறு ரூபாய் போதுமா?'
'என்ன... 500 ரூபாயா... சினிமாவுல நடிச்சா, அவ்வளவு பணம் கொடுப்பாங்களா... சார், சீக்கிரமா போய், அவரை பார்த்து பேசி முடிச்சிடலாம்... வேற யாருக்காவது அந்த வாய்ப்பை குடுத்திட போறாரு!'
'உனக்கு ஏன் வீண் சந்தேகம்... குறைந்தது, 500 ரூபாய் வாங்கிக் கொடுக்க நானாச்சு...' என்றார்.
அவரது கைகளை பிடித்து, நன்றி சொன்னேன்.
சினிமா கம்பெனியின் ஆபீசுக்கு போனோம். இரண்டு பேர், ஓர் அறையில் உட்கார்ந்திருந்தனர். அவர்களை கம்பெனி முதலாளிகள் என்று கூறி, என்னை அறிமுகப்படுத்தினார், பஞ்சு.
'திறமையான நடிகர். எங்க படத்துல ஒரு கதாபாத்திரம் இருக்கு. நீங்க தான் நடிக்கணும்...' என்றனர், இருவரும்.
'கண்டிப்பா நடிக்கிறேன். எவ்வளவு பணம் தருவீங்க... இவரு சொன்னாரு, 500 ரூபாய் தருவீங்கன்னு... நிஜமா?' என்றேன்.
'ஐநுாறு ரூபாய் தானே! சரி, கொடுத்துடலாம்...' என்று அவர்கள் சொல்ல, நான், 500 ரூபாய் கற்பனையில் மூழ்கிப் போனேன்.
'படப்பிடிப்பு தேதி முடிவானவுடன், பஞ்சு வந்து சொல்வார்; வந்து விடுங்கள்!' என்றனர்.
'கோல்டன் ஸ்டுடியோ'வில், படப்பிடிப்பு. பஞ்சு மூலம் தகவல் வந்தது. இயக்குனர், முக்தா சீனிவாசன். படத்தின் பெயர், தாமரைக்குளம். எனக்கு காமெடியன் கதாபாத்திரம்; மீர்சாகிப்பேட்டை ராஜேஸ்வரி என்பவர், எனக்கு ஜோடி. அன்று எடுக்கப்பட இருந்த காட்சியை, விளக்கினார், உதவி இயக்குனர்.
கயிற்றுக் கட்டிலில், எம்.ஆர். ராதா உட்கார்ந்திருப்பார். கையை காலை ஆட்டியபடி, அவர் வசனம் பேசிக் கொண்டிருக்கிற சமயத்தில், கட்டிலின் அடியில் ஒளிந்துகொண்டிருக்கிற நானும், ராஜேஸ்வரியும், காமெடி பண்ண வேண்டும்.
அப்போது, மிக பிரபலமானவர், எம்.ஆர். ராதா. அவரது நடிப்பை ரசிக்க, லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அப்படிப்பட்டவர் இடம்பெறும் காட்சியில், அவர் உட்கார்ந்திருக்கிற கட்டிலின் அடியில் ஒளிந்து, நாம் காமெடி பண்ணினா, அது எப்படி எடுபடும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால், வெளிப்படையாக சொல்ல முடியாதே; பொறுமையாக இருந்தேன். ஒத்திகை பார்த்தோம்.
திடீரென்று ஒரே பரபரப்பு. உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாம் எழுந்து நின்றனர். சலசலவென்ற பேச்சுகள் நின்று, நிசப்தம் நிலவியது. 'அண்ணன் வந்துட்டாரு...' என்று ஒருவர் சொல்ல, அடுத்த வினாடி, 'ம்... என்ன?' என்று, தனக்கே உரிய குரலில் கேட்டபடி, படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தார், எம்.ஆர். ராதா.
என்னை பார்த்து, 'நீதான் புது ஆளா... பேரென்ன?' என்று கேட்டார்.
பெயரை சொன்னதும், 'ம்... ம்... நல்லா பண்ணு...' என்று சொல்லி, முதுகில் தட்டிக்கொடுத்து, வெளியில் போனார்.
உடனே, படத்தின் முதலாளிகள் இரண்டு பேரும் என்னிடம் வந்து, 'ஒத்திகையின் போது கவனிச்சோம், என்ன நடிக்கிறே நீ... ராதா அண்ணன் வர்ற, காட்சியில உன்னை நடிக்க வெச்சிருக்கோம்...
'நீ என்னடான்னா, கட்டிலுக்கு அடியில சும்மா உட்கார்ந்திருக்கியே... அதான்யா, புது ஆளுங்களை போட்டா இப்படித்தான்... இந்த இடத்துல சந்திரபாபு இருந்தா, பிச்சு உதறி இருப்பாரு...' என்று, படபடவென்று பேசிக் கொண்டிருந்தனர்.
எனக்கு சுருக்கென்றது. சட்டென்று தலையில் கை வைத்து இழுத்தேன். 'விக்' கையோடு வந்து விட்டது.
'சார்... நீங்க இப்படி பேசறது துளியும் சரியில்லை... உங்களுக்கு, சந்திரபாபு வேணும்னா, அவரை ஒப்பந்தம் பண்ணியிருக்கணும்... நாகேஷ் வேணும்ன்னு, என்னை ஒப்பந்தம் பண்ணிட்டு, சந்திரபாபு மாதிரி நடிக்கலைன்னு சொல்றது தப்பு...' என்று சொல்லி, கழற்றின, 'விக்'கை நீட்டினேன்.
அந்த சமயம் பார்த்து உள்ளே நுழைந்தார், எம்.ஆர். ராதா.
'என்ன... அங்க தகராறு...' என்று அவர் கேட்க, முதலாளிகள் தயங்கி, ஓரம் நகர்ந்தனர். நான் தான், 'ஒண்ணுமில்லை சார்... இது உங்க, காட்சி. ஜனங்களும், உங்கள் நடிப்பை தான் கவனிப்பாங்க...
'உங்களை பார்த்து கேமரா வெச்சிருக்கிறப்போ, கட்டிலுக்கு கீழே, உங்க காலுக்கு பின்னாடி ஒளிஞ்சுகிட்டு நான் நல்லா நடிக்கலைன்னு சொல்றாரு...' என்று கூறினேன்.
சந்திரபாபுவை பற்றி முதலாளி சொன்னது, அதற்கு என் பதிலடி எல்லாவற்றையும் கடகடவென்று, அவரிடம் சொல்லி விட்டேன்.
- தொடரும்
நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.
எஸ். சந்திரமவுலி