பா
அளவாக குடிப்போர், அதிகமாய் குடிப்போர், கம்பெனிக்காக குடிப்போர், அழைத்து வந்து கம்பெனியுடன் குடிப்போர் என, பலரை, 'பார்'களில் காணலாம். இது தவிர, அடாவடி பேர்வழிகளும் வருவதுண்டு.
இவர்கள் அனைவரையும், 'பார்'களில் எப்படி சமாளிக்கின்றனர் என்பதை அறிய, லென்ஸ் மாமாவோடு சென்று, நோட்டம் விட்டபோது கிடைத்த தகவல்கள் இவை:
* புது வாடிக்கையாளர்கள், மது கேட்டு வந்தால், அவர்களிடமிருந்து, 'டெபிட்' அல்லது 'கிரெடிட் கார்டு' வாங்கி வைத்தே, மதுவை தருகின்றனர். இது, ஒரு பாதுகாப்புக்கு தானாம்
* நள்ளிரவு ஆனதும், மது வினியோகத்தை நிறுத்தி விடுவர். 'அடுத்த அரை மணி நேரத்திற்குள், வாங்கியதை காலி செய்து, வெளியே போ...' என, இதற்கு அர்த்தம். ஏனெனில், பலர், மீதியை குடிக்க, மேலும் அரை மணி நேரம் எடுத்துக் கொள்வதோடு, அங்கேயே துாங்கி வழிகின்றனராம்
* 'பார்'களில், மீந்த மதுவை வெளியே எடுத்துச் செல்ல அனுமதியில்லை. வாங்கியதை அங்கேயே காலி செய்து தான் போக வேண்டும்
* சில சமயம், 'பார்'களில் லட்சக்கணக்கில் நஷ்டமும் ஏற்படுகிறது. ஒரு, 'பாரில்' நேரம் முடிந்தும், ஒருவர், மதுவை மீதம் வைத்திருந்தார். அதை எடுத்து செல்ல, பிளாஸ்டிக் பை கேட்டார். தராததால், விவாதத்தில் இறங்கி பிரச்னை செய்தார். இதை பார்த்த பலர், வேகமாக எழுந்து, பணம் கொடுக்காமலே, 'எஸ்கேப்' ஆயினர்
* விஸ்தாரமான ஹால்களில் மது குடிப்பவர்களை கண்காணிக்க, சி.சி.டி.வி., கேமராக்கள் உண்டு. புதிதாக வேலைக்கு சேர்ந்த சர்வரிடம், வேண்டுமென்றே சிலர், ஏதாவது குறை கண்டுபிடித்து, 'எஸ்கேப்' ஆக பார்ப்பர்.
இவர்களை சமாளிக்க, உடனே, சீனியர் சர்வர்கள் அங்கு அனுப்பப்படுவர். மேலும், மேனேஜர் அளவில் நெருங்கி வந்து விபரம் கேட்டு, பிரச்னையை சமாதானமாக முடிக்க பார்ப்பர். சிலர், இதையே காரணம் காட்டி, 'நான் பணம் தரமாட்டேன்...' என, நழுவி விடுகின்றனர்
* சில, 'பார்'களில், எழுதாத சட்டம் உள்ளது. குடித்து பிரச்னை செய்வோரை, 'பவுன்சர்'கள் என்றழைக்கப்படும், அடியாட்கள் துணையுடன், அலேக்காக துாக்கி, வெளியில் விட்டு விடுகின்றனர்
* 'பார்'களுக்கென்று, ஒரு கூட்டமைப்பு உள்ளது. பிரச்னை செய்யும் நபர்களை படம் பிடித்து, 'வாட்ஸ் - ஆப்' மூலம், மற்ற, 'பார்'களுக்கு தெரிவித்து, 'ஜாக்கிரதையாக கையாளவும்...' என, தகவல் அனுப்புகின்றனர்
* 'பாரில்' நுழையும்போதே, பிரச்னைக்குரியவர் என்ற சந்தேகம் ஏற்பட்டால், அவர்களை துாரத்திலிருந்தபடியே கண்காணிக்கின்றனர். முடிந்தவரை பிரச்னை இல்லாமல் வெளியே அனுப்ப பார்ப்பர். மீறியும், காசு தராமல் வெளியேறுபவரை, புகைப்படம் எடுத்து வைத்து, அடுத்த முறை உள்ளே நுழைய விடுவதில்லை. மறந்தும், போலீசை அணுகுவதில்லை. காரணம், தலைவலி போய் திருகுவலி வந்து விடக்கூடாது என்ற பயம் தான்
* 'பார்' மேற்பார்வையாளர்கள், 'குட்நைட்' சொல்லி, 'கிளம்பலாம்...' என கூறுவர். இதை புரிந்து பலர், வெளியேறி விடுவர். போதை தலைக்கேறியவர்களை பக்குவமாய் வெளியே அனுப்புகின்றனர்.
'குடி'மகன்களை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியுள்ளது என்று நினைத்து கொண்டேன்.
கே
குப்பண்ணா வீட்டுக்கு சென்றபோது, அங்கு, பக்கத்து வீட்டில் வசிப்பவரின் பேரன், ஒரு புத்தம் புது கார் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
வேகமாக உள்ளே வந்த பக்கத்து வீட்டுக்காரர், பேரனின் கையிலிருந்த பொம்மையை, 'வெடுக்' என பிடுங்கிச் சென்றார். அவ்வளவு தான், பேரன், கீழே விழுந்து, புரண்டு புரண்டு அழ ஆரம்பித்தான்.
இதைப் பார்த்த நான், 'குழந்தை தானே, கார் பொம்மையை ஆசையா வைத்து விளையாடுகிறான்; கொடுங்களேன்...' என்றேன்.
'அட போப்பா... ஒரே நிமிடத்தில், அக்கு வேறு... ஆணி வேறாக பிய்ச்சு எறிஞ்சுருவான். ஜி.டி.நாயுடுன்னு நினைப்பு...' என்றார், பக்கத்து வீட்டுக்காரர்.
இந்த கூத்தையெல்லாம் வேடிக்கை பார்த்த குப்பண்ணா, 'சின்ன விஷயமானாலும், அது என்ன, ஏதுன்னு ஆராய்வதில் என்ன தவறு இருக்கிறது. பெரிய பெரிய, வி.ஐ.பி.,களிடமும் இத்தகைய குணாதிசயங்களும், புதுமையான பொழுதுபோக்கும் இருக்கின்றன என்று படித்துள்ளேன். சொல்றேன் கேளுங்க...' என்று ஆரம்பித்தார் :
* அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்பவர், அப்பதவியில் இருக்கும் வரை, அவர் சார்ந்த அனைத்து காகிதங்கள் மற்றும் பொருட்களை சேமித்து, பாதுகாக்கப்படும். இந்த பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள, 'ஆர்சிவ்ஸ்' காப்பகத்திடம் உள்ளது
தற்போதைய அதிபர், டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்; அதுமட்டுமல்ல, கோபக்காரரும் கூட. அவருக்கு வரும் பல கடிதங்களை படித்து, சுக்குநுாறாக கிழித்து விடுவார் அல்லது முடிந்த அளவுக்கு கசக்கி குப்பை தொட்டியில் வீசி எறிந்து விடுவார். இதனால், 'ஆர்சிவ்ஸ்' காப்பகம், அவற்றை திரும்ப வாங்கி சேமிக்க, படாதபாடு படுகிறது
* ரஷ்ய அதிபரான புடின், உடம்பை கச்சிதமாக வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்துவார். மதிய வேளை நெருங்கும்போது தான் எழுந்திருப்பார். உடனே, காபி, ஆரஞ்சு ஜூஸ், ஆம்லெட், அரிசியில் செய்யப்பட்ட கூழ் மற்றும் கவுதாரி முட்டை. இவற்றில் விரும்பியதை சாப்பிட்டு, இரண்டு
மணி நேரம் நீச்சல் அடிப்பார்
அடுத்து, 'ஜிம்'முக்கு சென்று உடற்பயிற்சி செய்தபடியே, 'டிவி'யில், அரசு செய்திகளை பார்ப்பார். இதையடுத்து, தன் மனநிலையை பொறுத்து, குளிரான அல்லது சூடான தண்ணீரில் குளிப்பார். இதற்கு பிறகு, சாப்பாடு... வேலை என, ஆரம்பித்து விடுவார்
* போப் பிரான்சிஸ். இவருக்கு, சிறு வயதிலிருந்தே, 'டாங்கோ டான்ஸ்' ஆடுவது ரொம்ப பிடிக்கும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆடுவார். ஆனால், போப் ஆன பிறகு, அப்படி செய்ய முடியுமா... சமீபத்தில், 78வது பிறந்த நாளின்போது, போப்பின் விசுவாசிகள் ஆயிரக்கணக்கானோர் இணைந்து, 'டாங்கோ டான்ஸ்' ஆடி, அவரை மகிழ்வித்தனர்
* திபெத் புத்த மத குருவான, தலாய்லாமாவுக்கு சிறு வயதிலிருந்தே, பொருட்களை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து, மீண்டும் பொருத்துவது பிடித்த வேலை. அமெரிக்க முன்னாள் அதிபர், பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஒருமுறை, தலாய்லாமாவை
சந்தித்தபோது, அவருக்கு, கடிகாரம் ஒன்றை பரிசளித்தார். உடனே, அதை பிரித்து, மீண்டும் சரியாக பொருத்தி வைத்து கொண்டார், தலாய்லாமா
கார்கள், சினிமா புரொஜக்டர் என, எதுவாக இருந்தாலும், பிரித்து பார்த்து மீண்டும் இணைத்து விடுவது, இன்று வரை இவருடைய பொழுதுபோக்கு.
- இவ்வாறு கூறி முடித்தார், குப்பண்ணா.