தாய் மனம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
தாய் மனம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2019
00:00

''மைதிலி... எங்க கம்பெனியில், திருச்சி கிளைக்கு, மேனேஜரா என்னை மாற்றியிருக்காங்க. மதுரையை விட்டு, 10 நாளில் கிளம்பணும்,'' என்றான், குமரன்.
கணவனை முறைத்தவள், ''ரொம்ப சந்தோஷம்... உங்கம்மாவை என்ன செய்யப் போறீங்க?''
''என்ன சொல்ற, மைதிலி?''
வெளியே எட்டிப் பார்த்தாள்.
பின்புறம் பாத்திரம் தேய்க்கும் மாமியார் காதில் விழாதபடி, கிசுகிசுப்பாக, ''புரியாத மாதிரி நடிக்காதீங்க... இனியும் இவங்களை வச்சு காலம் தள்ள முடியாது... கல்யாணமாகி இரண்டு வருஷமாச்சு, இன்னும் குழந்தை பிறக்கலை... டாக்டர், சிகிச்சை, அது இதுன்னு நமக்கே நுாறு செலவு காத்துக் கிடக்கு... இவங்களுக்கு மருந்து, மாத்திரை வாங்கிக் கொடுத்து சீராட்ட முடியாது,'' என்றாள்.
''என்ன செய்ய முடியும் மைதிலி... பெத்த தாயாகிட்டாளே... என்னை விட்டால் அவளுக்கு ஆதரவு யாருமில்லை.''
''எனக்கு அதெல்லாம் தெரியாது... முதியோர் இல்லத்தில் விட்டால், அதுக்கும் மாசா மாசம் தண்டம் அழணும்... திருச்சிக்கு போகும் போது, நாம் மட்டும் தான் போகணும்; உங்கம்மா வரக்கூடாது... எங்கேயாவது கண்காணாமல் கோவில் குளத்தில் விட்டுட்டு வாங்க, பிழைச்சுக்குவாங்க... பெத்த தாயை வச்சு சமாளிச்ச வரைக்கும் போதும்.''
மவுனமாக இருந்தான், குமரன்.
''அப்ப சரி... இஷ்டமில்லைன்னா வேண்டாம்... நீங்க, உங்கம்மாவை கூட்டிக்கிட்டு திருச்சி கிளம்புங்க... நான், எங்கம்மா வீட்டுக்குப் போறேன்... நானா, அவங்களான்னு முடிவு பண்ணுங்க,'' என்றபடி, அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
இத்தனைக்கும், மாமியார் பார்வதியால், மைதிலிக்கு எந்த தொந்தரவும் இல்லை. அதிர்ந்து பேச மாட்டாள். அவள் சொல்லும் வேலைகளையும் முகம் சுழிக்காமல் செய்வாள்.
'உன் மாமியார் கிழவி, இருமிகிட்டே இருக்கா... டி.பி., ஆக இருக்குமோ தெரியலை... நாளைக்கு பிள்ளை பிறந்தால், வியாதிக்காரியை வீட்டில் வச்சுக்க முடியாது... எங்கேயாவது, முதியோர் இல்லத்தில் சேர்த்து விடு...' அவள் அம்மா, அன்று யோசனை சொன்னது முதல், பார்வதியை விரோதியாக பார்க்க ஆரம்பித்தாள், மைதிலி.
எது செய்தாலும், குற்றம் கண்டுபிடித்து திட்டுவாள். அப்போதும், பதில் பேசாமல் அமைதியாகத் தான் இருப்பாள், பார்வதி.
'ஒரு சொத்து சுகம், பைசாவுக்கு பிரயோசனம் இல்லை... புருஷன் போனதும், பிள்ளையை மட்டும் வளர்த்து ஆளாக்கியிருக்கா... இவளை, காலமெல்லாம் வச்சு கஷ்டப்பட முடியாது...' என்ற முடிவுக்கு வந்த பின், கொஞ்சம் கொஞ்சமாக குமரனை தன்வசம் இழுக்க ஆரம்பித்தாள்; அம்மாவிடம் பேச அனுமதிப்பதில்லை.
'போதும், உங்கம்மாகிட்டே பேசினது... அவங்களுக்கு இருக்கிற இருமல், உங்களுக்கு ஒட்டிக்கிட்டா, நாளைக்கு நமக்கு பிறக்கப் போற பிள்ளையை பாதிக்கும்... எப்படா குழந்தை பிறக்கும்ன்னு தவம் இருக்கேன்... வியாதியை வரவழைச்சுடாதீங்க...' என்று, எரிந்து விழுவாள்.
மைதிலிக்குப் பயந்து, அம்மாவிடமிருந்து ஒதுங்கினான்; அவளை பகைத்து, வாழ்க்கையின் சந்தோஷங்களை அவன் இழக்க விரும்பவில்லை.
பின்புற வாசலில் உட்கார்ந்திருந்த அம்மாவிடம், ''என்னம்மா... இருட்டிப் போச்சு... கொல்லைப்புறம் உட்கார்ந்திருக்கே?'' என்றான்.
நிமிர்ந்து, மகனை பார்த்தாள், பார்வதி. நான்கு நாட்களுக்குப் பின், இன்று தான் பேசுகிறான். அதுவும், மைதிலி இல்லாத நேரம் தான், ஒன்றிரண்டு வார்த்தை பேசுவான்.
''என்னப்பா பண்ண சொல்ற... பொழுது போகணும் இல்லையா... மைதிலி சொன்ன வேலையெல்லாம் முடிச்சுட்டு உட்கார்ந்திருக்கேன்.''
''எனக்கு திருச்சிக்கு மாறுதல் வந்திருக்கும்மா... இன்னும் நாலு நாளில் கிளம்பணும்.''
''சரிப்பா... சாமானெல்லாம் கட்டி வைக்க, ஏதாவது உதவி செய்யணும்ன்னா சொல்லு, செய்து தரேன்.''
''இல்லம்மா... நீ ராமேஸ்வரம் போற பிரார்த்தனை இருக்குன்னு, என் கல்யாணத்துக்கு முன்னயே சொல்லிட்டு இருந்தியே... திருச்சி போறதுக்குள்ள, உன்னை கூட்டிட்டுப் போயிட்டு வந்துடலாம்ன்னு பார்க்கிறேன்.''
பார்வதியின் கண்கள் பளபளத்தன.
''நிஜமாத்தான் சொல்றியா... மைதிலி போகலாம்ன்னு சொல்லிட்டாளா?''
''ஆமாம்மா... ஆனா, குழந்தை பிறந்தால் தான் அவ வருவாளாம்... நம்ம இரண்டு பேரையும் போயிட்டு வரச் சொன்னா.''
''கட்டாயம், அந்த ஸ்ரீராமனே வந்து பிறப்பாரு... நாம் போய், அந்த ஈஸ்வரனை கும்பிட்டு வருவோம்... உனக்கு தெரியுமா, ராமேஸ்வரம் போயிட்டு வந்த பிறகு தான், நீ எங்களுக்கு பிறந்தே...
''சீதையால் உருவாக்கப்பட்ட லிங்கம். ராமர் பூஜை செய்த அந்த ராமலிங்கத்தை மனசார வேண்டிக்கிட்டால், கட்டாயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும், குமரா.''
''சரிம்மா... நாளைக்கு போகலாம்!''
கோவிலில், 22 தீர்த்தங்களில் நீராடி, சுவாமியை தரிசனம் செய்தனர்.
''இப்ப தான் மனசுக்கு திருப்தியா இருக்கு, குமரா... கல்லுாரியில் படிக்கும்போது, உடம்பு முடியாமல், ஒரு மாசம் படுக்கையில் கிடந்தே... அப்ப, உனக்காக வேண்டிக்கிட்டது... நல்லபடியாக வேண்டுதல் முடிஞ்சுது... பாரேன், அடுத்த வருஷமே, எனக்கு பேரன் பிறப்பான்,'' நம்பிக்கையோடு சொல்லும், அம்மாவை பார்த்தான்.
''அம்மா... நீ ரொம்பவும் நடந்துட்டே, கால் வலிக்கும். பிரகார மண்டபத்தில் உட்காரு. சாமி படம், சங்கு எல்லாம் வாங்கிட்டு வரச் சொன்னா, மைதிலி... கடைக்கு போயிட்டு வந்து, உன்னை அழைச்சுட்டுப் போறேன், இங்கேயே இரு... ஒரு மணி நேரத்தில் வரேன்.''
''சரிப்பா... போயிட்டு வா!''
உட்கார்ந்தாள். நான்காக மடித்த துண்டு பேப்பரை தந்தான்.
''என்னப்பா இது?''
''வச்சுக்கம்மா... நம் வீட்டு விலாசம், என் போன் நம்பர் இருக்கு... வயசானவங்க தனியா இருக்கும்போது, பாதுகாப்பாக இருப்பது நல்லது.''
''எதுக்குப்பா இது... ஒரு மணி நேரத்தில் வரப்போற... நான் எங்கேயும் போகாமல், நீ வர்ற வரைக்கும் இங்கேயே இருக்கேன்... போயிட்டு வாப்பா!''
''பசிக்குதாம்மா... ஏதாவது சாப்பிடறியா?''
''இல்லப்பா... நீ வந்துடு, சேர்ந்தே சாப்பிடுவோம்!''
''வரேன்மா.''
அம்மாவின் கையை பிடிக்க, ''என்னப்பா இது... குழந்தை மாதிரி... அம்மா எங்கேயும் போயிட மாட்டேன்... நீ வரும் வரை, உனக்காக இங்கேயே காத்திருப்பேன்.''
அம்மாவை விட்டு, வெகுதுாரம் நடக்க ஆரம்பித்தான்.
நேரம் போய் கொண்டேயிருக்க, பார்வதிக்கு பசியுடன், தவிப்பும் ஆரம்பித்தது. 'இருட்டி விட்டதே... குமரனுக்கு என்னாச்சுன்னு தெரியலையே... ஒரு மணி நேரத்தில் வரேன்னு சொன்ன பிள்ளைய இன்னும் காணுமே...' மனம் பதைபதைத்தாள்.
அவன் கொடுத்து போன, துண்டு பேப்பர் ஞாபகம் வர, 'இதில் போன் நம்பர் இருக்குன்னு சொன்னானே... யாரிடமாவது கொடுத்து பேச சொல்லலாமா?'
மெல்ல எழுந்து, கோவில் வாயிலுக்கு வந்தாள். அங்கே நின்ற போலீஸ்காரரை அணுகி, ''ஐயா... என் பிள்ளை, கடை பக்கம் போயிட்டு, ஒரு மணி நேரத்தில் வரேன்னு போனான்... போயி ரொம்ப நேரமாகி, இருட்டிப் போச்சு... அவன் போன் நம்பர், இதில் இருக்கு... கொஞ்சம் கூப்பிட்டு, விபரம் சொல்றீங்களா?''
அவளிடமிருந்து பேப்பரை வாங்கினார்.
அதில், 'இந்த பெண்மணி, மனநிலை பாதித்தவர்... எங்கள் தெருவில் சுற்றி திரிந்தவர்... மனிதாபிமானத்தின் அடிப்படையில் கோவிலில் விட்டுச் செல்கிறேன்... நல்ல மனம் படைத்தவர் யாராவது, இவளை எங்காவது ஆசிரமத்தில் சேர்த்து விடுங்கள்... நன்றி!' என, எழுதப்பட்டிருந்தது.
''என்ன ஐயா... அப்படி பார்க்கிறீங்க... என் பிள்ளைக்கு போன் பண்ணுங்க சாமி,'' கண் கலங்கினாள்.
போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் முன் உட்கார்ந்திருந்தாள், பார்வதி.
''சொல்றதை புரிஞ்சுக்கம்மா... உன் பிள்ளை, 'நீ மனநிலை சரியில்லாதவள், தெருவில் சுத்தினவ... கோவிலில் விட்டுட்டுப் போறேன்... எங்கேயாவது ஆசிரமத்தில் சேர்த்திடுங்க'ன்னு தான் இதில் எழுதி இருக்கான்.''
''ஐயோ... அப்படியெல்லாம் இல்லைங்க... என் பிள்ளை, அப்படி விட்டுட்டுப் போக மாட்டான்... எங்கேயோ தப்பு நடந்திருக்கு,'' தலையில் அடித்துச் சொன்னாள்.
''சரி... மதுரை தானே உன் ஊரு... வீட்டு விலாசம் சொல்லு... பிள்ளையை இங்கே வரவழைக்கிறேன்.''
'உங்கம்மாவை எங்கேயாவது தொலைச்சு தலை முழுகுங்க... அப்ப தான் எனக்கு நிம்மதி... நமக்கும் குழந்தை பிறக்கும்...' வீட்டு விலக்கு குளித்த அன்று, கோபத்துடன், குமரனிடம், மைதிலி பேசியது ஞாபகம் வர...
'அப்படியானால்... என்னை வேண்டுமென்று தான் கோவிலில் விட்டு விட்டு போயிருக்கிறான்...' முந்தானையால் கண்ணீரைத் துடைத்தாள்.
''என்னம்மா சொல்ற... விலாசம் தெரியுமா?''
''தெரியாதுங்க... சரியான விபரம் புரியலை... திருச்சிக்கு போறதா சொன்னான்... எங்கே இருப்பான்னு தெரியலை... ஐயா, நீங்க ஒரு உதவி செய்ய முடியுமா?''
''என்ன... எங்கேயாவது ஆசிரமத்தில் சேர்க்கணும், அவ்வளவுதானே... பெத்த பிள்ளை, நாடகமாடி, உன்னை அழைத்து வந்து விட்டுட்டுப் போயிட்டான்... பார்க்க பாவமாத்தான் இருக்கு... இரு ஏற்பாடு செய்யறேன்.''
''இல்லைங்க ஐயா,'' என்றவள், இடுப்பில் சொருகியிருந்த சுருக்கு பையிலிருந்து மாங்கல்யத்தை எடுத்தாள்.
''இது, என் தாலிங்க... தங்கத்தில் செய்தது... இதை விற்று, எனக்கு பணம் வாங்கித் தாங்க... ஆசிரமத்துக்குப் போகலைங்க... கோவில் வாசலில், பூ வியாபாரம் செய்து பிழைச்சுக்கிறேன்.''
''என்னம்மா சொல்ற... நல்ல இடத்தில் சேர்த்து விடறேன்... கவலைப்படாதே!''
''இல்லைங்க ஐயா... இங்கேயே இருக்கேன்... என் பிள்ளை, 'இங்கேயே இரும்மா... வந்து கூட்டிட்டுப் போறே'ன்னு சொல்லித்தான் விட்டுட்டு போனான்... நானும், 'காத்துக்கிட்டு இருப்பே'ன்னு சொன்னேன்... இப்ப ஏதோ ஒரு வேகத்தில் போயிருக்கலாம்...
''நிச்சயம் ஒரு நாள் என்னை தேடி வருவான்... அப்ப இந்த அம்மாவை காணாமல் அவன் தவிச்சு போயிடக் கூடாது... அவன் திரும்ப வருவான்கிற நம்பிக்கையோடு, கோவில் வாசலில் பூ விற்று பிழைச்சுக்கிறேன், ஐயா... அதுக்கு மட்டும் வழி பண்ணுங்க!''
கைகூப்பி கண்ணீர் மல்க கெஞ்சும் அந்தத் தாயை, பரிதாபப் பார்வை பார்த்தனர், அங்கிருந்தோர்.

பரிமளா ராஜேந்திரன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X