பேராசைக்கு கிடைத்த பரிசு! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
பேராசைக்கு கிடைத்த பரிசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2019
00:00

நம் பொருள் மீது நமக்கு உள்ளது, பற்றுதல்; அடுத்தவர் பொருள் மீது நமக்கு உள்ளது, ஆசை.
ஆசை அறுமின்கள்... ஆசை அறுமின்கள்... எனத் திருமூலரும், ஆசைக்கோர் அளவில்லை... என, தாயுமான சுவாமிகளும், சொன்னதன் பொருள், இப்போது புரிந்திருக்குமே!
எளிமையாக சொல்லப் போனால், முறையானது பற்று; முறையற்றது ஆசை.
ஆசையை விட, பேராசை பற்றி கேட்கவே வேண்டாம். பொன் முட்டையிடும் வாத்து கதை; மகாபாரதத்தில் வரும், ஸ்வர்ணஷ்டீவி கதை ஆகியவை, பேராசை பெரு நஷ்டம் என்பதை விளக்குபவை.
அந்த வரிசையில் ஓர் அபூர்வமான கதை இது.
ஜயசேன மகாராஜர் என்பவர், ஒரு ஜைன திருக்கோவில் கட்ட ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். பணியாளர்கள் பலர், அத்திருக்கோவில் பணிக்காக, செங்கற்கள் எடுத்து வரும் பணியை செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் வரும் வழியில், உலாலுபேன் என்பவர், புட்டு விற்கும் கடை வைத்திருந்தார். அவருக்கு, செங்கற்கள் சில தேவையாக இருந்தன. அதனால், செங்கற்கள் எடுத்து வரும் பணியாளர் ஒருவருக்கு, புட்டு கொடுத்து, அவரிடமிருந்து சிலவற்றை, தன் வேலைக்காக வாங்கி வைத்தார்.
அவ்வாறு வாங்கி வைத்த செங்கல் ஒன்றில், பொன் துண்டு ஒன்று இருந்தது.
'ஆகா... இதேபோல, ஒவ்வொரு செங்கல்லிலும் தங்கம் இருக்கும் போலிருக்கிறதே...' என்று, வியாபாரியின் மனம், கும்மாளம் போட்டது.
பிறகென்ன, ஏற்கனவே பழக்கப்பட்ட பணியாளருக்கு, மேலும், புட்டு கொடுத்து, தினமும் சில செங்கற்களை வாங்கி வைக்கத் துவங்கினார்.
ஒருநாள், வியாபாரி, அயலுாரில் உள்ள தன் மகள் வீட்டிற்கு போய் வர நினைத்தார். திரும்பி வரும் வரை, செங்கற்கள் வாங்கி வைக்கும் வேலையை நிறுத்த விரும்பாத வியாபாரி, தன் மகனிடம் தகவலை சொல்லி, மகள் வீட்டிற்குப் போனார்.
சில நாட்கள் கழித்து திரும்பி வந்ததும், திகைத்தார். காரணம்... வியாபாரி சொன்ன, செங்கற்கள் வாங்கி வைக்கும் வேலையை மகன் செய்யவில்லை.
'நிறைய செங்கற்களை வாங்கி வைத்திருப்பான், மகன்; நிறைய தங்கம் கிடைக்கும்...' என்று எண்ணிய வியாபாரி, கொதித்துப் போனார்.
கோபத்தின் விளைவாக, மகனை தலையில் அடித்தார்; ஊருக்கு போன, தன் கால்களையும் அடித்துக் கொண்டார்.
அவருடைய செயல், அரசருக்குத் தெரிந்தது. சேவகர்களை விட்டு, இழுத்து வரச்செய்து, தண்டனை அளித்தார்.
பேராசை பட்ட வியாபாரி, அரச தண்டனை பெற்றதுடன், பெருத்த நஷ்டமடைந்தார்.
ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ, இருப்பதை வைத்து திருப்தியடையாதவன், எவ்வளவு கிடைத்தாலும், திருப்தி அடைய மாட்டான் என்பது, ஞானிகள் வாக்கு!

பி.என்.பரசுராமன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X