சென்னை, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில், 900க்கும் மேற்பட்டோர், பல்வேறு பிரச்னைகளால், மனநலம் பாதிக்கப் பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், ஓரளவு குணமடைந்தோருக்கு, சுயதொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், தோட்டம் அமைத்து, காய்கறி பயிரிடுவது, கைவினைப் பொருட்கள் மற்றும் பேக்கரி பொருட்களை தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இவர்கள் தயாரிக்கும் பொருட்களை, மனநல காப்பகத்தினர், பல்வேறு இடங்களில் விற்பனை செய்து, கிடைக்கும் வருவாயை, தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மனநல காப்பக இயக்குனர் கூறுகையில், 'காப்பக வளாகத்தில், இயற்கை சூழலை உருவாக்கும் வகையில், மூலிகை சார்ந்த பல்வேறு வகையான செடிகள் நடப்பட்டுள்ளன. தோட்டக்கலை மூலம், பீர்க்கங்காய், சுரைக்காய் போன்ற காய்கறிகளும், பப்பாளி, வாழை போன்ற பழ வகைகளும், பருவநிலைக்கு ஏற்ப பயிரிடப்படுகின்றன.
'பேக்கரியில், பிஸ்கட், குக்கீஸ் மற்றும் பிரட் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை போன்றவற்றில், விற்பனை செய்யப்படுகிறது.
'தோட்டக்கலை மற்றும் பேக்கரி பணிகளில், ஆண்கள் ஈடுபடுகின்றனர்.
'கூடை முடைதல், மென் பொம்மைகள், மர பொம்மைகள், சுவர் ஓவியங்கள், துணியாலான கைப்பை மற்றும் பணப்பை போன்ற, கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பணியில், பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இக்கலைகளை பயிற்றுவிக்க, தனித்தனி பயிற்சியாளர்கள் உள்ளனர்.
'மனநல காப்பகம் பயிற்சி அளிப்பது ஒருபுறம் இருந்தாலும், மனநோயாளிகள் தயாரிக்கும் பொருட்களை வாங்க, யாரும் முன்வருவதில்லை என்பது வருத்தமளிக்கிறது.
'உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய, அரசு வழிகாட்ட வேண்டும். இதுவே, அவர்களின் விருப்பமாக உள்ளது...' என்றார்.
ஆர். ராஜேஷ்