உணவின் கதை: சுர்..ரென ருசிக்கும் மிளகாய்! | பட்டம் | PATTAM | tamil weekly supplements
உணவின் கதை: சுர்..ரென ருசிக்கும் மிளகாய்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
00:00

பசி வயிற்றைத் தகிக்க, உணவைச் சாப்பிட ஆவலோடு அமர்ந்திருக்கிறீர்கள். தட்டில் பரிமாறும் உணவில் வாசனைப் பொருட்கள் இல்லையென்றால்கூட பரவாயில்லை; உப்பும், காரமும் இல்லையென்றால், எப்படியிருக்கும்? கையில் எடுக்கும் கவளச்சோறுகூட, நாக்கைத் தாண்டி வயிற்றுக்குச் செல்லாது. இந்த வாரம் உணவுக்கு கார சார ருசியேற்றும் மிளகாய் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.
மிளகாயின் தாய்வீடு, தென் அமெரிக்காவைச் சேர்ந்த போல்வியா. தென் அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் காரத்திற்கு புகழ்பெற்ற பல்வேறு வகை மிளகாய் ரகங்கள் விளைகின்றன. இந்தியாவில் கோவாவில் காலடி எடுத்து வைத்த போர்ச்சுகல் வணிகர்கள், நமக்கு மிளகாயை முதன்முதலாக அறிமுகப்படுத்தினர்.
இந்தியாவின் தென்பகுதியில் மிளகாய் அறிமுகமாகி, 250 ஆண்டுகளுக்குப் பிறகே மராட்டியர்கள் அதைப் பயன்படுத்தத் தொடங்கினர். உலக அளவில் இந்தியா மிளகாய் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது. மிளகாய் ரகங்களுக்குப் புகழ்பெற்ற ஆந்திரத்தின் குண்டூரில், 75% மிளகாய் வகைகள் விளைகின்றன.
இந்தியா, பல்வேறு நாடுகளுக்கு மிளகாயை ஏற்றுமதியும் செய்கிறது. இந்தியாவில் மட்டும் 200 ரக மிளகாய்கள் விளைகின்றன. அதில், குண்டூரில் மட்டும் 36 வகைகள் உண்டு.
தேஜா, பயாதாகி போன்ற பெயர்களைக் கேட்டு இருக்கிறீர்களா? ஊம். ஒருவேளை கார சார உணவுப் பிரியராக இருந்தால், மேற்சொன்ன மிளகாய்களின் ருசியை அறிந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. நவீன காலத்தில் மிளகாய் ரகங்களை ஆய்வுசெய்து, மரபணு மாற்றப்பட்ட மிளகாய் ரகங்கள் வரத்தொடங்கின.
அவற்றுக்கு, LCA 224., LCA 225 போன்ற வரிசையில் பெயர் சூட்டினர். மிளகாய் விளைய ஏதுவான பகுதி, ஆந்திரத்தின் குண்டூர். அந்தப் பகுதி முழுவதும் உள்ள கருப்பு கரிசல் மண் அமைப்புதான் இதற்குக் காரணம். இம்மண்ணில் எப்போதும் ஈரப்பதம் தங்கியிருக்கும் என்பதால், மிளகாய் அறுவடை பட்டையைக் கிளப்புகிறது.
தமிழகம், கர்நாடகம், கோவா, இராஜஸ்தான், மணாலி, வடகிழக்கு மாநிலங்களிலும் வித்தியாசமான மிளகாய் ரகங்களைக் காணலாம். சிறப்பங்காடிகளிலும், வீடுகளிலும் காஷ்மீர் மிளகாய்த் தூள் புகழ்பெற்று வருகிறது. உண்மையில் காஷ்மீரில் விளைவது, 'ஸ்ட்ரீன்' ரக மிளகாய். இது அந்த ஊரின் தேவைக்கே போதாது. அப்படியிருக்க இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு எப்படிக் கிடைக்கும்? இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஸ்ட்ரீன் ரக மிளகாய், மரபணு மாற்றம் செய்து விளைவிக்கப்படுகிறது.
இதுதான் காஷ்மீர் மிளகாயாக நம் சமையலறையை அலங்கரிக்கிறது. இம்மிளகாயில் காரம் இருக்காது; ஆனால், சிவப்பு நிறம் மட்டும் அடர்த்தியாக இருக்கும்.
ஆந்திரத்தின் மிளகாய் காரத்திற்கே ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பீர்கள் என்றால், நாகாலாந்து மிளகாய் அதையெல்லாம் மிஞ்சும் ரகம். ஐந்து கிலோ கறி சமைக்க, அந்த ஊர் ஓட்டல்களில் ஒரே ஒரு மிளகாய்தான் போடுவார்களாம். அப்படியொரு அபார காரம்.
மிளகாயில் இத்தனை ரகங்கள் உருவாக முக்கிய காரணம், இந்தியாவில் உள்ள பல்வேறு நிலப்பரப்பும், கலாசார தன்மையும்தான். இந்தியாவின் தென் பகுதிக்கு மெல்லிய சிவப்பான மிளகாய், வட இந்தியாவிற்கு அடர் நிறம் கூடிய மிளகாய் பயன்பாட்டில் உள்ளது.
ஆந்திரத்தில் ஊறுகாய் விற்பனையாளர்கள், 'கொல்லபடு' எனும் ரக மிளகாயைப் பயன்படுத்துவார்கள். சிவப்பு நிறம் இல்லாத மிளகாய் இது. உணவில் காரத்திற்கு, முன்னர் மிளகு பயன்படுத்தி வந்தவர்கள் தமிழர்கள்.
இன்று விலை குறைவாக, எளிதாகக் கிடைக்கும் மிளகாயின் ருசிக்கு பழக்கப்பட்டுவிட்டோம். காரச்சுவையை ருசிப்பதோடு, அறுசுவையையும் உணவில் சேர்த்தால்தான் ஆரோக்கியம் என்பதை என்றுமே மறந்துவிடாதீர்கள்.

காஷ்மீர் மிளகாய் - இமாச்சலம்
தேஜா - குண்டூர், ஆந்திரம்
குண்டு மிளகாய் - தமிழகம்
பூட்ஜோலோக்யா - நாகாலாந்து

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X