காரத்தை சமப்படுத்த இனிப்பு தேவை அல்லவா? அதற்குத்தான் மைசூர்பாவின் கதை. இந்தியா முழுக்க பிரபலமான இனிப்பான மைசூர்பாவை, பலரும் வீட்டில் செய்ய முயற்சித்திருப்பீர்கள். நாக்கில் போட்டவுடன் கரையும் மைசூர்பாவின் பிறப்பிடம், மைசூரின் அம்பா பேலஸ். தென்பகுதியில் வாழ்ந்த மன்னர்கள், புதுப்புது உணவு வகைகளை உருவாக்கி ரசித்து சாப்பிட்டு இருக்கிறார்கள். விருந்துகளின்போது தம் பெருமையை நிலைநாட்ட, புது ரெசிபிகளைச் சமைத்து விருந்தாளிகளை பிரமிக்க வைத்திருக்கின்றனர்.
மைசூர் மகாராஜா நால்வடி கிருஷ்ணராஜாவுக்கு, தன் அரண்மனையில் உள்ள காகசுரா மாதப்பாவின் மேல் பெரும் மதிப்பு. ஏன் தெரியுமா? அவர்தான் அந்த அரண்மனையின் தலைமை சமையல்காரர். இயல், இசை, நாடகம் எல்லாம் மன்னர்களின் அறிவுப்பசிக்கு உணவு. ஆனால் வயிற்றுக்கு? நால்வடி கிருஷ்ணராஜா, தீவிரமான சாப்பாட்டுப் பிரியர். தினமும் மைசூர் அரண்மனையில் மாதப்பாவின் கைகள் பல அற்புத உணவு வகைகளைச் செய்தன. ஒரு நாள் மாதப்பாவிற்கு புதிதாக இனிப்பு செய்து பார்க்கலாமே என்று தோன்றியது. அன்று, உணவுவேளை நெருங்கியதால், குறைந்த நேரத்தில் இனிப்பைத் தயாரிக்கும் நெருக்கடி.
அப்போது அவர் கண் முன்னால் இருந்தது கடலை மாவு, சர்க்கரை, நெய் ஆகிய மூன்று பொருட்கள்தான். குறைந்த நேரத்தில் மூன்றையும் கலந்து இனிப்பைத் தயாரித்தே விட்டார் மாதப்பா. அன்றைய நாளின் வழக்கமான உணவு வகைகளை முதலில் பரிமாறினார். கடைசியாக அந்த இனிப்பை மன்னருக்குப் பரிமாறிவிட்டு, மன்னரின் முகத்தைக் கவனித்தார். இனிப்பு நாவில் கரைந்த விநாடி, மன்னர் அதன் சுவையில் சொக்கிப்போனார். மன்னர், இனிப்பின் பெயரைக் கேட்ட நொடியில், சட்டென்று 'மைசூர் பாகா' என்றார். கன்னட மொழியில் 'பாகா' என்றால் சர்க்கரைப் பாகு என்று பொருள். அதில் ஊரையும் சேர்த்துக் கொண்டு, 'மைசூர் பாகா' என பெயரிட்டுவிட்டார்.
அப்புறம் என்ன? அரண்மனைக்கு வரும் விருந்தினர்களுக்கு அந்த இனிப்பு வழங்கப்பட, மைசூர் பாகா புகழ் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. அரண்மனையில் மன்னர்கள் மட்டும் சுவைத்து மகிழ்ந்த, அபூர்வ இனிப்பை பலரும் அதே சுவையில் சாப்பிட வேண்டும் என்று அப்போதைய மன்னர் ஜெய சாமராஜேந்திர உடையார் விரும்பினார்.
அதையடுத்து, மாதப்பாவை அரண்மனை வாசலில் சிறிய கடை போட ஊக்கம் தந்தார். 1957இல் மைசூர் அரண்மனைக்கு வெளியே சாயாஜி ராவ் சாலையில் தொடங்கப்பட்ட குரு ஸ்வீட்ஸ் இன்றும் அதே பாரம்பரியத்துடன் செயற்பட்டு வருகிறது.