சிரித்தால் முத்து உதிரம்! (3) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
சிரித்தால் முத்து உதிரம்! (3)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2019
00:00

சென்ற வாரம்: விக்கிரமாதித்தனை ஒழிக்க, முத்துப்பட்டினத்தில், நல் முத்துக்கள் வாங்க அனுப்பினான், மகேந்திரபுரி அரசன் விமலேந்திரன். இனி -


'ஆமாம் தம்பி... அந்த முத்துக்கள், கடலில் எடுப்பவை அல்ல; இங்கிருந்து, 10 காத துாரத்தில் உள்ள முத்துப்பட்டினத்தில் வசிக்கும், முத்துநகை என்ற பெண் சிரித்தால், முத்து உதிரும். அவள், ஒரு முனிவரிடம் சிறைப்பட்டதால், சிரிப்பதில்லை; துக்கமாக இருக்கிறாள். நல்முத்துக்கள் உதிராததால், விற்பனைக்கு வருவதில்லை...' என்றார் முத்து வியாபாரி முத்து வீரப்பர்.
முத்துப்பட்டினம் சென்றார் விக்கிரமாதித்தன். அங்கு, மக்கள் உறக்கத்தில் இருந்தனர். ஊரே பாழடைந்து கிடந்தது. முத்துநகை இருக்குமிடத்தை அறிந்து வர, வேதாளத்தை அனுப்பினார்.
சற்று நேரத்தில் திரும்பி வந்த வேதாளம், 'அரசே... அந்த முனிவர் மிகவும் முன் ஜாக்கிரதையுள்ளவர். வெளியே செல்லும் போது, முத்துநகையின் தலையை வெட்டி, வாசலில் தொங்க விட்டுச் செல்கிறார். மாபெரும் யாகம் ஒன்றை செய்து வருகிறார். அது பூர்த்தியானதும், அவருக்கு அஷ்டமா சித்திகள் கிடைத்து விடும். அதன்பின், ஊர் மக்களை எழுப்பி, முத்துநகையை திருமணம் செய்யப்போகிறார்...' என்று கூறியது.
'முத்துநகையை உயிர்ப்பிக்க வழி என்ன...' என்று கேட்டார் விக்கிரமாதித்தன்.
'அரசே... இந்த வீட்டுக்குள், ஒரு கட்டிலின் மீது, முத்துநகையின் தலையில்லா உடல் இருக்கிறது. கட்டிலின் அடிப்புறத்தில், ஒரு பிரம்பு இருக்கிறது. அதில் ஒரு கணு தென்படும்; அந்த கணுவைத் திருகினால், ஒரு தைலம் வெளிப்படும். அந்த தைலத்தை வெட்டப்பட்ட தலையில் தடவி, உடலுடன் சேர்த்து, அந்த பிரம்பால் தடவினால், உயிர் பெற்று எழுவாள்...' என்றது.
வேதாளம் கூறியவாறு செய்ய, முத்துநகை உயிர் பெற்று எழுந்து, 'தாங்கள் யார்... எதற்காக இங்கு வந்தீர்; முனிவர் திரும்பி வந்தால், சாபமிட்டு பொசுக்கி விடுவார்...' என்று பதறியபடியே கேட்டாள்.
'நான் உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தின் அதிபதி விக்கிரமாதித்தன்; உன்னையும், இந்த ஊர் மக்களையும் விடுவிக்க வந்திருக்கிறேன்...' என்றார்.
இதைக் கேட்டதும் முத்துநகை சிரித்தாள்; அவள், வாயிலிருந்து முத்துக்கள் உதிர்ந்தன. அவற்றை வாரி, கைப்பையில் போட்டு, இடுப்பில் செருகியபடி, 'பெண்ணே... நீ சிரித்ததன் காரணம் என்ன...' என்றார் விக்கிரமாதித்தன்.
'ஐயா... உங்களுக்கு பயந்து தான், என் தலையை துண்டித்து, வைக்கிறார் முனிவர். அவரது எண்ணத்தில், மண் விழுந்ததே என்று நினைத்ததும், சிரிப்பு வந்தது...'
'பெண்ணே... முனிவர் வரும் போது, சமயோசிதமாக நடந்து, அவரைக் கொல்லும் உபாயத்தையும், ஊர் மக்கள் சாபம் தீரும் வழியையும் கேட்டு அறிந்து கொள். சிறிதும் சந்தேகம் ஏற்படக்கூடாது. துளி தவறினாலும், என் திட்டம் பாழாகி விடும்...'
'கவலைப்படாதீர்... அவருக்கு சந்தேகம் எழாமல் கேட்டு அறிகிறேன்; நாளைய தினம், இங்கு வாருங்கள்...' என்று விடை கொடுத்தாள் முத்துநகை. அவளை பழைய நிலையில் வைத்து புறப்பட்டார் விக்கிரமாதித்தன்.
அன்று -
யாகம் முடித்து, திரும்பிய முனிவர், முத்துநகையை உயிர்ப்பித்தார். வழக்கமாக நடுங்கும் முத்துநகை, அன்று புன்னகை புரிந்தாள்.
வியப்புடன், 'பெண்ணே... என்றுமில்லாம் இன்று, நீ புன்னகை புரியக் காரணம் என்ன...' என்றார் முனிவர்.
'முனிவரே... சர்வ சக்தி மிக்க உங்களை, எவராலும் வெல்ல முடியாது; அவ்வாறு இருக்க, வீணாக, உங்களுடன் பகை கொள்வதை விட, தங்கள் பேச்சைக் கேட்டால், சகல சவுபாக்கியங்களுடன் வாழலாம். அது மட்டுமல்ல, என் ஒருத்தியின் பொருட்டு, இந்த ஊர் மக்கள் சபிக்கப்பட்டு இருக்கின்றனர். உங்கள் விருப்பப்படி நடந்தால், அவர்கள் சாபம் விமோசனம் ஆகும் அல்லவா...' என்றாள் முத்துநகை.
'அப்படி வா வழிக்கு... என் யாகம் முடிவடைய, இன்னும், மூன்று நாட்கள் இருக்கின்றன. அது முடிந்ததும், அஷ்டமா சித்திகளும் கிடைத்து விடும். பின், உன் பெற்றோரையும், இவ்வூர் மக்களையும் எழுப்பி விடுகிறேன்; அவர்களின் உயிர்களை, ஒரு செப்புக்குடத்தில் இட்டு, இவ்வூர் கோவில், பலி பீடத்தின் கீழே புதைத்து இருக்கிறேன்...
'அந்த செப்புக் குடத்தை எடுத்து, பலி பீடத்தின் மீது உடைக்க வேண்டும். அதன்பின், உன் பெற்றோரும், ஊர் மக்களும் பிழைத்தெழுவர். இன்னும், மூன்று நாட்கள் பொறுத்திரு...' என்றார் முனிவர்.
'இவ்வளவு சக்தி மிக்க தங்களை, யாராவது நேரிடையாகக் கொல்ல முடியாவிட்டாலும், தந்திரமாக கொல்ல முயலலாம் அல்லவா... பயமாக இருக்கிறது...' என்றாள் முத்துநகை.
'அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம்; என்னை வெற்றி கொள்ள வேண்டுமானால், என் தலையை ஒரே வெட்டில் வெட்ட வேண்டும். ரத்தம், எதுவும் சிந்தக் கூடாது; தரையில் ரத்தம் சிந்தினால், அதில் இருந்து, என்போல் ஆயிரக்கணக்கான முனிவர்கள் தோன்றுவர்; அவர்களை வெல்வது கடினம்.
'வெட்டிய என் தலையை, துளி கூட ரத்தம் சிந்தாமல் எடுத்துச் சென்று, நான் வளர்க்கும் யாக குண்டத்தில் போட வேண்டும்...
'அதன் பின், என் உடல், தரையில் விழாவதாறு, மூன்றே முக்கால் நாழிகை நேரம், வானில் சுழற்றிக் கொண்டிருக்க வேண்டும். இவ்விதம், எவராவது செய்தால் தான், என்னைக் கொல்ல முடியும்; அவ்வாறு செய்யக் கூடிய எவனாவது இருப்பான் என்று நினைக்கிறாயா...' என்று சிரித்தார் முனிவர்.
'இவ்வளவு சக்தி மிக்க தங்களை, ஒருவராலும் கொல்ல முடியாது; இனி, கவலையின்றி இருப்பேன்...' என்றாள் முத்துநகை.
இந்த உரையாடலை, பல்லி உருவில் கேட்ட வேதாளம், விக்கிரமாதித்தனிடம், முழு விவரத்தையும் கூறியது. பின், முனிவரைக் கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது.
திட்டப்படி வேதாளம், 'விக்கிரமாதித்தா... இன்று மாலை, யாகத்தை முடித்து, முனிவர் வருவார். அவரது இருப்பிட இரண்டாவது வாயிற்படியில் நின்றுக் கொள்; நான், முதல் வாயிற்படியில் நின்று கொள்கிறேன். முனிவர் உள்ளே நுழைந்ததும், கதவை, 'பட்' என, சாத்துகிறேன்; அவர் திரும்பி பார்ப்பார்...
'அப்போது, ஒரே வெட்டாக தலையை வெட்டி விடு; வழியும் ரத்தத்தை எல்லாம் குடித்து, தலையை, யாககுண்டத்தில் போட்டு விடுகிறேன்... மூன்றே முக்கால் நாழிகை நேரம், உடல் தரையில் விழாத வண்ணம் பந்து போல், வானில் விட்டெறிந்து கொண்டிரு...' என்றது வேதாளம்.
மிகவும் எச்சரிக்கையுடன் முனிவரைக் கொன்றார் விக்கிரமாதித்தன்.
பின், முத்துநகையின் தலையை உடலுடன் ஒட்டி, உயிர்ப்பித்தார்; செப்புக்குடத்தை எடுத்து, பலி பீடத்தில் உடைத்தார்; உடனே, ஊர் மக்கள், துாக்கத்தில் இருந்து விழித்தது போல் எழுந்தனர். விக்கிரமாதித்தனை பாராட்டினர். அவ்வூர் மன்னன், 100 யானைகள் சுமக்கும் அளவு, பரிசுகள் அளித்தான்.
முத்துநகையை, விக்கிரமாதித்தனுக்கு மணமுடித்தனர்.
எல்லையற்ற மகிழ்ச்சியில், முத்துநகை அடிக்கடி சிரித்தாள். அப்போது, உதிர்ந்த முத்துக்களை சேகரித்து, ஒரு மூட்டையில் கட்டிய விக்கிரமாதித்தன், மகேந்திரபுரி அரசனிடம் அளித்தார்.
'நுாறு முத்துக்கள் கேட்டால், ஒரு மூட்டையே எடுத்து வந்திருக்கிறானே... இவனை ஒழிக்கவே முடியாது...' என்று திடுக்கிட்டான் மகேந்திரபுரி அரசன்.
முற்றும்.
- கண்ணப்பன் பதிப்பகம்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X