தண்ணீர் பால்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
தண்ணீர் பால்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2019
00:00

தேவனாம்பட்டியில், மாணிக்கம் என்பவன் மனைவியுடன் வசித்து வந்தான். அவனிடம் ஏராளமான மாடுகள் இருந்தன. அவற்றை பராமரித்து, பால் வியாபாரம் செய்து வந்தான். அந்த ஊர் கோவிலுக்கும் பால் கொடுப்பான்.
ஆரம்பத்தில், சுத்தமான பால் வினியோகித்தான்; போகப்போக தண்ணீர் சேர்த்து, கலப்படம் செய்ய ஆரம்பித்தான்.
அந்த ஊரில் வேறு யாரும் பால் வியாபாரம் செய்யவில்லை. போட்டி இல்லாததால் மனம்போன போக்கில் செயல்பட்டுவந்தான்.
'பால் ரொம்ப தண்ணியா இருக்கு; தயிர் வரவே மாட்டேங்குது...' என்று, புகார் செய்தனர், ஊர் மக்கள்.
'வெயில் அதிகமானதால், மாடுகள் நிறைய தண்ணீர் குடிக்குது; அதனால பால் நீர்த்துப் போகுது...' என்று கூறி சமாளித்தான்.
ஒரு நாள் -
கோவில் பூசாரி அவனை அழைத்து, 'இதோ பார் மாணிக்கம்... நீ தரும் பால் ரொம்ப தண்ணியா இருக்கு; மாடுகளுக்கு பருத்திக் கொட்டை, புண்ணாக்கு வைக்கிறியா, இல்லையா...' என்று கேட்டார்.
'வைக்கோல் வாங்கிப் போடவே வருமானம் பத்தல; புண்ணாக்கு, பருத்திக்கொட்டை வாங்க பணத்துக்கு எங்கே போறது...' என்றான்.
'ஏற்கனவே பால் நீர்த்து இருக்கும் போது, எதுக்கு தண்ணீர் கலந்து, ஊர் மக்களை ஏமாத்தற... போதாதற்கு கடவுளுக்கு அபிஷேகம் செய்ற பாலையும் மோசம் செய்ற... கலப்படம் செய்தால், தெய்வத்துக்கு பொறுக்காது; மனசாட்சிக்கு பயந்து, நேர்மையாக வியாபாரம் செய்...' என, எச்சரித்தார்.
அவன் கண்டுகொள்ளவேயில்லை. பால் விற்ற பணத்தில், மனைவி பவுனாம்பாளுக்கு, தங்க சங்கிலி, வளையல், வெள்ளி கொலுசு என, நகைகள் வாங்கி கொடுத்தான்; ஆடம்பரமாக வாழ்ந்தான்.
ஒரு நாள் -
ஆற்றில் குளிக்கப்போனாள் பவுனாம்பாள். அணிந்திருந்த தங்க வளையல்கள் தொளதொளப்புடன் இருந்ததால், கழற்றி துணி துவைக்கும் கல்லில் வைத்தாள். பின், மூழ்கி நன்றாக குளித்தாள்.
ஆற்றில் நீரோட்டம் அதிகரித்தது. துவைக்கும் கல்லில் வைத்திருந்த வளையல்களை, நீர் அடித்து சென்றது. பவுனாம்பாள், கழுத்தில் தடவிப் பார்த்தாள்; அணிந்திருந்த தங்கச் சங்கிலியைக் கூட காணவில்லை; ஆற்றில் விழுந்துவிட்டது.
'ஐயோ... நகைகள் நீரில் போயிடுச்சே... என்ன செய்வேன் ஆத்தா...' என்று, தலையிலும், மார்பிலும் அடித்து கதறினாள்.
ஊர் மக்கள் திரண்டு வந்து ஆற்றில் தேடியும் கிடைக்கவில்லை.
கோவில் பூசாரி அங்கு வந்தார். அழுதுகொண்டிருந்த மாணிக்கம், பவுனாம்பாளை தேற்றியவர், 'கலப்படம் செய்யாதேன்னு சொன்னேன்; எல்லாரையும் ஏமாத்தினே... அவங்க வயிற்றெரிச்சல் வீணா போகுமா; அதனால் தான், நகையெல்லாம் தண்ணியில போச்சு... இனிமேலாவது, மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நேர்மையாக வியாபாரம் செய்து சம்பாதிக்கும் வழியைப் பாரு...' என்று அறிவுரை கூறினார்.
அவர் காலில் விழுந்து, 'இனிமேல் கலப்படம் செய்ய மாட்டேன்...' என்று மன்னிப்பு கேட்டான்.
குட்டீஸ்... ஏமாற்றி சம்பாதித்த பணம் நிலைக்காது; நேர்மையை கடைபிடித்து, உயர்வாக வாழப் பழக வேண்டும்!

ஆர்.ராஜலட்சுமி

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X