பசுமை புரட்சிக்கு அடித்தளமிட்ட விஞ்ஞானி பெஞ்சமின் பியரி பால். பஞ்சாப் மாநிலம், முகுந்த்பூரில், 1906ல் பிறந்தார். கோதுமை விளைச்சலால் புகழ் பெற்ற ஊர் அது!
பள்ளியில் படித்த போதே, தாவரங்கள் மீது நாட்டம் கொண்டார். அவரது வீட்டின் பின்புறம், பெரிய தோட்டமிருந்தது. அங்கு, தாவரங்களின் வளர்ச்சியை, அணு அணுவாக ரசித்து கவனித்து வந்தார். கல்லுாரியில் தாவரவியல் படித்தார்.
ஆசியா கண்டம், பர்மாவில் கல்லுாரி படிப்பை முடித்தார். ஐரோப்பா கண்டம், இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், டாக்டர் பட்டம் பெற்றார். 'இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் அக்ரிகல்ச்சர்' என்ற நிறுவனத்தில், பணியில் சேர்ந்து, கோதுமை பயிர் பற்றி ஆய்வு செய்தார்.
இந்தியாவில், கோதுமை விளைச்சல் படுமோசமாக இருந்த காலம் அது. எனவே, கோதுமை பயிரில், உயர் விளைச்சல் ரகங்களை உருவாக்க தீவிர முயற்சி எடுத்தார். பூச்சி தாக்குதலால் பயிர் அழிந்து, மகசூல் இழப்பு ஏற்படுவதை கண்டார். அவை தாக்காத வித, கோதுமை ரகங்களை உருவாக்க முடிவு செய்தார்.
கடும் முயற்சியுடன், 18 ஆண்டுகள் ஆய்வு நடத்தி, பூச்சி தாக்குதலை தாக்குப் பிடிக்கும் திறனுள்ள, 'என்.பி.809' என்ற உயர் விளைச்சல் ரக கோதுமையை உருவாக்கினார். இச்சாதனையை, உலகமே பாராட்டியது. அவரது கண்டுபிடிப்பால், கோதுமை சாகுபடியில் பெரும் புரட்சி ஏற்பட்டது. இந்தியாவில் பசுமை புரட்சி ஏற்பட வழி வகுத்தது.
இந்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி மையத்தில், இயக்குனராக நியமிக்கப்பட்டார். அங்கு, ஆய்வுக்காக, பிரத்யேக தோட்டம் ஒன்றை அமைத்து, 40க்கும் மேற்பட்ட ரோஜா செடிகளை வளர்த்தார். ஒவ்வொன்றும் தனி அழகுடன் மிளிர்ந்தன. தாவரங்களை, குழந்தை போல பாவித்தார்.
தாவரவியல் பற்றி பல நுால்கள் எழுதினார். குறிப்பாக, 'தி ரோஸ் இன் இண்டியா' என்ற நுால், உலக புகழ் பெற்றது. அவரது அளப்பரிய சாதனைகளுக்காக, பல விருதுகள் தேடி வந்தன. 1987ல், பத்மவிபூஷன் விருது வழங்கி, நம் அரசு கவுரவித்தது.
இந்திய வேளாண் துறைக்காக, வாழ்நாளை அர்ப்பணித்த தாவரவியல் மேதை, பி.பி.பால், செப்., 14, 1989ல் மறைந்தார்.