தெய்வத்தொட்டி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
00:00

''த... இப்ப, நீ இஸ்கோலுக்கு போப்போறியா... இல்லியா?'' உச்சஸ்தாயியில் கத்தினாள், முத்தம்மா.
''ம்மா!''
''இந்த, டக்கால்டி வேலல்லாம் என்னாண்ட வேணா... சொல்ட்டேன், மருவாதயா இஸ்கோலுக்கு போ.''
''ம்மா... போம்மா,'' என்று கோபமானான், தங்கதுரை.
''அம்மாவாண்ட, ராங் காட்டாத ராங் காட்டாதன்னு எத்தினி தபா சொல்லிகீரன்,'' என்று கத்தியபடியே, தங்கதுரையை விளாசினான், தந்தை, மாரியப்பன்.
''ஆ... ஐயோ... அடிக்காத நைனா... ஆ... வலிக்கிது,'' என்று, துள்ளிக் குதித்து ஓடினான், தங்கதுரை.
''த... சொம்மா கெட... புள்ளைய, இப்டி அட்ச்சிகினே கெடந்தா, அவன் எப்டி, நீ சொல்ற பேச்சு கேப்பான்... அறிவில்ல,'' கணவனை வசை பாடினாள், முத்தம்மா.
''ஏண்டீ, ஆரப் பாத்து, அறிவில்லன்னு கேக்கற... இம்மாந் நேரமா, நீதான், அவன கயுவி கயுவி ஊத்திகினு கிடந்த... இப்ப, என்னெய சொல்றியா... உனுக்கு சப்போட்டு பண்ணேன் பாரு, என்னிய சொல்லணும்... சோத்தப் போடு, வேலக்கு நேரமாச்சி,'' என்று அங்கலாய்த்தபடி, சீருடையை அணிந்து வந்தான், மாரியப்பன்.
தனியார் நிறுவனத்தில், குப்பை அள்ளுபவனாக பணிபுரிகிறான், மாரியப்பன். மனைவிக்கு, இந்த வேலை பிடிக்கவேயில்லை. போயும் போயும், குப்பை வாறும் பணியா என்று வேதனைப்பட்டாள். அதனாலேயே, எங்கே குப்பைத் தொட்டியைப் பார்த்தாலும், அருவருப்பில் முகம் சுளிப்பாள். அக்கம் பக்கத்து வீடுகளில், வேலை செய்து வரும், சராசரி ஏழை பெண், முத்தம்மா.
மூத்தவன், தங்கதுரை, 10ம் வகுப்பு; இரண்டாமவன், தர்மதுரை, ஏழாம் வகுப்பு; கடைக்குட்டி மகளுக்கு, ஐந்து வயது. மகன்கள் இருவரும், அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். சின்னவன், வீட்டின் நிலை புரிந்து நடப்பவன், நன்றாக படிப்பான்.
ஆனால், பெரியவன், தங்கதுரை, தன்னலம் பார்ப்பவன்; படிப்பில் விருப்பம் கிடையாது. சத்துணவுக்காக தான் பள்ளிக்கே செல்கிறான். வீட்டில் சரியான சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் பிச்சை எடுக்கவோ, அவ்வளவு ஏன், கடைகளில் திருடித் தின்னவோ தயங்க மாட்டான்.
அவன் புத்தகங்கள், பாதி நாட்கள் குப்பைத் தொட்டி அருகில் தான் கிடக்கும்! முத்தம்மாவோ, தர்மதுரையோ தான் முகம் சுளித்தபடியே, புத்தகங்களை பொறுக்கி எடுத்து வருவர்.
மூன்றாவது பெண் குழந்தை, பிறந்ததிலிருந்தே நோஞ்சான் தான். வயதுக்குரிய வளர்ச்சி இல்லை. தவழ்வது, நடப்பது, பேசுவது எல்லாவற்றிலும் தாமதம். குறை பிரசவம் என்பதால், இப்படி இருக்கிறாள் என்று விட்டு விட்டனர்.
வீட்டின் கடைசி குழந்தை என்பதாலும், அனைவரும், அவள் மேல் அதீத பாசமாக இருந்தனர். சமீப காலமாக, வெளிச்சத்தில் பொருட்களை தடவிப் பார்த்து எடுப்பதும், அருகில் இருப்பவர்களை அடையாளம் தெரியாமல், தொட்டுப் பார்த்தும், குரல் கேட்டு தெரிந்து கொள்வதைப் பார்த்த பின்னரே, அவளின் நிலை அவர்களுக்குப் புரிந்தது.
அடித்துப் பிடித்து, மருத்துவரிடம் சென்றால், 'குழந்தை, வயிற்றில் இருக்கும் போதே சரியான ஊட்டச்சத்து இல்லை... அறுவை சிகிச்சை செய்தால், பார்வை திரும்ப கிடைக்கும். அதற்கு லட்ச ரூபாய் ஆகும்...' என்றார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வரை, 'குடி'மகனாக இருந்தான், மாரியப்பன். வேலைக்கு போகாமல், மனைவியின் சம்பளத்தை உரிமையாய் தட்டிப் பறித்து, குடிப்பதும்; எப்போதாவது கிடைக்கும் வேலையை செய்து, அதில் வரும் சம்பாத்தியத்தையும் குடித்தும்; வீட்டுக்கு வந்ததும், மனைவியை, கெட்ட வார்த்தைகளால் வசைபாடியபடி, கன்னாபின்னாவென்று அடிப்பதுமான, சராசரி ஏழை ஆண் மகன்.
தன் குடிப்பழக்கமே, இதற்கு மூல காரணம் என்று, மருத்துவர் கூறியதைக் கேட்டதில் இருந்து, துடித்துப் போனான். 'ஐயோ... என்னால், ஆசை மகளின் பார்வை பறிபோய் விட்டதே...' என்று மிகவும் வருந்தினான். அன்றிலிருந்து, குடிக்கு முழுக்குப் போட்டான். மகளின் அறுவை சிகிச்சைக்கு லட்ச ரூபாய் தேவை என்பதால், வேலைக்குப் போய் சம்பாதிக்கிறான்.
தங்கையின் பார்வைக்காக, அப்பா திருந்தியதைப் பார்த்த, தங்கதுரைக்கு, அப்பா - அம்மாவுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதனால், பள்ளிக்கூடம் போகாமல் வேலைக்குப் போவதாக கூறி, ஒற்றைக்காலில் நின்றான்.
ஆனால், முத்தம்மாவோ, 'நீ வேலைக்குப் போனால், கூலி வேலை தான் கிடைக்கும்... அதுவும், உங்கப்பா செய்யும் குப்பை அள்ளும் வேலை தான்... படித்தால், நல்ல வேலை கிடைக்கும். கஷ்டமோ, நஷ்டமோ,
பள்ளிக்கு சென்று நன்றாக படி...' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
அப்பாவிடம் அடிவாங்கிய, தங்கதுரை, புத்தக மூட்டையுடன், தங்கையிடம் வந்து, ''அண்ணன் இஸ்கோலுக்கு போய்ட்டு வந்துர்றேன்... நீ, 'டானிக்' எல்லாம் ஒயிங்கா குடி... அண்ணனுக்கு, 'டாட்டா' சொல்லு!''
''டாட்டாண்ணே... இஸ்கோலேந்து வரசொல்லோ, முட்டாய் வாங்க்கினு வரியா?'' என்றாள்.
''வாங்க்கினு வரேன்... டாட்டா!'' என்றவன், ''ம்மா... போய்ட்டு வரேன்,'' என்று, முறைத்தபடியே போனான். தர்மதுரையும், தங்கையிடம் கொஞ்சிவிட்டு கிளம்பினான்.
''தொர சாப்ட மாட்டானோ?'' என்றான், மாரியப்பன்.
''அவன் அப்டித்தான்... நீ கௌம்பு,'' என்று, கணவனை கிளப்பினாள், முத்தம்மா.
மாரியப்பன் கிளம்பி சென்றதும், வீட்டை பூட்டி, மகளையும் அழைத்து, வேலைக்குப் புறப்பட்டாள், முத்தம்மா.
மாலை, பள்ளியிலிருந்து வந்த தங்கதுரையும், தர்மதுரையும், கூடி கூடிப் பேசுவதும், தங்களுக்குள் எதையோ மறைத்து எடுத்துச் செல்வதுமாக இருந்ததை பார்த்த, முத்தம்மாவுக்கு, சந்தேகமாகவும், பயமாகவும் இருந்தது.
'கொஞ்ச நாட்களாக ஒழுங்காக இருந்தவன், திரும்பவும் திருடத் துவங்கி விட்டானா, தான் கெட்டது போதாதென்று, தம்பியையும் கெடுத்து விட்டானா... அவனிடம் கேட்டாலும் ஒழுங்காக பதில் சொல்ல மாட்டானே...' என, வருந்தினாள்.
''ம்மா... தங்கச்சி ஆப்ரேசனுக்கு எவ்ளோ துட்டு வோணும்மா,'' என்றான், தங்கதுரை.
''ஏண்டா, உன்னாண்ட கீதா?''
''அக்காங்ம்மா... எவ்ளோ துட்டு வோணும்... அத்த முதல்ல சொல்லு.''
''அடி செருப்பால, திரும்பியும் திருடறியா... எத்தினி தபா சொல்லிகீரன் திருடாத... திருடாதன்னு,'' சொல்லியபடியே அடிக்கத் துவங்கினாள்.
''ம்மா... திருடலம்மா... கீய கெடச்சது... இத்தப் பாரு,'' என்று, அவள் கையில் எதையோ திணித்தான்.
முதலில் எதுவும் புரியவில்லை; சில நிமிடங்களுக்கு பின்னரே, அது என்னவென்று அவளுக்கு புரிந்தது. சிறிய வைர மூக்குத்தி; பளபளவென்று கண்ணைப் பறித்தது.
''டேய்... இது, எங்கடா கெடச்சது... மெய்யாலுமே கீயதான் கெடந்துச்சா... டே, பொய் சொல்லாத, நைனா!'' என்று மிரட்டலாக ஆரம்பித்து, கெஞ்சலாக கேட்டாள்.
''ம்மா... மெய்யாலுமே கீயதான் கெடந்துச்சும்மா,'' என்றான், சின்னவன் தர்மதுரை.
''எங்கடா கெடந்துச்சு?''
''குப்பத் தொட்டியாண்டம்மா,'' என்றான், தங்கதுரை.
''வ்வே... போயும் போயும் குப்பய கிளறினீங்களாடா, ரெண்டு பேரும்... கர்மம் கர்மம்... என்னாண்ட வராதீங்கடா,'' என்று, வசவை துவங்கினாள்.
''அம்மா... இஸ்கோல்லேந்து வர சொல்லோ அம்மங் கோவிலாண்ட பெர்சா குப்ப தொட்டி கீதுல்ல... அது பக்கத்தில, ஐயிரு, பூவெல்லாங் கடாசியிருந்தாரு... அதுல தான் இருந்துச்சி... நாங்க நடந்து வரச்சொல்லோ, பளபளன்னு டாலடிச்சிதா... இன்னான்னு பார்த்தா, இது கெடச்சிதும்மா,'' என்றான், தர்மதுரை.
''இத்த வெச்சி, தங்கச்சி ஆப்ரேசன நல்லபடியா முட்சிறலாந்தானேம்மா,'' என்றான், தங்கதுரை.
முத்தம்மா ஏதோ சொல்லத் துவங்கும் முன், ''ஆத்தா... நீ கண்ணத் தொறந்துட்ட... எம் பொண்ணு கண்ண, நீதான் சரியாக்கணும்... குப்ப வார்ற வேலைல, எவ்ளோ துட்டு சேக்க முடியும்ன்னு கஸ்டமா இருந்துச்சு... நீ காப்பாத்திட்ட ஆத்தா,'' என்று கூவினான், மாரியப்பன்.
''யோவ்... வோணாய்யா... எந்த பொறப்புல, இன்னா பாவம் செஞ்சோமோ... நீ குப்ப வாரிக்கினு கெடக்கற... நம்ம பொண்ணுக்கு, கண்ணு தெரியாம பூட்சி... இப்ப, ஆத்தா நெகைய அட்சினு போனா, நம்ம புள்ளிங்களுக்கும் எதுனா ஆய்டும்யா,'' என்றாள், கண்களில் கண்ணீருடன்.
அதிர்ந்தான், மாரியப்பன்.
''அம்மா கூறுவது தான் சரி,'' என்றான், தர்மதுரை; ஆனால், தங்கதுரையோ, ''ம்மா... நா இன்ன வோணும்னேவா, ஆத்தா நெகைய அட்சிகினு வந்தன்.... கீய கெடந்த நெக தானேம்மா... ஆத்தாவா பாத்து நமக்கு ஆப்ரேசனுக்கு குடுத்திருக்கும்மா,'' என்றான்.
''இல்ல கண்ணு... ஆத்தா நெகன்னு கண்டுகினப்றம், இப்டி பேசக் கூடாது, நைனா... வா... கோவிலாண்ட போய், ஐராண்டயே குடுத்திரலாம்,'' என்றாள்.
ஆனால், தான் செய்வது சரியென்று வாதாடினான், தங்கதுரை.
அப்போது, அவர்களது தங்கை, ''அண்ணே... பக்கத்து வீட்டு, பாயம்மா கூட சொல்ச்சி... 'தப்பு பண்ணா, சாமி கண்ண குத்தும்'ன்னு... நா எதோ தப்பு பண்ணிருக்கேன்... அதான், சாமி எங் கண்ண குத்திருச்சி... அண்ணே... நீயாச்சி தப்பு பண்ணாதண்ணே... இல்லாங்காட்டி, சாமி உங் கண்ணையும் குத்திருண்ணே,'' என்றாள், அழுகையுடன்.
''ஆமாண்ணே... ஆத்தா, நமக்கு உதவி பண்ணணும்னா, வேற எப்டியாச்சும் பண்ணும்ணே... ஆத்தா நெகய, திருப்பி குடுத்திரலாம்ணே,'' என்றான், தர்மதுரை.
இதைக் கேட்டு, மவுனமானான், தங்கதுரை.
மகளை வாரியணைத்து, அழுத முத்தம்மாவை, சமாதானப்படுத்தி, அனைவரையும் கோவிலுக்கு அழைத்து சென்றான், மாரியப்பன்.
ஐவரும் கோவிலை அடைந்த போது, அங்கே பரபரப்பாக இருந்தது. அம்மனுக்கு பூஜை செய்யும், அர்ச்சகரே, மூக்குத்தியை திருடி விட்டதாக, அனைவரும் பேசிக் கொண்டனர்.
நேராக அர்ச்சகரிடம் சென்றான், மாரியப்பன்.
''நேத்து, அம்மனுக்கு மஞ்சக் காப்பு போட்டிருந்திச்சுல்ல... மஞ்சளோட சேத்து, இந்த மூக்குத்தியையும், எனக்கு ப்ரசாதமா தந்துட்டீங்க... அத்த குடுத்துட்டுப் போலாம்ன்னு வந்தோம் சாமி,'' என்று, அம்மனின் மூக்குத்தியை, அவரிடம் தந்தான்.
''அம்மா... மகமாயி... என்னை காப்பாத்திட்டம்மா,'' என்றபடி, வாங்கிக் கொண்டார், அர்ச்சகர்.
மாரியப்பனுக்கு, அர்ச்சகர் நன்றி சொல்ல, கோவில் தர்மகர்த்தா, அவனைப் பற்றி விசாரித்தார். அவரிடம், தன் குடும்பத்தைப் பற்றி கூறி, அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தான்.
அவனது மகளை பார்த்துவிட்டு, யாருக்கோ போன் செய்தார், தர்மகர்த்தா.
''கவலப்படாத மாரி... உம் பொண்ணுக்கு, ஆப்ரேஷன் செய்ய நானாச்சு... நாளைக்கு காலைல, நா சொல்ற எடத்தில போய், டாக்டரப் பாரு... கொழந்தைய அவருகிட்ட காட்டு... உனக்கு வேண்டிய உதவிய பண்ணுவாரு...
''இன்னும் ஒரு வாரத்தில, பைசா செலவில்லாம, கொழந்தைக்கு ஆப்ரேஷன் ஆய்டும்... வர ஆடி மாச திருவிழாவ, கொழந்த கண்குளிர பாப்பா... இது, நிச்சயம் நடக்கும்,'' என்று கூறி, முகவரி அட்டையை, அவனிடம் தந்தார்.
கண்களிலிருந்து வழியும் ஆனந்தக் கண்ணீருடன், அம்மனை வணங்கி, வெளியே வந்தனர், மாரியப்பன் குடும்பத்தினர்.
இப்போது, அந்த குப்பைத் தொட்டி, அவர்களின் கண்களுக்கு, தெய்வமாய் தெரிந்தது!
- அன்னபூரணி தண்டபாணி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
25-ஜூலை-201916:17:38 IST Report Abuse
M Selvaraaj Prabu அருமையான கதை. நல்ல முடிவு. நன்றாக கொண்டு போய் இருக்கிறார் ஆசிரியர். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Govindaswamy Nagarajan - Nashville, Tennessee,யூ.எஸ்.ஏ
21-ஜூலை-201902:15:36 IST Report Abuse
Govindaswamy Nagarajan This is one of the best articles ever presented by Dinamalar. Honesty brings peace, happiness and prosperity. Sri Annapurani blesses Annapurani.
Rate this:
Cancel
21-ஜூலை-201900:54:51 IST Report Abuse
S.V ராஜன்(தேச பக்தன்...) கண்கள் நீரால் குளமாகியது..இந்த ஏழ்மையான குடும்பத்தின் நேர்மையை பார்த்து.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X