எனக்கு 40 வயதாகிறது. ஆசிரியராக பணிபுரிகிறேன். இரு மாதங்களாக குரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாடம் நடத்த முடியாமல் சிரமப்படுகிறேன். இதற்கு மருத்துவ தீர்வு என்ன?
ஆசிரியர், தெருக்களில் கூவி வியாபாரம் செய்வோர், பாடகர்களுக்கு குரல் நாளங்களில் வீக்கம் ஏற்படுகிறது. நாளடைவில் கடுகளவு சின்ன கட்டியாகவோ, அதைவிட பெரியதாகவோ மாறும். இதனால் குரலில் மாற்றம் ஏற்படும். தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்து, தைராய்டு ஹார்மோன் குறைவாக உள்ளதா என கண்டறிய வேண்டும். எண்டோஸ்கோபி முறைப்படி வலியின்றி 2 நிமிடங்களில் இக்கட்டிகளை எடுத்து விடலாம். ஒரு வாரம் மாத்திரை தேவைப்படும். பத்து நாள் முதல் இரு வாரங்களில் குரல் இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம்.
45 வயதான எனக்கு மூக்கடைப்பு வந்து, வாய் வழியாக மூச்சு விடுகிறேன். மூக்கின் நுனி வரை கட்டிகள் உள்ளன. என்ன செய்ய வேண்டும்?
மூக்கில் கட்டிகள் இருப்பவர்களுக்கு தும்மல், இருமல், தண்ணீர் ஒழுகல், இளைப்பு இருக்கலாம். துவக்க கட்ட கட்டிகளை மாத்திரைகள், சொட்டு மருந்துகள் மூலம் சுருக்கலாம். அதிகமாக இருந்தால் சி.டி., ஸ்கேன் செய்து கட்டிகள் எந்த அளவிற்கு உள்ளன என கண்டறிய வேண்டும். பின் இளைப்பு இருந்தால் சரி செய்து விட்டு, எண்டோஸ்கோபி ஆப்பரேஷன் மூலம் மூக்கில் இருக்கும் கட்டிகளை அகற்றி விடலாம்.
எனக்கு 35 வயதாகிறது. தினமும் வீட்டிலும் வெளியிலும் வேலை செய்வதால் மிகவும் சோர்வடைந்து தலைவலி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு உண்டா?
தும்மல், சளி மற்றும் சைனஸ் தொந்தரவு உள்ளதா என உறுதி செய்ய வேண்டும். எந்த தொந்தரவும் இல்லையெனில் உங்களுக்கு மைக்ரைன் அல்லது டென்ஷன் தலைவலியாக இருக்கலாம். இரவு 10 நிமிடம் அமைதியாக கண்ணை மூடி உட்காருதல், பாட்டு கேட்பது, தியானம் செய்தல் பலன் அளிக்கும். டென்ஷன் மற்றும் பதட்டத்தை குறைக்க பல வகை மாத்திரைகள் உள்ளன. உங்களுக்கு எது உகந்ததோ அதை டாக்டர்களின் பரிந்துரையுடன் சாப்பிடலாம். சிலருக்கு தலைசுற்றலும் இருக்க வாய்ப்புண்டு. அதற்கான மாத்திரைகளையும் டாக்டர் தருவார். இவற்றை முறையாக சாப்பிட்டால் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பதட்டம் குறையத்துவங்கும். பின் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். ஏழு முதல் எட்டு மணி நேர துாக்கம், நேரத்திற்கு உணவு சாப்பிடுதல், அதிகமாக 'டிவி', கம்ப்யூட்டர், அலைபேசி பார்ப்பது மற்றும் பதட்டமான எண்ணங்களை தவிர்க்க வேண்டும். இதன்மூலம் இயல்புநிலைக்கு திரும்பிவிட முடியும்.
-டாக்டர் மீனா பிரியதர்ஷினி
காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்
மதுரை, 94425 24147