மனசே மனசே குழப்பம் என்ன!: குழந்தைகளுக்கு நாம் கொடுத்த குறைபாடு! | நலம் | Health | tamil weekly supplements
மனசே மனசே குழப்பம் என்ன!: குழந்தைகளுக்கு நாம் கொடுத்த குறைபாடு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
00:00

குஷ்பு சுந்தர், நடிகை:
ஆறாம் வகுப்பு வரை, மாநில பாடத் திட்டத்தில் படித்த என் மகளை, தோழிகள், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்திற்கு மாறுகின்றனர் என்பதால், ஏழாம் வகுப்பில், இவளையும் மாற்றினோம். எல்லாப் பாடங்களையும் நன்றாகப் படித்தாள்; கணக்கைத் தவிர. ஒன்பதாம் வகுப்பிற்கு சென்றபோது, டெஸ்ட் பேப்பரில், ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் வாங்கினாள். இது, எங்களுக்கு கவலையாக இருந்தது.
ஒன்பதாம் வகுப்பில், அவள் பள்ளிக்கு வந்த புதிய பிரின்சிபால், 'இவளுக்கு கணக்குப் பாடம் படிப்பதில் சிரமம் இருக்கிறது; எம்.டி.ஏ.,க்கு அழைத்துப் போவது நல்லது' என்று ஆலோசனை சொன்னார்.
எல்லா அம்மாக்களையும் போல, எனக்கும், 'என் குழந்தைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை' என்றே தோன்றியது. இருந்தாலும், குழந்தை, கணக்கு படிக்க சிரமப்படுகிறாள்; இதற்கு, ஒரு தீர்வு காண வேண்டும் என்று அழைத்துப் போனேன்.
அங்கே பல பரிசோதனைகளைச் செய்து, ஆறாம் வகுப்பில் கற்றுக் கொண்ட கணக்குப் பாடத்திற்கு பின், அவள் புதிதாக எதுவும் கற்கவில்லை; கற்றல் குறைபாடு இருக்கிறது என, உறுதி செய்தனர்.
வீட்டில் மணி பார்க்கிறாளா, கணக்குப் போடுவாளா என்று கேட்டபோது, கை கடிகாரமே கட்ட மாட்டாள்; சுவர் கடிகாரத்தில் நேரம் பார்க்கச் சொன்னால், அருகில் சென்று, முட்கள் எங்கே இருக்கிறது என்று பார்த்து, விரல்களால் எண்ணி, நேரம் பார்த்துச் சொல்லவே கஷ்டப்படுவாள் என்பதைச் சொன்னேன்.
எண்கள் எல்லாம் அவளுக்கு தலைகீழாகத் தெரிகிறது; ஆறு எழுதச் சொன்னால், ஒன்பது எழுதுவாள்; ஒன்பதை ஆறு என்று படிப்பாள்; மூன்று எழுதினால், அதற்கு முன் ஒரு கோடு போட்டு, ஆங்கில எழுத்தான, 'பி' ஆக்கி விடுவாள். அவளுக்கு கணக்குப் பாடத்தில், 'டிஸ்லெக்சியா' எனப்படும், கற்றல் குறைபாடு உள்ளது என்று உறுதியானது.
இது குறித்து, வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை. குழந்தையின் குறைகளை யாராவது கேட்டு விடுவரோ என்ற பயம் தேவையில்லை. பெற்றோர் என்ற முறையில், குறைபாடு உள்ள மரபணுவை, நாம் தான் கொடுத்திருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
குழந்தை ஒன்றைக் கற்க சிரமப்படுகிறது என்றால், வேறு ஏதாவது ஒன்றில் அதீத திறமையுடன் இருக்கும்; அதை கண்டுபிடிக்க வேண்டும். என் அண்ணன் குழந்தைக்கு, சிறு வயதிலேயே தீவிர டிஸ்லெக்சியா பிரச்னை இருக்கிறது. இன்று, அவன், திறமையான கார் டிசைனர்; விரைவில் ஜெர்மனி செல்ல உள்ளான்.
என் மகள், பென்சில் ஸ்கெட்ச் வரைவதில் கில்லாடி; 15 வயது பெண் வரைந்த ஓவியமா இது என்று பார்ப்பவர்கள் வியந்து போவர்; அவ்வளவு அற்புதமாக வரைவாள்.
அடுத்தது, எங்கிருந்து வந்தது என்று வியக்கும் அளவிற்கு, அழகுக் கலையில் அவளுக்கு உள்ள ஆர்வம், ஈடுபாடு. அழகுக் கலை வகுப்புகள், பயிற்சி பட்டறைகள் நடத்துகிறாள். இத்தனை ஆண்டுகள் நான் சினிமாவில் இருக்கிறேன், 'மேக் அப்' இப்படித்தான் இருக்க வேண்டும் என்று, எனக்கு கற்றுத் தருகிறாள். இதை எல்லாம் பார்க்கும் போது பெருமையாக உள்ளது.
இன்று உலகம் முழுவதும், 'ஆர்க்கிடெக்ட்' எனப்படும் கட்டுமானத் துறை பிரபலமடைந்து வருகிறது. இந்த துறைக்கு, யாருமே சிந்திக்க முடியாத, புதுப் புது ஐடியாக்களைத் தர, டிஸ்லெக்சியா குழந்தைகளால் மட்டுமே முடியும் என்பதால், இவர்களையே முன்னணி நிறுவனங்கள் தேர்வு செய்ய விரும்புகின்றன; படைப்பு திறன், இவர்களிடம் அதிகம்.

மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன் - எம்.டி.ஏ., சென்னை. 044 - 2815 7908 6697

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X