ஆட்டுக்குட்டியும், அமினா பாட்டியும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2019
00:00

''பா... பா... ஷேரு... பா... பா,'' என, குரல் கொடுத்தாள், ஆமினா பாட்டி.
எங்கேயோ மேய்ந்து கொண்டிருந்த, ஆட்டுக்கிடா ஷேரு, துள்ளிக்குதித்து, ஆமினாவின் அருகில் வந்து நின்றது.
அதற்காகவே வாங்கி வைத்திருந்த, அகத்தி கீரையை பிரித்து, தரையில் பரப்பினாள், ஆமினா.
வாலை வேகமாய் ஆட்டியபடியே, கீரையைத் தின்ன ஆரம்பித்தது, ஷேரு.
இரண்டு ஆண்டுக்கு முன் பிறந்த, ஷேரு, வெள்ளை வெளேர் என்று கொள்ளை அழகில், ஆங்காங்கே திருஷ்டிப் பொட்டாய் சில கருப்புப் புள்ளிகளுடன் இருந்தது. பார்த்ததும் பிடித்துப் போய், ஆசையாய் அள்ளியெடுத்து, தன் மடியில் கிடத்தி, 'ஷேரு' என பெயரிட்டாள், ஆமினா.
'ஷேரு' என்றால், சிங்கம் என்று பொருள். கொழுக் மொழுக் என்று கம்பீரமாய், முறுக்குக் கம்பியை நினைவூட்டும் கொம்புகளும், முரட்டுத்தனமான அதன் தோற்றமும், ஒரு சிங்கம் நடந்து வருவது போல் இருக்கும்.
வீட்டுக்கு பின்புற, மைதானத்தின் புல்வெளியில் மேயும் ஷேரு, சிலசமயம், சற்று தொலைவு வரை போய்விடும். கண்ணுக்கெட்டிய துாரம் வரை தென்படவில்லை எனில், தவித்துப் போவாள், ஆமினா.
இருவருக்கும் இடையே ஏதோ ஒரு பிரிக்க இயலாத பந்தம்.
''ஏலேய்... போய் ஒரு எட்டு பார்த்துட்டு வா... ஷேருவை காணோம்,'' என்பாள், பேரனிடம்.
''போ, பாட்டி... உனக்கு வேறு வேலை இல்லையா... மேயப் போனா கொஞ்ச நேரம் கழிச்சு அதுவே வந்துரும்... அத, நாம ஏன் தேடணும்?'' என்று சொல்லி, வெளியே ஓடி விடுவான், பேரன்.
அடுத்து, தன் மகனிடம் சொல்வாள், ஆமினா.
''அடடே... உன்னோட இதே தொல்லையா போச்சே... கொஞ்ச நேரம் மேய்ஞ்சுட்டு தான் வரட்டுமே,'' என, எரிச்சலடைவான், மகன், ஷேக் ஹுசைன்.
ஷேரு, வீடு திரும்பும் வரை, மைதானத்தையே வெறித்தவாறு நின்றிருப்பாள், ஆமினா.
ஒவ்வொரு பக்ரீத் பண்டிகைக்கும், குர்பானி கொடுப்பது, ஷேக் ஹுசைனின் பழக்கம். அது கடமையும் ஆயிற்றே. வீட்டில் வளர்க்கும் ஆடுகளில் இருந்தே, குர்பானிக்கு ஏற்ற, கொழுத்த கிடாவை தேர்ந்தெடுப்பான்.
பக்ரீத் பெருநாள் அன்று, காலை, ஈத் சிறப்பு தொழுகையை முடித்த கையோடு, பள்ளி வாசல் மோதினாரை அழைத்து, ஆட்டுக்கிடாவை, 'குர்பானி' கொடுப்பான். அவரும் சளைக்காமல் அழைப்பவர் வீடுகளுக்குச் சென்று, மார்க்க முறைப்படி, ஆடுகளை கழுத்து அறுத்து கொடுத்து வருவார்.
அதன்பின், உயிரற்றுக் கிடக்கும் ஆட்டின் தோலை உரித்து, தலை, கால், குடல், ஈரல் என, எல்லா உறுப்புகளையும் தனித் தனியாக பிரித்தெடுப்பார். கறியை மட்டும் மூன்று பாகங்களாக பிரித்துக் கொடுத்து விடுவார், கசாப்புகார பாய்.
ஆட்டுத் தோலை, அனாதை இல்லத்துக்கும்; சம பாகங்களாக பிரித்து வைத்திருக்கும் ஆட்டுக்கறியில், ஒரு பங்கை, ஏழை, எளியோருக்கும்; இன்னொரு பங்கை, உறவினர்களுக்கும் வழங்குவான், ஷேக் ஹுசைன். மீதி இருக்கும் பங்கில், பிரியாணி சமைத்து, வீட்டிலுள்ளோர் மகிழ்ச்சியுடன் உண்டு, பெருநாளை கொண்டாடுவர்.
பத்து, பனிரெண்டு ஆடுகள், கூட்டமாய் காலையில் சென்று, மாலையில் வீடு திரும்பும். இதுவரை, எந்த ஒரு ஆட்டுக்குட்டியும் வழி தவறியதில்லை. ஷேரு மட்டும் சற்று தாமதமாக வந்தால், பதறுவாள், ஆமினா.
வழக்கம்போல், இவ்வருஷமும் குர்பானிக்கு, ஷேரு கிடாவை தேர்ந்தெடுத்தான், ஷேக் ஹுசைன்.
''நான், இதுக்கு சம்மதிக்க மாட்டேன்... ஷேரு, என் பேரப் புள்ளை மாதிரி... அதை விட்டு என்னால பிரிஞ்சு இருக்க முடியாது... வேறு கிடாவை தேர்ந்தெடுத்துக்க,'' என்றாள்.
''வேறு கிடா இல்லையேம்மா... இது ஒண்ணு தான் குர்பானி கொடுக்கறதுக்கு ஏத்தாப்ல வளந்து நிக்குது... மத்ததெல்லாம் சிறுசாத்தானே இருக்கு,'' என்றான்.
''போடா, நீ என்ன வேணுமானாலும் பண்ணு... ஷேரு மேல கைய வெச்சே, நான் பொல்லாதவளாகி விடுவேன்,'' என, எச்சரித்தாள், ஆமினா.
ஆனால், மகன் ஒரு பிடிவாதக்காரன் என்பது, அவளுக்கு தெரியும்.
''ஏம்மா... இன்னைக்கு இல்லேன்னாலும், நாளைக்கு, குர்பானி கொடுத்துதானே ஆகணும்... இப்படியே எத்தனை நாளுக்கு விட்டு வைப்பது... எதுக்கு வீணா அடம் புடிக்கிறே... அதன் முறை வராமலா போகும்...
''நல்லா கேட்டுக்க, இந்த வருஷ குர்பானிக்கு, ஷேரு தான் லாயக்கு. இதுல ஒரு மாற்றமும் இல்ல புரிஞ்சுதா... சும்மா சின்ன குழைந்தையாட்டம் அடம் புடிச்சிக்கிட்டு நிக்காதே,'' என்று உறுதியுடன் சொல்லி விட்டான், ஷேக் ஹுசைன்.
விக்கித்து நின்றாள், ஆமினா.
பெருநாள் நெருங்க, ஒருவித பீதி பிடித்து ஆட்டத் துவங்கியது, ஆமினாவுக்கு.
'ஷேரு, என்னை விட்டு பிரிஞ்சு போயிருமா...' என, நினைக்க, துக்கம் தொண்டை குழிக்குள் உருண்டையாய் சிக்கிக் கொண்டது; இரவு துாக்கம், தொலைந்து போனது.
பெருநாளுக்கு ஒரு வாரம் இருக்கும்போது, மற்ற ஆடுகள் மைதானத்தை நோக்கி ஓட, ஷேரு மட்டும், ஆமினா பாட்டியின் அருகிலேயே இருந்தது.
சரியாக சாப்பிடவும் இல்லை; பழைய சுறுசுறுப்பும், அதனிடத்தில் இல்லை.
'ஒரு வேளை, அதன் ஆயுள் ஒரு வாரம் தான் என்பது, தெரிந்து விட்டதா?' கவலையுடன் அதை தடவிக் கொடுத்தாள், ஆமினா.
குர்பானி கொடுப்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை தெளிவாக புரிந்துகொண்ட, ஆமினாவுக்கு, ஷேருவை காப்பாற்ற ஒரு வழியும் புலப்படவில்லை.
முடிந்த மட்டும், மகனிடம் மன்றாடி பார்த்தாள்.
அவனோ, உறுதியாக நின்றான்.
தலை குனிந்து, அசையாமல் நின்றது, ஷேரு.
சரியாக இரண்டே நாட்கள் தான் இருந்தன, பக்ரீத் பண்டிகைக்கு.
குடும்பத்துடன் வந்திறங்கினார், ஆமினாவின் சகோதரர், ஜலாலுதீன்.
''அஸ்ஸலாமு அலைக்கும்... அடடே, வாங்க மாமு,'' என, அவர்களை வரவேற்றான், ஷேக் ஹுசைன்.
''வாப்பா, வா... எத்தனை வருஷமா உன்னை கூப்பிட்டு, ஓய்ஞ்சு போயிட்டேன்... இந்த வருஷமாவது வந்தாயே, சந்தோஷம்... ஒரு வாரம் தங்கிட்டு தான் போகணும்,'' என்றாள், ஆமினா.
''குழந்தைங்க எல்லாரும், உன் வீட்டுக்கு வரணும்ன்னு ஒரே தொந்தரவு... வேறு வழியில்லை, இந்த வருஷம் உன் வீட்லதான் பெரு நாள் கொண்டாடணும்ன்னு எழுதி வெச்சிருக்கு... அதான் கெளம்பி வந்துட்டேன்,'' என்றார், ஜலாலுதீன்.
வெண்ணிற தாடி, அதே நிறத்தில் தொப்பி, நெற்றியில் தொழுகை தழும்பு. சர் சையது அகமது கான் போன்ற கம்பீர தோற்றம். இது தான், ஜலாலுதீன்.
மதரஸா ஒன்றில், குரான் கற்பிக்கும் ஹஜரத் ஆக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். மார்க்க சட்டத்திட்டங்கள், வழி முறைகள் பலவற்றை கற்றுத் தேர்ந்தவராகவும் இருந்தார்.
விருந்தினர்களால் கலகலப்பாகியது, வீடு. ஆனால், ஆமினாவின் மனம் தான் சரியில்லை. ஷேருவை விட்டு பிரியும் கவலையில் மூழ்கிப் போயிருந்தது.
அன்று மாலை -
அசர் தொழுகையை முடித்து, பள்ளி வாசலிலிருந்து வீடு திரும்பிய, ஜலாலுதீன், ஷேக் ஹுசைனின் மனைவி கொடுத்த தேநீரை பருகியபடியே, நாற்காலியில் அமர்ந்தார்.
''ஏம்பா, ஷேக்கு!''
''சொல்லுங்க, மாமு!'' என்றான், ஷேக் ஹுசைன்.
''இந்த வருஷம், குர்பானிக்கு ஆட்டுக் கிடாவை ஏற்பாடு செஞ்சுட்டியா?''
''ஓ... செஞ்சுட்டேன், மாமு!''
''எங்கிருக்கு, அந்த கிடா?''
''பின்கட்டுல கட்டி வெச்சிருக்கேன்.''
''அப்படியா... அதை பார்க்கணுமே?''
''வாங்க, மாமு... காட்டறேன்,'' என்று மாமாவை அழைத்து, பின்கட்டுக்குப் போனான், ஷேக் ஹுசைன்.
தலை குனிந்து நின்றிருந்த, ஷேருவை பார்த்தார், ஜலாலுதீன்.
''கொம்பு எல்லாம் பலமாத்தான் இருக்கு,'' என்று, பல்வேறு கோணங்களில், ஷேருவை பிடித்து பார்த்தவர், அதிர்ந்தார்.
''ஷேக்.''
''என்ன, மாமு?''
''இந்த ஆட்டை, குர்பானி கொடுக்க இயலாது!''
''என்ன சொல்றீங்க, மாமு?''
''இதை பார்க்கலையா... இதோட கண்கள் கலங்கியிருக்கு, வாயிலிருந்து எச்சில் ஒழுகுது... குர்பானிக்கு தேர்ந்தெடுக்கும் ஆடு, நல்ல ஆரோக்கியத்துடன், திடகாத்திரமா இருக்கணுங்கறது நிபந்தனை... சீக்கு புடிச்ச, பலவீனமான ஆடுகளை, குர்பானி கொடுக்கலாகாது... மார்க்கம் அதுக்கு அனுமதிக்காது... புரிஞ்சுதா?''
''மாமு... இப்ப என்ன பண்றது?''
''சீக்கிரமா போய் மார்க்கெட்டிலிருந்து வேறு ஒரு நல்ல கிடாவா பார்த்து வாங்கிட்டு வா... எக்காரணம் முன்னிட்டும் இந்த வருஷம், இந்த கிடாவை பலி கொடுக்க இயலாது... அப்புறம், முதல் வேலையா, நாளைக்கே, இதை கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்து போய் வைத்தியம் பாரு,'' என்றார், ஜலாலுதீன்.
வேறு வழியின்றி, பணத்தை எடுத்து, பஜாருக்கு கிளம்பினான், ஷேக் ஹுசைன்.
ஷேருவை காப்பாற்ற, ஆமினா, ஜலாலுதீன் போட்ட திட்டம், இப்படி சுலபமாக நிறைவேறியதில், இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து, சிரித்துக் கொண்டனர்.
'எப்படியோ இந்த வருஷம், தப்பி விட்டது, ஷேரு...' என்று, பெரு மகிழ்ச்சியானாள், ஆமினா பாட்டி.

மலர்மதி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மகேந்திரன்  சென்னை விமர்சனம் என்பது நல்ல விசயம் தான். ஆனால் அது சம்பந்தபட்டவர் உணர்வுகளை காயப்படுத்த கூடாது. நான் பல மாதங்களாக ஒரு விமர்சகியை கவனித்து வருகிறேன். அவர் மிகவும் கிண்டல் செய்வது போல் எல்லா கதைகளையுமே விமர்சனம் செய்து வருகின்றார். இத்தனை வாரங்களில் ஒரு கதைகூடவா அவருடைய பார்வையில் நல்ல கதையாக தோன்றவில்லை..? ஆச்சர்யமாய் இருக்கிறது..! அடிப்படையில் அந்த நபருக்கு தாழ்வு மனப்பான்மையும் வெறுப்புணர்வும் இருக்க வேண்டும்..!மற்றபடி ஆரோக்கியமான நல்ல விமர்சனங்கள் பலர் செய்கிறார்கள். இதுபோன்ற வெட்டி விமர்சனங்களை தினமலர் பிரசரிக்க கூடாது நான் யாரை குறிப்பிடுகிறேன் என்று அந்த நபருக்கும் தெரியும். உங்கள் சிந்தனையை மாத்திக்கங்க மேடம்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-ஆக-201903:31:08 IST Report Abuse
skv srinivasankrishnaveni எதனால் இப்படி ஒரு சடங்கோ தெரியாது உயிர்வதைக்கூடாது என்றுதான் குர்ரானும் சொல்றது பைபிளிலேயும் சொல்றது நம்ம இந்துக் கலாச்சாரம்களிலேயும் இருக்கு நான் வெஜ் சாப்பிடுவோருக்கு இதெல்லாம் தெரியறதே இல்லியே என்று மனம் வருந்துவேன் கல்கத்தாலேயும் காளிகோயில்லே ஆடு வெட்டிப்பலி போடுவாங்க அன்று நாங்கள் கோயில் போகவேமாட்டோம் அந்த ஆடுகளின் கதறல் அவ்ளோ பரிதாபமா இருக்கும் அதேபோல தன்குலசாமிக்கு என்று எவ்ளோபெருங்க எருமைக்கிடா காளை ஆட்டுக்கிடா என்றுபழிபோடுறாங்க சில சோசியல் என்ற வேஷதாரியின் சொல் கேட்டு நரபலியும் கொடுக்கறாங்களே நன்னாவே இல்லீங்க
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
11-ஆக-201916:52:52 IST Report Abuse
Girija முடிலம்மா முடியல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X