தேவதை தந்த வரம்! (2) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
தேவதை தந்த வரம்! (2)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஆக
2019
00:00

சென்றவாரம்: வனதேவதையிடம் வரம் பெற்ற, ஏழையின் மகன் சுப்பன், காட்டாற்று வெள்ளத்தில் இருந்து இளவரசனை காப்பாற்றினான். அவனை, அரண்மனையில் ஆலோசகராக நியமித்தார் மன்னர். இனி -

சுப்பனின் பெற்றோரை சந்தித்த அரண்மனை பணியாளர்கள், 'மன்னர் உடனே, அழைத்து வரச் சொன்னார்; புறப்படுங்கள்...' என்று கூறினர்.
'என்ன செய்வாரோ... இனி, என்ன நடக்கப்போகிறதோ...' என்று, அச்சத்துடன் வந்த, சுப்பனின் பெற்றோரை, மன்னர் முன் நிறுத்தினர்.
நடுக்கத்துடன், 'ஐயா... நாங்கள் ஒரு தவறும் செய்யவில்லை; ஏழைகளாகிய எங்களை விட்டு விடுங்கள்...' என்று, மன்னர் காலில் விழுந்து வணங்கினர் சுப்பனின் பெற்றோர்.
தேற்றிய மன்னர், 'பயப்பட வேண்டாம்; உங்கள் மகன் கொடுத்த தகவலால் தான், இளவரசன் உயிர் தப்பினான். உங்களை பெருமை படுத்தவே, இங்கு அழைத்தேன்...' என்றார்.
புரியாமல் விழித்தவர்களை, சுப்பனிடம் அழைத்து சென்றனர். மகனைக் கண்டதும், பேரானந்தம் அடைந்தனர்.
சுப்பனின் தாய் உள்ளூர பீதியுடன், 'எனக்கு ஒன்றும் புரியவில்லையே... ஆட்டை பலி கொடுக்கும் முன், அலங்கரிப்பரே... அதுபோல் நடக்கிறதா...' என்று குழறினாள்.
'அம்மா... எல்லாம் வன தேவதை கொடுத்த வரம்... நல்லபடியாக நடக்கும்...' என்ற சுப்பன், வேறு எதுவும் பேசவில்லை.
அரண்மனை வளாகத்தில், தனி மாளிகையில், சுப்பனின் பெற்றோர் தங்க வைக்கப்பட்டனர்.
அன்று அரசவை கூடிய போது, 'மன்னா... அரண்மனைக்கு வெளியே வனதேவதைக்கு ஒரு கோவில் அமைத்தால் நல்லது...' என்று ஆலோசனை கூறினான் சுப்பன்.
வனங்களை போற்றி பாதுகாத்து வந்த மன்னருக்கு, இந்த யோசனை சரியாக பட்டது. உடனடியாக, கோவில் கட்டினார்.
தினமும் அந்த கோவிலில், வனதேவதையை மனதார வணங்கி, நன்றி தெரிவித்தான் சுப்பன். நாட்கள் செல்லச் செல்ல, பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து, கோவில் பிரபலமாகியது.
அங்கு சிறப்பு பூஜை நடத்தவும், பொங்கல் விழா கொண்டாடவும் உத்தரவிட்டார் மன்னர்.
விழா ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்தன.
பணியாளர்கள், காளைகளை அலங்கரித்து கொண்டிருந்தனர். அவற்றை கவனித்துக் கொண்டிருந்தான் சுப்பன்.
ஒரு காளை, 'ஜல்லிக்கட்டுக்கு வரும், மயிலை காளை பாய்ந்து, இளவரசன் பலியாக வாய்ப்பு உள்ளது. விழா சோகத்தில் முடியப் போகிறது; இதை, யாரால் தடுக்க முடியும்...' என்று கூறி, பெருமூச்சு விட்டது.
காளையின் பேச்சை கேட்ட சுப்பன், முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டான். இளவரசனின் மெய்க்காவலர்களை அழைத்து, 'ஜல்லிக்கட்டில், இளவரசர் மீது மயிலைக்காளை பாய்ந்து, தாக்க வாய்ப்பு உள்ளது; எனவே கவனமாக இருங்கள்...
'பாய முயன்றால் வாள் வீசி, அந்த காளையைக் கொன்று விடுங்கள். இது ரகசியமாக இருக்கட்டும்...' என, எச்சரித்தான்; மெய்க்காவலர்கள் விழிப்புடன் செயல்பட்டனர்.
விழா நாளன்று, ஜல்லிக்கட்டு மைதானத்தை பார்வையிட வந்தான் இளவரசன். கட்டு அவிழ்ந்த மயிலைக்காளை, அவன் மீது பாய முயன்றது. விழிப்புடன் இருந்த மெய்க்காவலன், வாளை வீசி காளையைக் கொன்றான்; இளவரசன் தப்பினான்.
இமைப்பொழுதில் நடந்த இந்த சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது.
விஷயம் அறிந்த மன்னர், 'இரண்டாவது முறையாக இளவரசனை காப்பாற்றி விட்டாய்...' என, சுப்பனை கட்டித்தழுவி பாராட்டினார்.
அதேசமயம், மன்னர் மனதில், 'சுப்பனிடம், ஏதோ ரகசியம் இருக்கிறது' என்ற ஐயம் ஏற்பட்டது. அதை அறிய முடிவு செய்தார்.
- தொடரும்...
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X