உயிர் காத்த உத்தமி! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
உயிர் காத்த உத்தமி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஆக
2019
00:00

தீபூர் நகர பள்ளி தலைமை ஆசிரியர் தீஷ், மிகவும் நேர்மையானவர். அவரது நேர்மை குணத்தை வெறுத்த சிலர், விரோதம் கொண்டனர்.
விரோதிகள் ஏற்பட்டு விட்டாலே, எச்சரிக்கையாக இருக்க வேண்டுமல்லவா! ஆனால், எவரையும் பொருட்டாக கருதவில்லை தீஷ்; பணியில் கவனம் செலுத்தி வந்தார்.
விடுமுறை வந்தது. வழக்கம் போல், மனைவி தேவியுடன், மாட்டு வண்டியில், சொந்தக் கிராமத்துக்கு புறப்பட்டார். காட்டுப் பகுதியில், வழிமறித்த ஒரு கும்பல், அவரை பயங்கரமாக தாக்கத் துவங்கியது.
கணவரை காப்பாற்ற குறுக்கே வந்த தேவி, 'முதலில் என்னை கொன்னுட்டு, என் கணவரைக் கொல்லுங்க...' என்று கண்ணீருடன் கதறினாள்.
'இத பாரு தங்கச்சி... நீ ஏன் அநியாயமாய் உயிரை விட விரும்புறே... உன் மீது எங்களுக்கு ஒரு விரோதமும் இல்லை; உன் கணவர் மீது தான் விரோதம்...' என்று கூறியது கும்பல்.
'என்னை தங்கச்சின்னு அழைச்சிட்டு விதவையாக்கப் பார்க்கிறீங்களே... உங்களுக்கே நியாயமா இருக்கா...' என்றாள் தேவி.
இதை கேட்டு நிலைகுலைந்து, தாக்குதலை நிறுத்தி தப்பியது கும்பல்.
பள்ளி கட்டட மாடியில் தான், குடும்பத்துடன் வசித்து வந்தார் தீஷ். பள்ளியில், காவலாளிகள் இருந்தனர். அன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு, பெரிய கும்பல், பள்ளிக் கட்டடத்தை நோக்கி வந்தது. அதைக் கண்டதும், காவலாளிகள் ஓடி ஒளிந்து கொண்டனர். மாடிக்குச் சென்ற கும்பல், தீஷ் வீட்டுக் கதவைத் தட்டியது.
'யார் அது...' என்று கேட்டார் தீஷ்.
'உன்னைக் கொல்ல வந்திருக்கோம்...' என்று ஆரவாரித்தது கும்பல்.
'அப்படின்னா சரி... உங்க இஷ்டப்படி கொல்லுங்க...' என்று கூறியபடி, கதவை திறக்கப் போனார்.
அவரை தடுத்து, 'ஒரு நிமிஷம் இருங்க...' என்று, சமையல் அறைக்குள் ஓடினாள் தேவி. அங்கு பழைய துணியில் கட்டி வைத்திருந்த, தீ பந்தங்களை மண்ணெண்ணெயில் நனைத்து, தீ மூட்டினாள். அவற்றை பிடித்தபடி, கும்பலை எதிர்க்க தயாராக நின்றாள்.
கதவை திறந்ததும், தீஷை நோக்கி, துப்பாக்கியால் சுட்டான் ஒருவன். நல்ல வேளை, குறி தவறியது. அதிர்ச்சியில் அவர், மயங்கி சாய்ந்தார்.
உடனே, ஆவேசம் அடைந்த தேவி, கும்பலை எதிர்கொண்டாள். எரியும் தீ பந்தங்களை, ஒன்றன் பின், ஒன்றாக வீச ஆரம்பித்தாள். அந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், கும்பல் ஓட்டம் பிடித்தது.
தேவியின் துணிச்சலையும், சமயோசித புத்தியையும், கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.
சமயோசித புத்தியும், மனோதிடமும் இருந்தால், எதையும் வெல்லலாம் குட்டீஸ்!
- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X