'நீட்'டாக ஒரு வெற்றி...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
00:00

தேசிகன், வீட்டிற்குள் நுழைந்தபோது, கணித சமன்பாடு ஒன்றுடன் போராடிக் கொண்டிருந்த பிரபுவுக்கு, இட்லி ஊட்டிக் கொண்டிருந்தாள், சாரதா.
அறையில் பையை வைத்து, உடை மாற்றியவர், முகம், கை, கால் கழுவி துடைத்து, தனக்கும், மனைவிக்கும், காபி எடுத்து வந்தார். கண்களால் நன்றி சொன்னவாறு, காபியை வாங்கிக் கொண்டாள், சாரதா.
ஒரு வினாடி, அவரை நிமிர்ந்து பார்த்து, எழுதிக் கொண்டிருந்ததை தொடர்ந்தான், பிரபு. இந்த ஒரு மாதத்தில் மேலும் இளைத்திருந்தான். சதா நேரமும், படித்துக் கொண்டே இருந்ததில், கண்கள் உள்வாங்கி இருந்தன. வலது ஆள்காட்டி விரலில், பேனா அழுத்தி, தடம் பதிந்திருந்தது.
அவன் கவனம் சிதறாமல் இருக்க, 'ஷ்...' என, ஜாடை காட்டியவாறு, அறை கதவை மூடி, வெளியே வந்தாள், சாரதா.
''சாரிங்க... நீங்க வந்தவுடனே, காபி தரணும்ன்னு நினைச்சேன்,'' என்றாள்.
''ஒண்ணும் கெட்டு போகலை... காபியை குடி... பிரபு சாப்பிட்டானா?''
''வகுப்புக்கு கிளம்பிட்டிருக்கான்... அதான், ரெண்டு இட்லியை வாயில திணிச்சேன்.''
பிரபு வெளியே வர, ''கண்ணா... அப்பா, அழைத்து போய் விடவா?'' என்றார்.
''நோ... தேங்க்ஸ் பா... நண்பர்களோட, 'டிஸ்கஸ்' பண்ணிட்டே போவோம்,'' என்று, சைக்கிளை மிதித்து, பறந்தான்.
''எப்ப முடியும்ன்னு இருக்கு,'' என்றார், தேசிகன்.
''இன்னும் நாலே நாள்... இந்த முறை தேர்வானா தான் உண்டு... அவனுக்கும் பதற்றமா இருக்கு... நமக்கும், பயமா இருக்கு,'' என்றாள், சாரதா.
அப்போதெல்லாம், 'கட் - ஆப்' இருந்தால், மருத்துவ, 'சீட்' கிடைத்தது. இப்போது, விருப்பப்பட்ட கல்லுாரியில் படிக்க வேண்டுமென்றால், 'நீட்' தேர்வுக்காக, தர வரிசையில், முதல் இடங்களை ஜெயிக்க வேண்டியுள்ளது.
இயல்பிலேயே கெட்டிக்காரனான பிரபு, பள்ளியில் முதல் மாணவனாகவே இருந்ததால், 'நீட்' தேர்வு பற்றி, கவலைப்படவில்லை, தேசிகன்.
ஆனால், இவனைப் போலவே, பள்ளியில் நன்றாக படிக்கும், இரு நண்பர்கள், 'நீட்' தேர்வில் தோல்வியடைந்து, தற்கொலை செய்து கொண்ட போது தான், பிரச்னையின் தீவிரம் தெரிந்தது.
'பாடநுால் அறிவு மட்டும் போதாது... மத்திய இளநிலை கல்வி வாரிய பாடத் திட்டத்திலும், முறையான பயிற்சி வேண்டும்...' என, புரிந்தது.
அவர் பயந்தது போலவே, முதன் முறையாக, 'நீட்' தேர்வில் தோல்வி அடைந்தான். இந்த ஆண்டும், 'நீட்' தேர்விற்கு தயாரானான்.
இப்போதும், தர வரிசையில், மதிப்பெண் எடுத்து, தேர்ச்சி பெற வேண்டும் என்பது, சாரதாவின் தீராத கவலை; அப்படி நிகழாவிடில், அவன் எந்த அசம்பாவிதத்திலும் ஈடுபட்டுவிடக் கூடாது என்பது, தேசிகனின் வேண்டுதல்.
பிரபுவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக, காலையும், மாலையும், 'அபிராமி அந்தாதி'யை பாராயணம் செய்தனர்.
''குளிச்சு, சாப்பிட்டு, கலகலப்பா பேசி, ரெண்டு வருஷம் ஆகுது. 'நீட்' வந்தாலும் வந்தது, பசங்களுக்கு துாக்கமே இல்லாம போயிடுத்து...
''அதிகாலை, 3:00 மணிக்கே எழுந்து படிக்கறதும், 4:00 மணியிலிருந்து, வகுப்பு வீட்டுப் பாடம், பள்ளிக்கு தயாராவது... மாலை, வகுப்பு... திரும்பவும், பள்ளி வீட்டுப்பாடம், 'நீட்' வீட்டுப்பாடம்ன்னு முடிச்சு, படுக்கும்போது, நள்ளிரவு ஆகிடுது,'' என்றாள், சாரதா.
''வேளாவேளைக்கு, நீ ஏதேனும் போட்டு அனுப்பறதுனால தான், அவன் உடம்பு தாக்கு பிடிக்குது,'' என்றார், தேசிகன்.
பிரபு, டாக்டராக வேண்டும் என, சின்ன குழந்தையிலேயே, விளையாட்டுக்கு, 'டாக்டர் செட்' வாங்கி கொடுத்தாள். பள்ளியில் மாறுவேட போட்டியிலும், டாக்டர் வேடம் போட்டு எடுத்த புகைப்படத்தை, அவன் அறையில், கண்ணில் படும்படி மாட்டி வைத்தாள். 'டாக்டர் சார்...' என, கூப்பிட்டு, அவன் மனதில், டாக்டர் கனவை ஏற்றியவள், சாரதா தான்.
மத்திய அரசு அலுவலகத்தில், முக்கிய பொறுப்பில் இருக்கிறார், தேசிகன். மிகவும் கண்டிப்பானவர்; லஞ்ச லாவண்யங்களை எதிர்ப்பவர்; கடமையில் சிரத்தையானவர். அலுவலக வட்டாரத்தில், 'நெருப்பு' என, பெயர் பெற்றவர்.
கண்களை மூடியவாறு, அன்று, அலுவலகத்தில் நடந்ததை, அசை போட்டார்.
அவரை காண, சுஷீல் குப்தா என்பவர் வந்திருந்தார். அநாவசிய சிரிப்பும், கூழை கும்பிடும், பேசும் முன்பே, அவர் வருகைக்கான காரணம், நேர்மையானதல்ல என்பதை உணர்த்தியது.
'இவரை, எப்படி உள்ளே விட்டான்... பியூன், மண்டூகம்...' என, கோபத்தோடு, அறை வாசலை நோக்கினார்.
'சார்... அவனை, 'கேன்டீனுக்கு' அனுப்பிட்டு தான் உள்ள வந்தேன். தனிப்பட்ட விஷயம் பேசற எடத்துல, அயலார் எதுக்கு... அவனை தேடாதீங்கோ...' என்றார், சுஷீல் குப்தா.
'நீங்க, யார் சார்... உங்களோட தனிப்பட்ட விஷயம் பேச என்ன இருக்கு... ப்ளீஸ்... எழுந்திருங்க...'
'அவசரப்படாதீங்க, மிஸ்டர் தேசிகன்... உங்கள்ட்ட தனிப்பட்ட முறையில, எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கு... நீங்க விசாரணை நடத்த இருக்கிற, மிஸ்டர் மேத்தா, எங்க முதலாளி... அந்த, விசாரணையை தற்காலிகமா நிறுத்தி வைக்கணும்ன்னு சொல்லச் சொன்னார்...'
'என்ன சார், சொல்றீங்க... துறை நடவடிக்கையை பற்றி பேச, நீங்க யார்... தவிர, என்னை பற்றி விசாரிக்காம, வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்...'
'உங்களைப் பற்றி, தெளிவா தெரிஞ்சுண்டு வந்திருக்கேன்...'
'லஞ்சம் குடுக்க வந்திருக்கீங்களா... அதுக்கெல்லாம் அப்பாற்பட்டவன், இந்த தேசிகன்...'
'தெரிஞ்சு தான் வந்திருக்கேன், சார்... எங்க முதலாளியால், உங்களுக்கு உதவ முடியும்... உங்க மகன், இரண்டாவது முறையா, 'நீட்' தேர்வு எழுதறாராமே?'
'அதற்கு?'
'இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு வினாத்தாளை, உங்களுக்கு தந்து உதவ, அவரால் முடியும். கேள்வித்தாளை உங்களிடம் ஒப்படைப்பேன். உங்கள் மகனின் வெற்றியும், தர வரிசையும் உறுதி செய்யப்படும்... இதை எங்கள் முதலாளி சொல்லச் சொன்னார்...' என்றார்.
'அது எப்படி, அவருக்கு?'
'அங்கே, அவர் வெச்சது தான் சட்டம்... கேள்வித்தாளை எடுத்து வந்துடறேன்... உங்க மகன், தேர்வு எழுதியதுக்கு அப்புறம், நான் சொன்னதை, நீங்க செஞ்சு கொடுத்தா போதும்...' என்று, கிசுகிசுத்தார், சுஷீல் குப்தா.
'அதையெல்லாம் உறுதியா சொல்ல முடியாது... 'பைலை' பார்த்துட்டு தான் சொல்ல முடியும்...' தயக்கத்தோடு சொன்னார், தேசிகன்.
'பின்ன... பார்க்காம எப்படி... இன்னும் ரெண்டு நாள் எடுத்துக்கோங்கோ... 'பைலை' நல்லா பாருங்கோ... நான் வரேன்...' என்றார்.
அன்று முழுவதும், தேசிகனுக்கு வேலையே ஓடவில்லை.
'உண்மையா, இந்த துறையில் நம்பிக்கையா, 20 வருஷம் உழைச்சாச்சு... இதென்ன திடீர் தடுமாற்றம்... அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்ன்னு சொல்லலை... இப்போதைக்கு வேணாங்கறார்... வெளிநாடு தப்பிச்சு போயிட்டா?
'அவர் கேட்டது, என்னால் செய்யக்கூடிய காரியம் தான்... சரியாக விசாரித்து தான் வந்திருக்கிறார். ஆனால், அப்படி செய்வது சரிதானா... என் பெருமைக்கும், தகைமைக்கும் தகுமா...
'இத்தனை ஆண்டுகளும், ஒரு வேண்டுதலாய், தவமாய், பக்தியாய், தந்திருக்கும் உழைப்பை, உண்மையை, நானே அழிக்க வேண்டுமா...
'ஈஸ்வரா, இதென்ன சோதனை... ஏனிந்த அலைக்கழிப்பு... சபலத்திற்கும் இடம் கொடாத என் மன உறுதி, பிள்ளை பாசத்தின் முன் மண்டியிடுகிறதோ...' என, வருந்தினார்.
ஒரு கணம், பிரபுவின் களைத்த முகம், அவர் கண் முன் வந்து போனது.
ஒரே புத்திரன். ஆசைப்படும் கல்வியை, அவனுக்கு தருவது, பெற்ற தந்தையின் கடமை... முக ஜாடையில், உடலமைப்பில், உடுத்தும் உடையில், குரலில், எல்லாமே நாந்தான்... இதில், சாரதாவுக்கு வருத்தம் உண்டு.
அலுவலகத்தில் நடந்த விஷயத்தை, சாரதாவிடம் கூறினார், தேசிகன்.
''இந்த ஒருமுறை, நான் விட்டுக் கொடுத்தால், பிரபுவின் எதிர்காலம், அவன் ஆசைப்பட்ட வழியில் உறுதி செய்யப்பட்டு விடும்... அப்புறம், அவனை பற்றி எந்த கவலையும் இல்லை... ஒவ்வொருத்தர், ஆயிரம், ஏன், லட்சம், கோடின்னு லஞ்சம் வாங்கறா...
''நானென்ன பணமா வாங்கினேன்... பணம் வாங்கினா தான், அது லஞ்சம்... நடக்கப்போற தப்புக்கு, யாராலயும் குறை சொல்ல முடியாது... எந்த சாட்சியமும் இருக்கப் போவதில்லை... சரின்னு சொல்லிடலாமா?''
மனைவியின் முகத்தை பார்த்தார், தேசிகன்.
''தெய்வம் தான், நம் பிள்ளைக்கு, இப்படியொரு பாதையை காமிச்சிருக்கு... நினைச்சே பார்க்காத வழி இது... வாய்ப்பை நழுவ விட்டுடாதீங்கோ... அதிர்ஷ்டம் ஒரு தடவை தான் கதவை தட்டும்பா... இறுக்கி பிடிச்சுக்கணும்... அவா கேக்கறதை கட்டாயம் செஞ்சி முடிங்கோ,'' என்றாள்.

இரவு, 9:00 மணி -
அலுப்பும், சலிப்புமாக வீட்டுக்கு வந்த பிரபுவிடம், ''எப்படிப்பா படிச்சிருக்கே?'' என்றார், தேசிகன்.
''உண்மையை சொல்லவாப்பா... ஒரே பயமா இருக்கு... எங்கே ஏமாத்திடுவேனோன்னு நடுக்கமா இருக்கு,'' என்றான்.
''உனக்கொரு, 'குட் நியூஸ்' பிரபு... நண்பர் ஒருத்தர், 'நீட்' சம்பந்தப்பட்ட இலாகாவுல வேலை பார்க்கறார்... உனக்கு சில குறிப்பு தரேன்னார்.''
''வாங்கி குடுப்பா... அதையும் முயற்சி பண்ணி பார்க்கறேன்... அவரை போய் பார்க்கணுமா?''
''இல்லைப்பா... நான் சொல்றேன்,'' என்றார், தேசிகன்.
ஞாயிறு காலை -
அதே கூழை கும்பிடு, கபடச் சிரிப்பு. எங்கிருந்தோ ஒரு பொய் களை, அவர் முகத்தில் வந்து ஒட்டிக்கொண்டிருந்தது.
மனம் குறுகுறுக்க, ''வாங்கோ... வாங்கோ!'' என்றார், தேசிகன்.
கூடை நிறைய பழங்களையும், இனிப்பு பெட்டிகளையும், சாரதாவிடம் தந்தார், சுஷீல் குப்தா.
''வணக்கம்மா... நல்லா இருக்கீங்களா?''
காபி எடுத்து வர, சாரதா, உள்ளே சென்ற போது, வீட்டுக்குள் நுழைந்தான், பிரபு.
''பிரபு... நான் சொன்னேனே, என் நண்பர்ன்னு... இவர் தான்!''
''வணக்கம், சார்!''
''இந்த மாடலை, நல்லா பார்த்துக்கோ தம்பி,'' என்று, சட்டை பையிலிருந்து, சுருட்டிய ஒரு தாளை எடுத்து நீட்டினார்.
''நன்றி... சார்!''
''பைலை பார்த்தீங்களா?''
தலையை ஆட்டினார், தேசிகன்.
''வெரி குட்... உங்க பிள்ளைகிட்ட, இது தான் கேள்வித்தாள்ன்னு சொல்லாதீங்க... 'ஜஸ்ட்' இது மாதிரி வரும்ன்னு சொல்லுங்க,'' என்றார், கிசுகிசுப்பாய்.
''அடுத்து?'' என்றார், தேசிகன்.
''புதன் கிழமை ஆபீசுக்கு வாங்களேன். அதுக்குள்ள, தம்பிக்கு பரீட்சையும் முடிஞ்சிடும். எல்லாம் நல்லபடியா முடிஞ்சா, எல்லாருக்கும் நல்லது தான்,'' என்றார், சுஷீல் குப்தா.
கவலையிலும், யோசனையிலும் மேலும் இரண்டு நாட்கள் ஓடியது.
ஆபீசிலிருந்து சீக்கிரமே வந்த தேசிகன், ''என்ன... பிள்ளை எப்படி எழுதியிருக்கான்னு கேட்டியா?'' என்றார்.
''நேரா, படுக்கை அறையில போய் படுத்துட்டான்... எதிர்பார்த்தாற் போல், கேள்வி வரலை... சுரத்தா பதில் சொல்லலை.''
அவர் அழைக்கும் முன், குரல் கேட்டு வெளியே வந்தான்.
''என்னப்பா... எப்படி?''
''அப்பா... ஒரு, 'சர்ப்ரைஸ்'பா... அந்த மாமா குடுத்தாரே, அந்த கேள்வித்தாள், மாதிரி வினாத்தாள் இல்லை... அதுவே தான் கேள்வித்தாள்!''
''மை குட்னஸ்... பொளந்து கட்டிட்டியா?''
''இல்லைப்பா.''
''என்னாச்சுடா... எல்லா கேள்வியும் தெரிஞ்சதுதானே?''
''பதில் கூட தெரிஞ்சுதான்பா இருந்தது... ஆனா, சாரிப்பா... நான் எழுதலை.''
தேசிகனால் நம்ப முடியவில்லை.
''என்னடா சொன்னே?''
''முடியலப்பா... பேப்பரை வெறும்னே மடிச்சு குடுத்துட்டேன்.''
பிரமித்து நின்றார், தேசிகன்.
''அப்பா... அந்த மாமா, மாதிரி வினாத்தாள்ன்னு சொன்னப்ப, எனக்கு பெரிசா எதுவும் தோணலை... நீங்க ரொம்ப நல்ல அப்பாப்பா... எனக்கு, உங்கள ரொம்ப பிடிக்கும்... என் நண்பர்கள்கிட்டல்லாம், உங்கள பத்தி ரொம்ப பெருமையா, கர்வமா பேசுவேன்பா...
''உங்க பதவியில ரொம்ப உண்மையா, 'நெருப்பா' இருக்கறது, எனக்கு ரொம்ப பெருமைப்பா... உங்கள, என் மனசுல ஏத்தி வெச்சுருக்கேன்பா... ஆனா, நான், 'ரேங்க்' வாங்கணும்ன்னு, அன்னைக்கு நீங்க அந்த மாமாட்ட பேசினதை கேட்டப்ப, தப்பான வழியில ஏதோ பண்றீங்கன்னு தெரிஞ்சது...
''இந்த நாலு நாளா, கவலையா, யோசனையா, கொஞ்சம் பதற்றமா இருந்துதுப்பா... எனக்காக, இத்தனை நாளா நீங்க கட்டிக் காத்த உயர்வை, விட்டுக் கொடுக்கறிங்களோன்னு பயமா இருந்தது... நான், உங்க மகன்பா... படிக்கறதுக்காக, அம்மாவும், நீங்களும் எவ்வளவோ கவலைப்பட்டுருக்கீங்க... உழைச்சிருக்கீங்க...
''அது மாதிரி தான், லட்சக்கணக்கான மாணவர்களும், அவங்க குடும்பங்களும் உழைச்சிருப்பாங்க... அப்படி இருக்கும்போது, எனக்கான இலக்கை அடையாம, குறுக்கு வழியில, 'ரேங்க்' வாங்க முயற்சிக்கிறது, தப்புன்னு பட்டதுப்பா... ப்ளீஸ், என்னால எழுத முடியலை... சாரிப்பா,'' என்றான்.
அவன் நிற்க முடியாமல் சாய, பாய்ந்து, பிள்ளையைத் தாங்கினார், தேசிகன்.
''பயப்படாதீங்க... தற்கொலை எல்லாம் பண்ணிக்க மாட்டேன் பா,'' என்றான், பிரபு.
''பாவி... படுபாவி... அவசரப்பட்டு, அத்தனையையும் கொட்டி கவுத்துட்டியேடா,'' என்றாள், சாரதா.
''டாக்டர் என்னடி... பெரிய டாக்டர்... பத்தரைமாத்து தங்கம்டீ, என் பிள்ளை,'' கண்ணீரோடு சிரித்தார், தேசிகன்.

மல்லிகா குரு

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - salem,இந்தியா
20-ஆக-201912:57:02 IST Report Abuse
sridhar என்ன சார் காப்பி கதை, கதை நல்ல இருக்கா , தற்போதைய காலகட்டத்துக்கு பொருத்தமா இருக்கன்னு பாருங்க, எல்லாத்துலயும் குறை கண்டு பிடிக்காதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-ஆக-201913:33:54 IST Report Abuse
skv srinivasankrishnaveni இதுபோல ஒரு சிலரின் நேர்மையால்தான் நாடுநன்னாவேஇருக்கு மழையும் பெய்யறது
Rate this:
Share this comment
Cancel
sujithra manohar - CHENNAI,இந்தியா
18-ஆக-201912:01:37 IST Report Abuse
sujithra manohar THIS story is a copy of writer MR.SUJATHA short story named "ANUMATHI" which is also published in tamilnadu text books in tamil thunnaipadam category in 11th standard tamil books upto 2013.(before implementation of samcheer books).
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X