ஒரு சென்ட் விட்டு போச்சு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
00:00

தென்காசி அருகே, அண்ணனுடன் தங்கி இருக்கும் பெற்றோரை பார்க்க, ஆண்டுக்கு ஒரு முறை, ஊருக்கு செல்வான் ரவி. வயலில் இருந்து வரும் வருமானத்தை, பங்கு கேட்டு பெறுவது தவிர, பெரிதாய் அவர்களுடன், ஒட்டுதல் இல்லை.
ஐந்து ஆண்டுகளுக்கு மேல், ஐரோப்பா நாடுகளில் வேலை பார்த்து, கை கொள்ளாமல் சம்பாதித்தான். ஐரோப்பாவின் பரபரப்பு, ரவிக்கு லேசாக சலிக்க துவங்கியது.
திரும்ப செல்ல வேண்டிய வேலை இல்லாததால், அவனிடம் இருந்த ஐரோப்பிய காசுகள் அனைத்தையும் கொடுத்து, இந்திய பணமாக மாற்றினான். அவன் சட்டை பையில், சில இந்திய நாணயங்கள் இருந்ததால், அவற்றுடன், ஒரு யூரோ சென்ட் இருந்ததை, கவனிக்காமல் விட்டு விட்டான்.
ஐரோப்பாவின் சில்லரை காசான, ஒரு யூரோ சென்ட், இந்திய மதிப்பில், முக்கால் ரூபாய். வெளிநாடு செல்லும் பலருக்கும் தொற்றிக்கொள்ளும் பிசுநாரித்தனம், ரவிக்கு சற்று கூடுதலாகவே இருந்ததால், அந்த சிறிய நஷ்டம், அவனுக்கு பெரிதாக தோன்றியது.
அதை பற்றி நண்பன், கலைவாணனிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் குணம் தெரிந்த கலைவாணனும், அமைதியாக கேட்டு கொண்டிருந்தான்.
எவ்வளவோ காசு இருந்தும், இதை எப்படியாவது தள்ளி விட்டு விட வேண்டும் என சிந்தித்தான், ரவி.
''வாடா... போய் டீ குடிப்போம்,'' என, ரவி சொல்ல, தான் தான், காசு தர வேண்டும் என்ற தெளிவோடு, கலைவாணனும் தலையசைத்தான்.
எவ்வளவு சம்பாதித்தாலும், பையிலிருந்து ஒரு பைசா எடுக்க மாட்டான், ரவி.
இரண்டு வடை, இரண்டு டீ, ஒரு பிஸ்கெட், 23 ருபாய் ஆனது. பையிலிருந்து, 20 ருபாய் நோட்டை எடுத்த, கலைவாணன், சில்லரை தேடினான்.
''இருடா... நான் தர்றேன்,'' என்று, மூன்று ரூபாயை நீட்டிய ரவியை, ஆச்சரியத்துடன் நோக்கினான்.
அவனைப் பொறுத்தவரை, மூன்று ரூபாய் கொடுத்ததே பெரிய அதிசயம் தான். சில்லரையை கல்லாவில் போட்டு, அடுத்த வேலையை பார்த்தார், கடைக்காரர்.
மேலும், சிறிது நேரம், கலைவாணனுடன் பேசிய பின், தென்காசிக்கு சென்றான், ரவி. வீட்டில் உண்டு, உறங்கி, வயல் கணக்குகள் கேட்டு, பணத்தை வாங்கி, அருகில் இருந்த கிராமத்தில் திருவிழா நடப்பதை அறிந்து, அங்கு போக தீர்மானித்தான்.
அது ஒரு சிறிய, அழகான கிராமம். ஊருக்குள் நுழையும்போதே அழகான கண்மாய் வரவேற்றது. வீசிய தென்றலை அனுபவித்தபடி நடந்தான், ரவி. ஒன்பது நாள் திருவிழா. ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.
''சார்... உங்களோட வாழ்க்கைல, முக்கியமான கட்டத்துல இருக்கீங்க... கை ரேகை பார்த்தால், புட்டு புட்டு வெச்சிடுவேன்... வாங்க சார்... வாங்க,'' என்று அழைத்தான், ஜோசியக்காரன்.
நம்பிக்கை இல்லாவிட்டாலும், 'என்ன தான் சொல்றான்னு கேட்போமே...' என்று எண்ணியபடி, ''சரி... சொல்லுங்க,'' என்றான்.
ஆல மரத்தின் அடியில் அமர்ந்து, ரவியின் கை ரேகையை ஆராயத் துவங்கினான், ஜோசியக்காரன்.
''சார்... நான் எதுவும் கற்பனை பண்ணி சொல்லல... மூணு தலைமுறையா தொழில் பண்றவன்... நாணயம் எனக்கு ரொம்ப முக்கியம்... உள்ளதை சொல்றேன் கேட்டுக்கோங்க, நீங்களா பாத்து குடுக்குறத குடுங்க...
''கடும் உழைப்பால், பல கஷ்டங்களை தாண்டி, உயர்ந்தவர்,'' என, அவன் சொன்ன முதல் வரியே, ரவியை முழுக்க நம்ப வைத்தது.
''இங்க வந்த நேரம், லட்சுமி உங்களை தேடி வரும்... அதிர்ஷ்டம் தேடி வந்து பொன்மழை கொட்டும்... உங்களை, வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு அழைத்து போகும்...
''உங்களுக்கு, இனி நல்ல நேரம் இருக்குறது தெளிவா தெரியுது... கிடைக்கற வாய்ப்பை தவற விடாதீங்க; லட்சுமி என்னிக்காவது தான் கதவை தட்டுவா... சாந்தி... சாந்தி... ஓம் சாந்தி,'' என, கூறி முடித்தான்.
கையிலிருந்த பணத்தில், 20 ரூபாய் கொடுத்து நகர்ந்தான், ரவி.
அவன் வாங்கி, கை கூப்பி விலகினான்.
அய்யனார் கோவில் மற்றும் அதன் அருகே இருந்த பெருமாள் கோவில் இரண்டையும் பார்த்தான். அங்கு கொடுத்த பொங்கலை சாப்பிட்டு, சிறிது நேரம், அருகில் இருந்த மரத்தில் சாய்ந்தான், ரவி.
துண்டை வீசியபடி, ''வெய்யில் மண்டைய பொளக்குது,'' என்று சொல்லியபடியே வந்தமர்ந்தார், ஒருவர்.
''ஆமாம்... ஆல மரம் இருக்குறதால, இங்க அவ்வளவா தெரியல,'' என்றான், ரவி.
பிறகு, அவர் முகம் வாட்டமாய் இருப்பதை பார்த்து, ''என்ன ஆச்சு... திருவிழா நாள்ல, கவலையா இருக்கீங்க?'' என, யதார்த்தமாக கேட்டான்.
''ஒரே பொண்ணு தம்பி... ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் வரன் அமைஞ்சிருக்கு... கல்யாணத்துக்கு, ஐந்து லட்சம் ரூபாய் செலவாகும். கையில தம்பிடி இல்ல...
3 சென்ட் நிலம் இருக்கு... வித்தால்,
15 லட்சம் போவும். ஆனா இப்போ, என் நிலைமையில, எட்டு லட்சம் ரூபாய்க்கு கூட விக்க தயாரா இருக்கேன்.''
''பிறகென்ன... வித்துட்டு, நல்ல காரியத்தை பண்ண வேண்டியது தானே,'' என்றான்.
''அட, எங்க தம்பி... விக்கிறேன்னு தெரிஞ்சா, அவனவன் எனக்கு, எனக்குன்னு வருவான்... ஆனா, இந்த ஊருல, முழு பணம் குடுத்து வாங்க, யாரும் வர மாட்டாங்க... எல்லாரும் கடன் தான் சொல்லுவாங்க...
''உள்ளூர்ல இருந்துட்டு, முடியாதுன்னும் சொல்ல முடியாது... எல்லாம் உறவு முறைங்க, தர்ம சங்கடமா இருக்கு... அய்யனாரப்பன் தான் வழியை காட்டணும்,'' என, வானத்தை அண்ணாந்து பார்த்தார்.
அவன் மனது, விரைந்து லாபக் கணக்கை போட்டது. கை ரேகைக்காரன் வார்த்தைகள், அவன் மனதில், சினிமா போல், 'ரீல்' ஓடின.
''அந்த நிலத்தை பார்க்கலாமா... பிடிச்சிருந்தா நானே வாங்கிக்கறேன்,'' என்றான், ரவி.
''எனக்கு, மொத்த பணமும், கைல வேணும் தம்பி... அதுவும், உடனே வேணும்... தருவீங்களா?'' எனக் கேட்டார்.
ரவியை அழைத்து போய், ''இது தான் தம்பி, நிலம்... இந்த ஊருல, சென்ட் நிலம், ஐந்து லட்சம் வரை போவுது... அவசரத்துக்கு, மூணு லட்சத்துக்கு விற்க தயார்,'' என, முகமலர்ச்சியோடு சொன்னார்.
''ஏழு லட்சம்னா, நான் உடனே குடுத்துருவேன். ஆனா, ஒன்பது லட்சம்ன்னு சொல்றீங்களே... அதான் யோசிக்க வேண்டியதா இருக்கு,'' என்றான்.
''யோசிச்சு பாருங்க தம்பி... ரொம்ப ராசியான நிலம்; சரி... ரெண்டு பேருக்கும் வேண்டாம்... எட்டு லட்சத்துக்கு முடிச்சுக்குவோம்... ஆனா, எனக்கு கைல காசு வேணும்,'' என்றார்.
சற்று யோசிப்பது போல பாவனை செய்து, ''சரி... முடிச்சுக்குவோம்,'' என்றான், ரவி.
''சந்தோஷம் தம்பி... நான் ஆக வேண்டியதை பார்க்கிறேன்,'' என்றார்.
'நேரம் வந்தால் கூடி வரும் என்பது, உண்மை தான்...' என்று, அவனுக்கு தோன்றியது.
நிலம் வாங்கி, விற்கும் வழிமுறைகள் ஓரளவு அவனுக்கு தெரிந்திருந்ததால், அவர் காட்டிய கோப்புகளை பார்த்தான். எல்லாம் சரியாகவே இருந்தது. அது, அவர் நிலம் தான். அளவும் சரியாக குறிக்கப்பட்டு இருந்தது.
ஒரு வாரத்தில் மிக விரைவாக காரியங்கள் நடந்தேறின.
அவர் குடும்பமே, 'எங்களை தகுந்த நேரத்தில் காப்பாற்றினீர்கள்...' என்று, வாசல் வரை வந்து, வழி அனுப்பியது; அவன் நெகிழ்ந்தான்.
ஒரு மாதத்திற்கு பிறகு, இந்த நிலத்தை, வேறு ஒருவருக்கு விற்க, முடிவு செய்தான், ரவி. அதுகுறித்து -விபரம் அறிய, 'ரிஜிஸ்டர்' அலுவலகம் சென்று, முனுசாமி என்ற அலுவலரை தேடினான். அவர் கண்ணில் படவில்லை.
''யாரு தம்பி... என்ன வேணும்,'' என்றார், அங்கிருந்த ஒருவர்.
''முனுசாமி சாரை, பாக்க வந்துருக்கேன்... அவருக்கு என்னை தெரியும்,'' என்றான்.
''ஓ... சுருட்டை முடி, முனுசாமி... அவன், அலுவலர் இல்ல தம்பி... புரோக்கர். என்ன விஷயம் சொல்லுங்க,'' என்றார்.
''இந்த நிலம், போன மாசம் தான் வாங்குனேன்... இதை விக்க, என்ன நடைமுறைன்னு தெரிஞ்சிட்டு போகலாம்ன்-னு வந்தேன்... 'எப்போ வேணா வாங்க தம்பி... நானே வித்து தர்றேன்...'ன்னு, அவர் சொன்னார்,'' என்றான்.
கோப்புகளை வாங்கி பார்வையிட்டார்.
படித்து, சிரித்த அவர், ''ஓ... அந்த இளிச்சவாயன், நீங்க தானா... இதுல, நடுவுல இருக்குற, 1 சென்ட் நிலம் வழியா, அரசாங்கம் ரோடு போட முடிவு செஞ்சிருக்கு... சரியான அனுமதி இல்லாத நிலம்... கேட்டால், கேட்ட விலைக்கு குடுக்க வேண்டி இருக்கும்...
''மொத்தத்துல உங்க நிலம், 2 சென்ட் தான்னு நெனச்சுக்கோங்க... இங்க, 1 சென்ட், மூணு லட்சம் போவுது... ஆறு லட்சத்துக்கு விக்கலாம்... ஆனா, பிரிஞ்சு கிடைக்கற, 2 சென்ட் நிலத்தை விக்கிறது, அவ்ளோ சுலபம் இல்ல... 'பிராடு' பசங்க சார் அவனுங்க...
''நிலம் ராசின்னு சொல்ல, ஜோஸ்யக்காரன் முதற்கொண்டு, ஆள் புடிச்சு வெச்சிருப்பானுங்க... முறையா எல்லாத்தையும் செய்தால், உங்களை யாரு ஏமாத்த முடியும்... பேராசை யாரை விட்டது,'' என, சொல்லியபடி அவர் நகர்ந்தார்.
சில நொடிகள் சிலையாக நின்ற அவன், ஊருக்குள் போய் தேடிய போது, நிலத்தை விற்றவர் வீடு பூட்டிக் கிடந்தது.
நெஞ்சொடிந்து, ஊரை விட்டு கிளம்பிய போது, அவன் கண்ணில் பட்டது, கண்மாய். அதன் கரையில் சில நொடிகள் அமர்ந்தபடி, நீரில் தெரிந்த தன் பிம்பத்தை முறைத்தான்.
'மூன்று சென்ட்டில், நடுவில் உள்ளது செல்லாதது...' என, மீண்டும் மீண்டும், அவன் வாய் முணுமுணுத்தது.
அவன் மனக்கண்ணில், டீ கடையில், மூன்று ரூபாய் சில்லரைக்கு, இரண்டு ஒரு ரூபாய் நாணயத்துக்கு மத்தியில், அவன் வைத்து கொடுத்த, ஒரு யூரோ சென்ட் நாணயம் மெல்ல விரிந்து, பெரிதாகத் தெரிந்தது.

ஸ்ரீநாத்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
29-ஆக-201911:19:38 IST Report Abuse
Girija வல்லவனுக்கு வல்லவன் எங்கும் உண்டு . முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X