அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
00:00

அன்புள்ள அம்மா —
என் வயது, 27, படிப்பு: பி.காம்., கணவர் வயது, 33. எம்.பி.ஏ., படித்து, தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். எங்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது; குழந்தைகள் இல்லை.
நான் பள்ளியில் படிக்கும்போது, உயிர் தோழி ஒருத்தி, விஷக் காய்ச்சலால் இறந்து போனாள். அவளது இறுதி மூச்சு நின்றபோது, அருகிலேயே இருந்த எனக்கு, அந்த அதிர்ச்சி விலகவே இல்லை.
மேலும், எங்கள் வீட்டில், ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அந்த சூழ்நிலையில் வளர்ந்த எனக்கும், நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.
இந்நிலையில், எங்கள் வீட்டுக்கு வந்த ஜோதிடரிடம், என் ஜாதகத்தை கொடுத்தனர், பெற்றோர்.
'ஜாதகத்தில் தோஷம் உள்ளது. என்னை துரத்திய சாவு, உடன் இருந்த உயிரை பலி வாங்கி விட்டது...' என்று கூறினார், ஜோதிடர்.
எனக்கு வந்த காலன் தான், என் தோழியை பாதித்ததோ என்று எண்ணி வருத்தமடைந்தேன். இதனால், குற்ற உணர்வில் பரிதவித்து போனேன்.
போதாக்குறைக்கு, 'என் ஜாதகப்படி, என்னுடன் இருப்பவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும்...' என்று கூறினார். பெற்றோர் பயந்து, விடுதியில், சேர்த்து, என்னை படிக்க வைத்தனர்.
தோழியின் மரணம் குறித்த குற்ற உணர்வும், நெருக்கமானவர்களுக்கு என்னால் ஆபத்து ஏற்படும் என்று ஜோதிடர் கூறியதும், என்னை அலைக்கழித்தது. அதிலிருந்து, நட்பு வட்டம் அல்லது உறவினர்கள் யாராவது இறந்தால், என் மனம் நடுநடுங்க ஆரம்பித்தது. நாளாக நாளாக, ஏதாவது இறப்பு செய்தியை கேட்டாலே, பயத்தில் உடல் நடுங்குகிறது.
இதுபற்றி, என் பெற்றோரிடம் கூற, 'அதெல்லாம் மன பிரமை... அதையே நினைத்து, உன்னை நீயே வருத்திக் கொள்ளாதே...' என்று கூறி, திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
புகுந்த வீட்டுக்கு வந்த பின்னும், என் நிலை மாறவே இல்லை. கணவரது உறவினர் என, யாருடைய இறந்த செய்தியை கேள்விப்பட்டாலும், உடல் நடுங்கி, வியர்த்து, மயக்கமே வந்து விடும். இதனால், எனக்கு ஏதோ பிரச்னை என்று உணர்ந்த கணவர், விசாரித்தார். கடந்த கால விஷயத்தை கூறினேன்.
மனநல மருத்துவரிடம், சிகிச்சை பெறலாம் என்று அழைத்தார், கணவர். ஆனால், எனக்கு தான் தயக்கமாக உள்ளது.
இந்த விஷயம் வெளியே தெரிந்தால், 'மனநிலை சரியில்லாதவள்' என்று முத்திரை குத்தி விடுவரோ என்று தவிக்கிறேன். 'பைத்தியம்' என்று கூறி, கணவர், கைவிட்டு விடுவாரோ என்றும், பயமாக இருக்கிறது.
இந்த பிரச்னையிலிருந்து விடுபட, நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.
இப்படிக்கு,
உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —
பூமியில், ஒவ்வொரு நொடியும் லட்சக்கணக்கான உயிர்கள் பிறக்கின்றன; லட்சக்கணக்கான உயிர்கள் இறக்கின்றன. பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும், மரணம் மற்றும் அதிகபட்சம் எத்தனை நாள் வாழும் என்ற கணக்கு உண்டு.
மனிதன் பிறந்த ஒரு ஆண்டுக்குள் இறந்தால், சிசு மரணம் எனவும், 20 வயதில் இறந்தால், அகால மரணம், 80 வயதில் இறந்தால், சிவலோக பதவி அடைந்தார் எனவும் கூறுவர். ஒரு உயிர் பிறப்பதும், இறப்பதும், இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல் பணி.
ஒரு மனிதன், இன்னொரு மனிதனை கொலை செய்தாலோ, தற்கொலைக்கு துாண்டினாலோ, தவறான மருத்துவம் பார்த்து, நோயாளியின் இறப்புக்கு காரணமானாலோ குற்றம். மற்றபடி, ஜாதக தோஷத்தால் பிறர் மரணத்திற்கு ஒருவர் காரணமாக இருப்பார் என்பது, மூடநம்பிக்கை.
ஒரு விமானத்தில் பறக்கிறாய். விமானம் விபத்துக்குள்ளாகி, உன்னை தவிர அனைத்து பயணியரும் உடல் கருகி இறந்து விடுகின்றனர். நீ மட்டும் தப்பித்து கொள்கிறாய். என்ன நினைப்பாய்... 'இறைவன் அருளால் நாம் உயிர் பிழைத்தோம்...' என்றுதானே...
அதை விட்டு, 'என்னால், 262 பயணியர் இறந்து விட்டனர்; நான் ஒரு கொலையாளி. என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்...' என, முட்டாள்தனமாய் முடிவெடுப்பாயா?
உன் ஜாதகப்படி, உன்னுடன் இருப்பவர்களுக்கு ஏதாவது ஆபத்தும், மரணமும் ஏற்படும் என, பெற்றோர் உன்னை விடுதியில் சேர்த்து படிக்க வைத்தனர் என்றுள்ளாயே... உன் ஜாதக தோஷம், உண்மை என்றால், விடுதி தோழிகளுக்கு ஆபத்தும், மரணமும் ஏற்பட்டிருக்க வேண்டாமோ?
வாழ்க்கை, ஒரு ரயில் பயணம். அதில் பயணிக்கிறோம். அவரவர் இறங்க வேண்டிய நிலையம் வந்ததும், இறங்கி போய் விடுகின்றனர். இறங்க வேண்டிய நிலையம் வராததால், நாம் இன்னும் வாழ்க்கை ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், நாம் இறங்க வேண்டிய நிலையம் வரும்; அப்போது, இறங்கி தான் தீரவேண்டும். ஏற்கனவே இறங்கியவர்கள், நம்மால் இறங்கவில்லை; நாம் அவர்களை தள்ளியும் விடவில்லை.
மனிதனின் மரபணுவில், அவன் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வான் என்பது, தெளிவாக பச்சை குத்தப்பட்டுள்ளது என்கிறது, விஞ்ஞானம்.
ஒரு ஆணோ, பெண்ணோ, எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்ந்தனர் என்பது முக்கியமல்ல... உயிரோடு இருந்த வரை, எவ்வளவு பேருக்கு உதவியாக இருந்தனர் என்பதே முக்கியம்.
மரணத்தை தத்துவார்த்தமாக அணுக வேண்டும்; உணர்ச்சிப்பூர்வமாக அல்ல. நாம் நினைப்பது போல பிரளய வேதனையை தருவதல்ல, மரணம்; பூரண அமைதியை தருவது.
இப்போதெல்லாம், பள்ளி மாணவர்களில் இருந்து, முதியோர் வரை, அனைவருக்கும் மன நல ஆலோசனை தேவைப்படுகிறது.
மகளே... நீ மன நல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டாம், வெறும் ஆலோசனை பெறு. ஆலோசனை பெறுபவர்கள் எல்லாம், மனநிலை சரியில்லாதவர்கள் அல்ல.
உன் உறவு, நட்பு வட்ட அங்கத்தினர்கள் நீண்ட நாள் வாழ, இறைவனை பிரார்த்தனை செய். உனக்கும், கணவருக்கும் சேர்த்து பிரார்த்தி.
ஒவ்வொரு மனித உயிரும் இறப்பதற்கு முன், அவரவர் பணியில் ஏதாவது சாதித்து, மரணத்திற்கு பின்னரும் அவர்களின் புகழ் அழியாதிருக்க வழி செய்திடல் நலம். மரணத்தை நற்காரியங்களால், சாதனைகளால் மனித நேயத்தை வெல்வோம், மகளே!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
27-ஆக-201900:14:53 IST Report Abuse
HoustonRaja வணக்கம்.. பயமோ, படபடப்போ அல்லது மற்ற அதீத உணர்ச்சிகளோ நம்மை முழுதும் ஆட்கொள்ளும்-முன் நாம் செய்யக்கூடியது இது... அவற்றை நாம் உணரும் "முதல்" தருணத்தில், ஆழமாகவும், மெதுவாகும் சுவாசிக்க துவங்கவேண்டும்.. அடிவயிற்றில் காற்று சென்று வருவதை கவனிக்கவேண்டும்.. அந்த அதீத உணர்வின் பெயர் சொல்லி அழைக்கவேண்டும் (ஓசையின்றியும் செய்யலாம்) .. உ..தா.. நான் கோவமாக இருப்பதை உணர்கிறேன்.. அப்போது உடலில் ஏற்படும் மாற்றங்களையும் பட்டியலிடவேண்டும்.. உ..தா.. எனது அடிவயிறு கலக்குகிறது.. இப்படியே, ஆழமாக சுவாசித்தபடி, நம் உடலில், மனதில் தோன்றும் உணர்வு/உணர்ச்சிகளை ஒவ்வென்றாக பட்டியலிட வேண்டும்.. இப்படி 5 நிமிடங்களுக்கு பயிற்சி செய்வதின் மூலம், அதீத உணர்வுகளின் இறுக்கம்/தாக்கம் மெல்ல குறையும்.. இறுக்கம், சற்று குறைந்த பின்.. பின்வரும் நான்கு கேள்விகளுக்கான பதிலை கவனமாக, சிந்திக்க வேண்டும்... 1) நமக்கு மீண்டும் மீண்டும் வரும் இந்த துயரின் தன்மை என்ன? 2) இந்த துயரம் எங்கிருந்து வருகிறது?? 3) அந்த துயரில்லாத நிலையில், நாம் எப்படி இருப்போம்? 4) அந்த துயரில்லாத நிலையை எப்படி அடைவது?.. இந்த ஆராய்ச்சிக்கு, குறிப்பெடுத்தல் மிகவும் அவசியம்.. குறிப்புகளை, வேண்டுமானால் ஒவ்வொரு முறையும் அழித்துவிடலாம்.. தோன்றும் பதில்களை தானாகவோ, துணையுடனோ விவாதித்து, அவற்றுள் பயனுள்ளவற்றை (effective) செயல் படுத்த வேண்டும்.. அப்படி செய்ய துவங்கும் போது, அதீத உணர்ச்சிகள் மீண்டும் தோன்றினால், இப்பதிவை முதலிருந்து படிக்கவும்.. "பயம் மட்டுமே.. பயப்படுத்தற்குரியது" (The only thing to fear, is fear itself FDR)... வாழ்த்துக்கள்.. நன்றி..
Rate this:
Share this comment
Valaikuda Vallal - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஆக-201910:02:10 IST Report Abuse
Valaikuda Vallalஎன்ன சொல்ல வரீங்க ராஜா? மூட்டை பூச்சியை கொல்லும் நவீன மிஷின் இதுதானா ?...
Rate this:
Share this comment
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
26-ஆக-201911:20:53 IST Report Abuse
R Ravikumar ஜாதகம் உண்மையாக கூட இருக்கலாம் (அநேகமாக). ஜோதிடக்காரர்கள் அநேகமாக அதிகம் பொய் சொல்கிறார்கள். அது ஒரு கணக்கு, மனித வாழ்வை விளக்க ஒரு முயற்சி அவ்வளவே. உங்கள் பயம் அவர்களுக்கு ரொம்ப முக்கியம் அப்போதுதான் காசு பாக்கலாம். ஜோதிடன் என்பவன் இதம் சொல்பவன் நம்பிக்கை அளிப்பவன். பயமுறுத்துபவன் அல்ல. ஜாதகத்தை விட விதி வலியது, விதியை எதிர் கொள்ள பக்தி, அல்லது கடவுள் நம்பிக்கை உதவி செய்யும். தியானம் உங்களை பலப்படுத்தும். அப்படி ஜாதகம் பார்த்தாலும், பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சொல்ல கூடாது . positive விஷயங்களை மட்டும் சொல்வது நல்லது .
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
26-ஆக-201900:23:17 IST Report Abuse
D.Ambujavalli எந்த ஜாதகத்திலும் ஜாதகருடைய கால நிலை, ஆயுள்பாவம், வாழ்க்கை உயர்வு தாழ்வுகள் இருக்குமே தவிர யாரோ சம்பந்தமில்லாதவர்களின் ஆயுள் முடிவு இருக்காது உலகில் பிறந்தால் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. நாம் எல்லாருமே பிறந்த அன்றே மரண தினத்துக்குண்டான வரிசையில் நிறுத்தப்படுகிறோம். முன்னால் நிற்பவர் யார் , பின்னால் நிற்பவர் யார் என்று யாருக்கும் தெரியாது. வீண் கவலைகளை மனதில் அடைத்துக்கொள்ளாமல், வாழும் நாள் இறைவன் அளித்த பரிசு என்று உபயோகமாக வாழ வேண்டும்
Rate this:
Share this comment
Girija - Chennai,இந்தியா
26-ஆக-201910:21:28 IST Report Abuse
Girija@D.Ambujavalli - bengaluru,இந்தியா நல்ல ஆலோசனை. சகோதரி இவரது யோசனையை ஏற்கவும், தவிர உங்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது, குழந்தை இல்லை போன்ற சூழ்நிலைகள் நீங்களே உங்கள் வாழ்வை தொலைக்கின்ற நிலைக்கு தள்ளிவிடும். உங்கள் பிரச்சனையை எல்லோருக்கும் சொல்வதால் உங்களிடம் எல்லோரும் பேசவே பயப்படுவர். எழுபத்திஐந்து அரசியல்வாதி ராஜ்ய சபாவில் பேசும்போது நான் இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடம் இருப்பேன் என்று சொன்னார், இதுதான் உலகம். உங்களுடைய வீக்னெஸை வெளியில் சொல்லக்கூடாது அதுதான் உங்களுடைய ஸ்ட்ரென்த். முடிந்தால் வேலைக்கு போக முயற்ச்சி செய்யுதுங்கள் , இனிமேல் இதேபோன்று பேசுவதில்லை, நினைப்பதில்லை, இதுபோன்ற செய்திகளை படிப்பது பார்ப்பது இல்லை என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். டைலரிங், குக்கிங், ஹவுஸ் கீப்பிங் போன்ற விஷயங்களில் மனதை செலுத்துங்கள். மருத்துவரிடம் போனாலும் இதேபோன்று தான் யோசனை கூறுவார், இதற்கு அறுவை சிகிச்சை கிடையாது, வாக்கிங் போன்ற உடற்பயிற்சிகள் நல்ல பலன் அளிக்கும் யூடியூபில் யோகா வகுப்புகளை பார்த்து செய்து பொழுது போக்குங்கள். எல்லாவற்றையும் விட முக்கியமானது இனிமேல் எவருக்கும் உங்கள் பிரச்னையை சொல்ல மாட்டேன் பேசமாட்டேன் என்று உங்களுக்குள் உறுதி மொழி எடுங்கள். வாழ்வை இனிமையாக்கி கொள்ளுங்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X