அப்பாவின் ஆன்மா தூண்டியதோ?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
00:00

படிப்பு மற்றும், நிரந்தர வருமானம் இல்லாமல், சொந்தமாக பல தொழிலில், ஏற்றத்தாழ்வை சமாளித்து, கடைசியில், 'முருகன் டிராவல்ஸ்' என்ற சுற்றுலா தொழிலை ஆரம்பித்தார், அப்பா.
ஒவ்வொரு முறையும், 40 - 50 பேரை, காசி, காஷ்மீர் மற்றும் பத்ரிநாத் என, தனி ஆளாக, சுற்றுலா அழைத்துச் சென்றார். ஆறு குழந்தைகளையும் படிக்க வைத்து, அவர்களுக்கு நல்லது செய்து, ஆசையாக ஒரு வீட்டையும் கட்டினார்.
அந்த காலத்தில், காசி, காஷ்மீர் மற்றும் பத்ரிநாத், சுற்றுலா நடத்துவது, சாதாரண விஷயம் இல்லை. இந்த காலத்து, எம்.பி.ஏ., படித்தவர்கள் கூட, அப்பாவிடம், பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ரயில் சுற்றுலாவில் ஒவ்வொரு முறையும், 40 - 50 பேருடன், சமையல் செய்வதற்கு ஆட்கள், சமையல் பொருட்கள், வேளா வேளைக்கு பயணியருக்கு உணவு...
அந்தந்த ஊரில், பல இடங்களை, 'மைக்' கூட வைத்துக் கொள்ளாமல், ஒரு வழிகாட்டி போல், கத்தி கத்தி, விளக்கம் கொடுப்பார். அப்பப்பா, அவர் பட்ட பாடு... சிறு பெண்ணாக நான் இருந்ததால், அவ்வளவு விபரம் தெரியவில்லை.
ஒரு பழைய, 'டைப்ரைட்டரை' வைத்து, சுற்றுலா கிளம்புவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் வரை, தட்டச்சு செய்வார். உதவிக்கு, சாம்பசிவம் என்ற எழுத்தரை வைத்துக் கொண்டார்.
நான், கல்லுாரியில், பி.ஏ., முடித்தேன். நேரம் கிடைக்கும்போது, சுற்றுலாவுக்கான வேலையும் பார்த்து கொடுப்பேன். ஒரு குண்டூசி கூட அநாவசியமாக செலவு செய்யாத, சிக்கன செம்மல், அப்பா.
பார்க், மிருகக்காட்சி சாலை, 'செகரெட்டரியட்' என, முன்கூட்டியே, ஒவ்வொரு இடத்திற்கும் அழைத்துச் செல்லும் முன், அனுமதிக்கான கடிதத்தை தபாலில் அனுப்ப வேண்டும்.
தப்பித்தவறி ஏதாவது ஒரு ரயில் தாமதம் அல்லது புயல், மழை போன்ற எதிர்பாராத தடங்கல் ஏற்படலாம். இதனால், திட்டமிட்டபடி, பார்க்க வேண்டிய சில இடங்களுக்கு அழைத்துச் செல்ல முடியாமல் போகும். அப்போது, சில சுற்றுலா பயணியர், அப்பாவின் பெருந்தன்மையை புரிந்து கொள்ளாமல் சண்டை போடுவர். பொறுமையாக பேசி சமாளிப்பார்.
ஒருமுறை, சுற்றுலா சென்றபோது, அப்பாவுக்கு, கண் பார்வை மங்கியது. அவரின் உயிர் தோழன், நடேசன் மாமாவை உடன் செல்லுமாறு வேண்டிக் கொண்டேன். அதன்பின், நடத்திய எல்லா சுற்றுலாவுக்கும், நடேசன் மாமாவை அழைத்துச் சென்றார்.
ஒவ்வொரு முறையும், சுற்றுலா போய் வந்த பின், வெண்கல கடையில் யானை நுழைந்தது போல், கலகலவென்று இருக்கும், அவர்கள் பேச்சு. காலை, மதிய உணவு கூட முடிந்து விடும். ஆனால், அவர்கள் பேசியபடியே இருப்பர்.
இருவரின் மனதொன்றிய நட்புக்கு முன், எவரும் போட்டி போட முடியாது. குழந்தைகள் மற்றும் அம்மாவை விட, நடேசன் மாமாவிடம் மட்டுமே, மனம் திறந்து பேசியிருக்கிறார், அப்பா.
எட்டாம் வகுப்பு தாண்டாத, அவர், உலக ஞானத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி, காஷ்மீரி மற்றும் ஆங்கிலம் என, பல மொழிகளில் சரளமாக உரையாடுவார்.
பல ஆண்டுகளாக, சென்னையிலிருந்து - காஷ்மீர் வரை, சுற்றுலா சென்று வந்ததால், மும்பை, கோல்கட்டா மற்றும் காசி ஆகிய இடங்களில் தங்கும்போது, சுமைக்கூலிகளுடனும், அதிகாரிகளுடனும் அதிக பழக்கம்.
முக்கியமாக, சுமைக்கூலிகள்...
'முருகன் டிராவல்ஸ்' வந்தாச்சு என்றால், தங்களுக்கு கிடைக்கும் கூலி வேலைகளை கூட ஏற்க மாட்டார்கள். அப்பாவின் வண்டி, அங்கிருந்து அடுத்த ஊருக்கு புறப்படும் வரை, அனைவருக்கும் வேளா வேளைக்கு சாப்பாடு, அவர்களுக்கு வேண்டிய உதவியையும் செய்து கொடுப்பர்.
விடை பெறும்போது, அவர் கொடுக்கும், ரூபாயை வாங்கி கண்ணில் ஒற்றி, 'அடுத்த சுற்றுலா, எப்ப சாமி...' என, கண்ணீர் விட்டு கேட்கும்போது, கல் நெஞ்சங்கள் கூட கரையும்.
'டேய் படுபாவிகளா... அப்பா, கத்தி கத்தி சம்பாதிச்சு, ஒவ்வொரு செங்கலாக வைத்து உருவாக்கின வீட்டை, இல்லை... கோவிலையா விற்க போறீங்க...' என, சகோதரர்களின் கன்னத்தில், அறைந்து கேட்க வேண்டும் போல் இருந்தது, கோமதிக்கு.
தன் தேவைகளை குறைத்து அம்மா, அவருக்கு கொடுத்த ஒத்துழைப்பு, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அவ்வளவு ஏன்... என் இரண்டு குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய தவித்தபோது, அப்பா - அம்மாவின் தியாகத்தையும், பட்ட பாட்டையும், வார்த்தையால் சொல்ல இயலாது.
ஒவ்வொரு முறையும், அப்பாவை, சுற்றுலாவுக்கு அனுப்பும் போதும், 'அவர், நலமுடன் வரவேண்டும்...' என, பிரார்த்திப்பார்.
பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில், வயதான சுற்றுலா பயணியரை, சமையல்காரரின் பொறுப்பில் விட்டு விட்டு, மற்ற பயணிகளை, காஷ்மீருக்கு அழைத்துச் சென்றார். வழி நெடுக, ராணுவ வாகனங்கள் நிற்கும். பஸ்சில், 'ஓவர்டேக்' செய்யும்போது, வலது பக்கத்தில் இருக்கும் பள்ளத்தாக்கில் விழுந்து விடுமோ என, பயமாக இருக்கும்.
காஷ்மீர் சுற்றுலா என்றாலே, அப்பா திரும்பி வரும் வரை கவலையாக இருக்கும். இரண்டாவது வரை தான் படித்திருந்தாள், அம்மா. அப்படி இருந்தும், அப்பா, சுற்றுலா சென்ற பின், வீட்டில் வந்து கேட்கும், சுற்றுலா பயணியருக்கு விபரம் கூறி அனுப்பி வைப்பாள். சொல்லப் போனால், அம்மாவும், தனியாகவே, சுற்றுலா நடத்தும் அளவுக்கு திறமை பெற்றிருந்தாள்.
கையெழுத்து போட, சகோதர - சகோதரிகள் ஆறுபோரும், 'சப் - ரிஜிஸ்திரார்' அலுவலகத்தில் கூடினோம்.
மற்றவர்களை விட, கடைசி பெண்ணான நான், கல்யாணத்துக்கு முன், 28 ஆண்டுகள், அப்பா, அம்மாவுடன் கூடவே இருந்து, அவர்களின் சுக துக்கங்களை பங்கு போட்டுள்ளேன்.
அக்கா இரண்டு பேரும், அப்பாவின் சுகமான காலத்தில் இருந்தவர்கள். அண்ணன் மூன்று பேரும், படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்கும், வெளியூர் சென்று விட்டனர்.
எப்போதுமே வீட்டின் முதல் குழந்தைக்கும், கடைசி குழந்தைக்கும் தான், அப்பா - அம்மா கஷ்டத்தில் அதிக பங்கு உண்டு. மூத்த அண்ணன், கல்யாணத்துக்கு பின், அப்பா - அம்மாவை அவ்வளவாக கவனித்துக் கொள்ளவில்லை. மற்ற இரண்டு அண்ணனுக்கும், பெற்றோரிடம் பாசம் இல்லை. நான் தான், அதிக பாசம் வைத்திருந்தேன்.
இன்று, அவர்களது பிள்ளைகள் என கூறிக்கொண்டு, ஒரே சம்பாத்தியமான, வீட்டிற்கும் பங்கு கேட்டு வந்து விட்டனர். அண்ணன்களுக்கு வாய்த்த மனைவிமார்கள் சுயநலவாதிகள்.
பத்திரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திடும்போது, 'நாங்கள் பட்ட கஷ்டம், கொஞ்சம் நஞ்சமா... வெயிலிலும், மழையிலும், ஒவ்வொரு செங்கல்லாக சேர்த்து, பாடுபட்டு கட்டிய வீட்டை, ஒரே நிமிடத்தில் விற்கிறீர்களே...' என, அம்மா - அப்பா கேட்பது போல இருந்தது.
பல முறை என்னிடம், 'இது சாதாரண வீடு இல்லைம்மா... உங்க ஆறு பேரையும், வளர்த்து ஆளாக்கி, நல்ல வாழ்க்கை கொடுக்க உதவி உள்ளது. பசிக்கும் நபருக்கு, சாப்பாடு போடும்போது, கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையே இல்லை...' என, தன் கடைசி நாட்களில், அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார், அப்பா.
'பிற்காலத்தில், உனக்கு வசதி வரும்போது, எங்கள் ஞாபகமாக, இலவச கல்யாண சத்திரம் அல்லது அன்னதான மையம் ஏற்படுத்து... நிறைய பேர், இந்த வீட்டில் இலவசமாக சாப்பிட அன்னதானம் செய்...' என்பார்.
அம்மா காலத்திற்கு பின், அண்ணன், தம்பிகள் மூவரும், அந்த வீட்டில் இருந்தபடியே, பேரும் புகழும் சம்பாதித்தனர். அப்பா விட்டுச் சென்ற, 'முருகன் டிராவல்ஸ்' மூலம் ஆடம்பரமாக, சிங்கப்பூர், மலேஷியா போன்ற வெளி நாடுகளுக்கு விமானத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.
ஒரு குண்டூசி வாங்க கூட யோசித்த, அப்பா எங்கே... காசை தண்ணீர் போல செலவழிக்கும் இவர்கள் எங்கே என, எனக்கு தோன்றும்.
ஆனால், 'அண்ணன் - தம்பிகள் சேர்ந்து செய்யும் வியாபாரத்தில் அதிக நஷ்டம்...' என, என் இரண்டாவது அக்கா, 10 நாட்களுக்கு முன், போன் செய்தாள்.
ஆறு பேரில், குறைவான நிதி நிலைமை, எங்களுடையது தான். கணவருக்கு, அரசு வேலை. வருமானம் குறைவு தான். ஆனால், மனதளவில் எல்லாருக்கும் நிறைய உதவி செய்யும் எண்ணம் அதிகம். என் கல்யாணத்துக்கு அப்புறம், அப்பா - அம்மா மறைவுக்கு பின், சகோதர - சகோதரிகளுடன் ஓரளவுக்கு தான் தொடர்பில் இருந்தேன்.
வீட்டிலேயே முதலாவது பெண் பட்டதாரி, நான் தான். அந்த காலத்தில், பெண்கள், கல்லுாரி- படிப்பு என்பது, பணக்கார வீடுகளில் தான் நடக்கும். அப்பா என் மேல் கொண்ட அளவில்லா பாசத்தில், என்னை, பி.ஏ., வரை படிக்க வைத்தார்.
கல்யாணத்திற்கு பின், தொலை துார கல்வியில், எம்.ஏ., - பி.எட்., முடித்தேன். ஆசிரியர் தொழிலில், கணவருக்கு உதவியாகவும், 10வதும், 8வதும் படிக்கும், இரண்டு பெண்களை கவனிக்கவே, நேரம் சரியாக இருந்தது.
பத்திரப்பதிவு நடைமுறை முடிந்தது. வீட்டை வாங்கியவர், எங்கள் ஆறு பேரின் பெயரிலும், தலா, இரண்டு லட்சம் ரூபாய், 'டிராப்ட்' எடுத்து இருந்தார். என் பெயரிலிருந்த, 'டிராப்ட்'டை மூத்த அண்ணன் கொடுத்தான். அப்பாவின் சதையை பெறுவது போல் இருந்தது.
நான் ஏதாவது சண்டையை ஆரம்பித்து விடுவேன் என, பயந்தார், கணவர்.
''கிளம்பு, கோமதி... நாழியாச்சு, காலா காலத்தில், ஊர் போய் சேர வேண்டும். குழந்தைகள் தனியாக இருக்கின்றனர்,'' என்றார்.
காரில் ஏறி உட்கார்ந்ததும், பிறந்த மண்ணுக்கும், அப்பா - அம்மாவுக்கும் துரோகம் செய்வது போல் இருந்தது. ஒரு பக்கம் அப்பாவின் ஆசைப்படி, இலவச அன்னதான சத்திரமாக மாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம்.
மனது கேட்காமல், ''தாமதமானாலும் பரவாயில்லை. கடைசியாக, வீட்டை ஒரு முறை பார்த்து விட்டு போகலாம்,'' என்றேன்.
அப்பா - அம்மா வீட்டு முன் நின்றது, கார். ஒரு பெரிய ஹாலும், ஆறு அறைகளும், சமையல் அறை, தோட்டம் என, பெரிய வீடு. தோட்டத்தில், பந்தல் போட்டு, சாப்பாடு நடந்து கொண்டு இருந்தது. சரி, இன்றே கிரகபிரவேசம் செய்கின்றனர் போலும் என நினைத்து, காரில் இருந்தபடியே, கும்பிட்டேன்.
அப்பா - அம்மா என்னை உலுக்குவது போல், திடீரென உடம்பில் ஒரு நடுக்கம். என் முகத்தை பார்த்து, ''அமைதியாக இரு... எதுவும் நம் கையில் இல்லை,'' என்றார், கணவர்.
கார் புறப்படும் சமயம், ஒரு பையன் ஓடி வந்து, ''உங்களை, நடேச மாமா, கூட்டி வரச் சொன்னார்,'' என்றான்.
உள்ளே சென்று பார்த்தபோது, சிறிதும் அடையாளம் தெரியாமல், கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். எனக்கு துாக்கி வாரிப் போட்டது. கிட்டத்தட்ட, 12 ஆண்டுகள் ஆகி இருக்கும், அவரைப் பார்த்து. என்னைப் பார்த்ததும், பொல பொல என்று ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.
''உங்க அப்பா, 'எங்க பசங்க, இந்த வீட்டை விற்க நினைத்தால், அதை வாங்கி, அன்ன சத்திரம் நடத்துடா...'ன்னு, கூறினார். வெளி நாட்டில் சம்பாதித்து கொண்டிருந்த, பேரன்மார்கள், 'தேவையான பணத்தை நாங்கள் தருகிறோம்... உங்கள் ஆசையை நிறைவேற்றிக்கோங்க...' என, ஒத்துழைப்பு கொடுத்தனர்.
''நான் சாவதற்குள், உன் அப்பா ஆசையை நிறைவேற்ற ஆசைப்பட்டேன்ம்மா... ஆனால், உங்க அப்பாவின் நல்ல மனதுக்கு நடக்கிறத பார்த்தியா,'' என்று குரல் கம்ம, கையை பிடித்து இறைஞ்சினார்.
வெளியில் வரும்போது தான் கவனித்தேன். அப்பா பெயர், ஹரிஹரன். ஆதலால் தான், 'ஹரிஹரன் அன்ன தான மையம்' என, விளம்பர பலகை மாட்டி இருந்தனர்.
''மாமா... கவலைப்படாதீங்க, உண்மையில், என் கடமையை நீங்க பூர்த்தி செஞ்சுட்டீங்க... உங்களுக்கு பல கோடி நன்றி... நீங்க தான், அவரின் உண்மையான நண்பர்,'' எனக் கூறி, கைத்தாங்கலாய் அவரை பிடித்து உட்கார வைத்தார், என் கணவர். இருவரும் நமஸ்காரம் செய்தோம்.
கனவா அல்லது நனவா... அப்பாவின் ஆன்மா இருக்கும் இடத்தை வெறித்தபடியே நின்றேன்.
கோமதி சீனிவாசன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கார்த்திகேயன் தாரணி சரியா சொன்னீங்க கிரிஜா மேடம். எனக்கும் இப்படிதான் தோன்றியது...
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
26-ஆக-201901:20:14 IST Report Abuse
Girija உங்கள் சொந்த கதையை எழுதியுள்ளீர்கள் போன்று உள்ளது. நாடென்ன செய்தது நமக்கு ? என்று கேள்வி கேட்கும் ரகம் கதாநாயகி. தந்தை இவரை மட்டும் பட்டப்படிப்பு படிக்க வைத்திருக்கிறார் ஆனால் , இவர் மட்டும் ஏழையாம், கூட பிறந்த மற்றவர்கள் நல்ல வசதியாக உள்ளனராம், கணவனுக்கு அரசு வேலை, அவருக்கு ஆசிரியை வேலை இருந்தும் இவருக்கு திருப்தி இல்லை, மற்ற உடன்பிறப்புகள் பொறாமைகாரர்கள். இது ஒருபுறம், இவர் பெற்றோரர்களுக்கு என்ன செய்தார்? அந்த நடராஜ மாமாவிற்காவது எதாவது செய்தாரா? க்ளைமாக்சில் நடராஜாமமா என்ட்ரி பயங்கரமாக இடிக்கிறது . வீட்டை வாங்குவது யார் என்று இவருக்கு கடைசிவரை தெரியாதா அல்லது இவ்வளவு அக்கறை எடுத்த அந்த நடராஜ மாமா அவர் வீட்டை வாங்கி அன்னதான சாத்திரமாக மாற்றப்போவதை கூட இவருக்கு சொல்லவில்லையா? அது எப்படி காருக்குள் இருக்கும் உங்களை வீட்டில் கட்டிலில் வயோதிகத்தில் படுத்திருப்பவருக்கு தெரிந்தது? சரி அப்படியே உள்ளே போன கதாநாயகி தன் பங்கு ரெண்டு லட்ச ருபாய் ஐ நன்கொடையாக அல்லவா குடுத்திருக்கவேண்டும் ? அலகு( ழ) டமில் லில் வால்த்த வயதில்லை என்று பேசிவிட்டு கிளம்பிவிட்டார். ஒர்க் ப்லோவ், ஸ்டக்ச்சர், சீக்வன்ஸ், லாஜிக் தவறுகள் உள்ளது .
Rate this:
Share this comment
Cancel
25-ஆக-201904:15:01 IST Report Abuse
தீதும் நன்றும் பிறர் தர வாரா சில நண்பர்கள் உறவுகளை விட மேல்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X