தேவர் படத்தில் நடிக்க, வாய்ப்பு கிடைத்தது. லாரி கிளீனர், வேடம்.
'நீயே ஏதாவது நடி...' என்று கூறினார், தேவர்.
'பானட்டை திறந்து பார்ப்பது போல நடிக்கட்டுமா...' என்றேன்.
'மெக்கானிக் தானே, பானட்டை திறந்து, 'ரிப்பேர்' பார்க்கணும்... நீ, கிளீனர் தானே... ஒரு துணியை தோள் பட்டையில் போட்டுக்க...' என்றவர், சற்று திரும்பி, 'இவனுக்கு, ஒரு பக்கெட் தண்ணி குடுங்கப்பா...' என்றார்.
'தண்ணியை எடுத்துக்கிட்டு, லாரியை கிளீன் பண்ண வர்ற மாதிரி நடந்து வா...' என்றார்.
'வண்டியில் என்ன பிரச்னை... 'பேன் பெல்ட்'டை பார்த்தியா...' என்று, டிரைவரை கேட்பார், மெக்கானிக்.
'கிளீனர் பையன் சும்மாதானே நிற்கிறான்... இவனுக்கும், பணம் குடுக்கிறோம்ல்ல... இந்த கேள்வியை, அவனை பார்த்து கேளு...' என்றார், தேவர்.
என்னை பார்த்து, மெக்கானிக் கேட்கவும், நான், சட்டை பாக்கெட்டை திறந்து காட்டியபடி, 'ஐயோ... நான் எடுக்கலைங்க...' என்றேன்.
சட்டென்று சிரித்து விட்டார், தேவர்.
'இதாம்பா, நாகேஷ்... அவன், 'பார்த்தியா'ன்னு கேட்ட உடனேயே, சட்டுன்னு, 'நான் எடுக்கலை'ன்னு சொன்னது, எவ்வளவு நல்லா இருக்குது... இந்த காட்சியை அப்படியே வைச்சுக்கலாம்...' என்றார்.
அதிலே ஆரம்பித்தது தான். அதற்கு பின், 'தேவர் பிலிம்ஸ்' படங்களில், எனக்கு ஏதாவது ஒரு வேடம் கண்டிப்பாக இருக்கும். என் மீது தேவருக்கு, ரொம்ப பிரியம். நானும், அவரிடம் சகஜமாக பழகுவேன்.
ஒருநாள், அவரிடம், 'தேவரே... உங்கள் பேரை, 'சாண்டோ, எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்'ன்னு போட்டுக்கறீங்க... ஆனா, நான் பார்த்து, நீங்கள் யாரோடயும் சண்டை போட்டதில்லையே...' என்றேன்.
பலமாக சிரித்தபடி, 'நான், சண்டை போட்டு, நீ பார்த்ததில்லையா... என்னப்பா நீ... 'ஷூட்டிங்'குல தினமும், திருமுகத்துகிட்ட, 'ஏண்டா, இப்படி மறுபடி மறுபடி, 'டேக்' எடுத்து, 'பிலிமை வேஸ்ட்' பண்ணறே...'ன்னு சண்டை போட்டுக்கிட்டே இருக்கேனே...' என்றார்.
அவரது நகைச்சுவையை ரசித்தேன்.
சினிமா உலகம், என்னை அங்கீகரித்து, நடிகனாக ஏற்றுக் கொள்ளாத ஆரம்ப கட்டத்தில், எனக்கு சோறு போட்டது, 'ஆல் இந்தியா ரேடியோ' தான்.
நம் ஊரில், 'டிவி' ஒளிபரப்பு ஆரம்பமான காலத்தில், வெள்ளிக்கிழமை இரவு, 'ஒலியும் ஒளியும்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு இருக்கும். அந்த அளவு, வானொலியில் ஒலிபரப்பான நாடகங்களுக்கும் அப்போது இருந்தது.
இன்றைக்கு, 'டிவி'யில் வருகிற மெகா தொடர்கள் போல, அப்போது, வானொலியிலும் ஒலிபரப்புவர். 'துபாஷ் வீடு' மற்றும் 'காப்புக் கட்டிச் சத்திரம்' என்ற, இரண்டு வானொலி நாடகங்களும், 'டிவி' புகழ், 'சித்தி' மற்றும் 'மெட்டி ஒலி' தொடர்களுக்கு மேல், மிக பிரபலமாக விளங்கின.
'துபாஷ் வீடு' நாடகம், பல ஒண்டு குடித்தனங்கள் வசிக்கும் பலதரப்பட்ட குடும்ப கதாபாத்திரங்களால் பின்னப்பட்ட கதை. 'காப்புக் கட்டிச் சத்திரம்' என்பது, பயணியர் தங்கும் ஒரு சத்திரம். அங்கே வந்து போகிற, பல்வேறு விதமான கதாபாத்திரங்கள் இடம்பெறும் கதை. இந்த நாடகங்களில் மிகவும் முக்கியமான வேடம், மனோரமாவுக்கு.
அக்காலத்தில், ஒரு தடவை, நாடக, 'ரிக்கார்டிங்'குக்கு போனால், 15 ரூபாய் தருவர். அதுவும் ரொக்கமாக தர மாட்டார்கள், 'செக்' தான். அதை வாங்கியவுடன், ரிசர்வ் வங்கிக்கு போய், பணமாக மாற்றி, ஓட்டலுக்கு போய் சாப்பிட்ட நாட்கள் பல உண்டு.
அப்போது, வானொலி நிலையத்தில் பணிபுரிந்த, கூத்தபிரான் நண்பரானார். நாங்கள் இரண்டு பேரும், 'செக்'கை வங்கியில் கொடுத்து, பணமாக்கி, பல நாட்கள் ஓட்டலில் சாப்பிட்டதுண்டு.
ஒரு முறை, என்னை பேட்டி காண்பது போல், வானொலியில் ஒரு நிகழ்ச்சியை வழங்கினர். பலரும் பாராட்டிதை, மறக்கவே மறக்காது.
சினிமாவை பொறுத்த வரை, 1963 - 64ம் ஆண்டுகளில், அதிர்ஷ்ட காற்று என் பக்கம், பலமாக வீசத் துவங்கியது என்று சொல்ல வேண்டும்.
அப்போது தான், பல திரைப்பட கம்பெனிகளும், தங்கள் படங்களில், 'நாகேஷுக்கு ஒரு வேடம் கொடுக்க வேண்டும்...' என்று நினைத்தன; வாய்ப்புகள் நிறைய வர ஆரம்பித்தன.
சினிமா உலகில், 'ஹீரோ' ஆக நடிப்பது என்பது தனி. படத்துக்கு, 'ஹீரோ' தான் முக்கியம் என்பதால், அவர்களின் 'கால்ஷீட்'களுக்கு ஏற்ப, மற்றவர்களை, 'அட்ஜஸ்ட்' செய்து தரும்படி கேட்பர்.
நான், 'பிசி'யான காலகட்டத்தில், அப்போதைய திரையுலக ஜாம்பவான்களான, எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி இருவரது படங்களிலும் வாய்ப்புகள் வந்தன. இருவருடைய படப்பிடிப்பும் ஒரே நேரத்தில், வெவ்வேறு இடங்களில் நடக்கும்.
பொதுவாக, ஒன்றுக்கொன்று சிக்கல் வராதபடி தான் பார்த்துக் கொள்வேன். சில சமயங்களில், ஒரே நாளில் இருவரது, 'ஷூட்டிங்'குக்கும் போக வேண்டியதாகி விடும். அப்போது, என் பாடு திண்டாட்டம் தான்.
காலை, 7:00 மணிக்கு, 'ஷூட்டிங்' என்றால், 6:45க்கே, 'மேக் - அப்' போட்டு தயாராக, 'ஸ்டுடியோ'வுக்கு வந்து விடுகிற, சிவாஜியின் நேரம் தவறாமை பற்றி, உலகமே அறியும். அதே போல தான், எம்.ஜி.ஆருக்கும், தாமதம் பிடிக்காத விஷயம்.
ஒருநாள், சிவாஜி பட 'ஷூட்டிங்!' அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. அவரோடு, நான் சேர்ந்து நடிக்க வேண்டிய காட்சிகளை எடுப்பதற்காக, படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் காத்திருந்தனர். நான், வேறொரு படப்பிடிப்பில் இருந்தேன். உடனே வர முடியாத நிலை.
'இதோ, நாகேஷ் வந்திடுவார்... வந்தவுடன், 'ஷாட்' எடுத்திடலாம்... எல்லாம் தயார்...' என்று சொல்லி, சிவாஜியை சமாதானப்படுத்தியபடியே இருந்தனர்.
ஒரு வழியாக, படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்த போது, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, சிவாஜி காத்துக் கொண்டிருக்கும்படி ஆகி விட்டது. எனக்கோ குற்ற உணர்வுடன், உள்ளூர லேசான பயம்.
'சிவாஜியை எப்படி சமாளிப்பது...' என்ற ஆழ்ந்த யோசனையுடன், அவர் உட்கார்ந்திருந்த இடத்தை நெருங்கினேன். யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை.
தொடரும்
நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.
எஸ். சந்திரமவுலி