பா - கே
தொழிலதிபரான நண்பர் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, நான், லென்ஸ் மாமா, குப்பண்ணா, 'திண்ணை' நாராயணன் சார் உட்பட, இன்னும் சில நண்பர்களுடன், அவர் வீட்டுக்கு சென்றிருந்தோம்.
விழா ஏற்பாடுகளும், சாப்பாடும் துாள் கிளப்பின. விழா சிறப்பாக நடந்து முடிய, வந்தவர்களை வழி அனுப்பி வைத்தார், தொழிலதிபர்.
எங்களை தனியாக அழைத்துச் சென்று, புல் தரையில், 'ஷாமியானா' பந்தலின் கீழ் அமர வைத்து, அவரவருக்கு தேவையான, 'ஐட்டங்'களை தாராளமாக பரிமாறி, திக்குமுக்காட வைத்து விட்டார்.
அப்போது, தொழிலதிபரின் உறவினர் ஒருவர், தன் விலை உயர்ந்த காரை முரட்டுத்தனமாக ஓட்டியபடி, பங்களாவிற்குள் நுழைந்தார். முன்னும், பின்னும் திருப்பி, 'ரிவர்ஸ்' எடுக்கிறேன் பேர்வழி என்று, அங்கிருந்த பூந்தொட்டிகளை எல்லாம் துவம்சம் செய்து, ஒரு வழியாக, 'பார்க்' செய்தார்.
விழாவிற்கு தாமதமாக வந்ததற்கு, தொழிலதிபரிடம் மன்னிப்பு கேட்டபடியே, வேகமாக உள்ளே சென்றார்.
'இவர், என் மனைவியோட சொந்தம்பா... பேச்சு உட்பட எதையுமே நாசூக்காக, நாகரிகமாக செய்ய தெரியாதவர். மனைவியின் சொந்தம் என்பதால் எதுவும் பேச முடியாது...' என்று, சலித்துக் கொண்டார்.
மேலும் தொடர்ந்தவர், 'உலகின் பல நாடுகளில், வாகனங்களை ஓட்டுவது சார்ந்த சில விசித்திரமான சட்டங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, சிலவற்றை கூறுகிறேன்...' என்று ஆரம்பித்தார், தொழிலதிபர்:
தென்கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தில், ஆண்டின் பெரும்பாலான மாதங்கள், நம்மூர் போலவே வெய்யில் வெளுத்து வாங்கும். இதனால், வாகனங்களை ஓட்டுவோர், சட்டை, பனியனை கழற்றி, திறந்த மார்புடன் கார் ஓட்டிச் செல்வர்.
ஆனால், இப்படி ஓட்டுவது சட்டபடி குற்றம். திறந்த மார்புடன் கார் ஓட்டி, போலீசில் சிக்கினால், அபராதம் கட்ட வேண்டும். ஒருமுறை சிக்கினால், இந்திய மதிப்பில், 1,160 ரூபாய் அபராதம். இது, இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்.
மேலும், ஜட்டி அல்லது டிரவுசர் இல்லாமலும் வாகனங்களை ஓட்டக்கூடாது. மீறி ஓட்டினால் அபராதம் உண்டு. ஆனால், அதிகாரிகள் இதை எப்படி கண்டுபிடிப்பர் எனக் கூறப்படவில்லை.
ஆஸ்திரேலியாவில், கார் ஓட்டிச் செல்லும்போது, ஓட்டுனர் மற்றும் பயணியர், தங்கள் கையை வாகனத்துக்கு வெளியே போடக் கூடாது. கை வெளியில் தெரிந்து, போலீஸ் பிடித்தால், அபராதம் உண்டு. இது, ஆஸ்திரேலியாவில், மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.
உதாரணத்துக்கு, ஆஸ்திரேலியாவின், நியூசவுத்வேல்சில், 337 டாலர், இந்திய மதிப்பில், 16 ஆயிரத்து, 176 ரூபாய். மேற்கு ஆஸ்திரேலியாவில், 50 டாலர், 2,400 ரூபாய் அபராதம்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், நெடுஞ்சாலையில் பயணிப்போர், வண்டியை திடீரென நிறுத்தக் கூடாது; 'பார்க்கிங்' செய்யக் கூடாது. பெட்ரோல் தீர்ந்து போச்சு என, நிறுத்த முடியாது. நெடுஞ்சாலைகளில், 'யூ டேர்ன்' எடுப்பது மற்றும் 'ரிவர்ஸ்' எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி செயல்படுவோருக்கு, 30 - 70 யூரோ, இந்திய மதிப்பில், 2,380 - 5,551 ரூபாய் வரை அபராதம் உண்டு.
மத்திய தரைக்கடல் கிழக்கு பகுதியில் உள்ள, சைப்ரஸ் தீவுகளில், கார் ஓட்டும்போது, பேசக் கூடாது; சாப்பிடக் கூடாது. தண்ணீர் மற்றும் மது அருந்தக் கூடாது. கைகள், வண்டியின், 'ஸ்டியரிங்' பிடித்திருப்பதை தவிர, வேறு எதையும் செய்யக் கூடாது. மீறி ஏதாவது செய்து, கண்டுபிடிக்கப்பட்டால், 85 யூரோ, இந்திய மதிப்பில், 6,740 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.
ரஷ்யாவில், குளிர் காலத்தில், பனி படர்ந்து, சாலைகள் பனிக்கட்டியால் மூடியிருக்கும். இதனால், பலர் வாகனத்தை வெளியே எடுக்க மாட்டார்கள். எனவே, அவற்றில் அழுக்கும், குப்பையும் பரவி இருக்கும். இதே நிலையில், சிலர் வாகனத்தை வெளியே எடுத்தால் அவ்வளவுதான்.
கார்கள் அழுக்காகவும், குப்பையாகவும் இருந்து, அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டால், 500 ரூபிள், இந்திய மதிப்பில், 540 ரூபாய் அபராதம் கட்ட வேண்டி வரும்.
கிழக்காசிய நாடான, ஜப்பானில், மழை பெய்யும் போதோ அல்லது மழை பெய்து ஓய்ந்த பிறகோ, தெருவில் நடக்கும் பாதசாரிகளை லட்சியம் செய்யாமல், கார்கள் சேரிலும், அழுக்கு தண்ணீரிலும் வேகமாக செல்லக் கூடாது. மேலும், பாதசாரியின் உடலில் இவை தெளித்தாலும் கடும் அபராதம் உண்டு.
அழுக்கு தண்ணீர் மற்றும் சேற்றில் கார் ஓட்டினால், 65 யென், இந்திய மதிப்பில், 45 ரூபாய் அபராதம். அழுக்கு தண்ணீர், பாதசாரி மீது பட்டு தொல்லை தந்தது நிஜமானால், அதற்கு கூடுதல் அபராதம் உண்டு.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், கால் பெருவிரல் பக்கத்தில், பிடிப்பு வார் கொண்ட சாதாரண செருப்பு அல்லது குத்துவாள் போன்ற அமைப்பு கொண்ட செருப்புகளை அணிந்து, வாகனங்களை ஓட்டக்கூடாது.
காரணம், அவை, 'பிரேக் பெடலில்' சிக்கி, விபத்துக்கு வழிவகுக்கும். எனவே, இதுபோன்ற செருப்புகளை அணிந்து வண்டி ஓட்டுவது கண்டுபிடிக்கப்பட்டால், 200 யூரோ, இந்திய மதிப்பில், 15 ஆயிரத்து, 860 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
- இப்படி அவர் சொல்லி முடிக்கவும், 'நம்மூரிலும், எத்தனையோ போக்குவரத்து விதிகள் உள்ளன. ஆனால், யாராவது அதை பின்பற்றுகின்றனரா என்றால், இல்லை என்று தான் பதில் கிடைக்கும்.
'ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டுமாறு, நாயாய், பேயாய், அரசும், நீதிமன்றமும் கூவிக் கொண்டிருக்கின்றன, கேட்டால் தானே...
'இதை, 'சட்டம் போட்டு, திருத்தற கூட்டம் திருத்திக் கொண்டே இருக்கிறது; திட்டம் போட்டு, அதைத் தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்கிறது...' என, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஒரு திரைப்பட பாடலில் எழுதியிருப்பார்...' என்று, அலுத்தபடி கூறினார், குப்பண்ணா.
மற்றவர்களும் ஆமோதித்து, தலை ஆட்டியபடி எழுந்து சென்றனர்.
ப
பணம் எடுப்பதற்காக, வங்கிக்கு சென்றார், ஒருவர்.
தவறுதலாக, 100 ரூபாய் அதிகம் கொடுத்து விட்டார், காசாளர்.
அடுத்த முறை, அவர் பணம் எடுக்க வரும்போது, 'இவரிடம் தான் அதிகமாக பணம் கொடுத்திருக்க வேண்டும்...' என்று நினைத்தார், காசாளர்.
'சென்ற முறை, 100 ரூபாய் அதிகம் கொடுத்தேனே... நீர் யோக்கியர் என்றால், உடனே, என்னிடம் திருப்பி தந்திருக்க வேண்டாமா...' என்று கேட்டார்.
'ஒருமுறை எண்ணிக்கையில் தவறு செய்து விட்டீர்; மன்னித்து விட்டேன். மீண்டும் அதே தவறை செய்தால், மன்னிக்க முடியாது...' என்றார், அந்த நாணயஸ்தர்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.