பாரதி முருகன், மணலுார்பேட்டை: முதல் முத்தம் அம்மாவிடமிருந்து பெற்று இருப்பீர்... இப்போதெல்லாம்?
இன்று வரை, அவரிடமிருந்து தான்!
* ஆர். மேரி, திண்டுக்கல்: கடன் வாங்காமல் இருக்க வழி சொல்லுங்க...
ஊர் முழுக்க கடன் வாங்கி, 'மொட்டை' அடித்து, சந்தனம் பூசிடுங்க... அப்புறம், 1 கி.மீ.,க்கு முன், உங்கள் தலையை கண்டால் கூட ஓடி விடுவர்!
வ. தனசேகர், கோவை: விடுமுறை நாளான, ஞாயிற்றுக் கிழமைகளில் என்ன செய்வீர்கள்?
எல்லா கிழமைகளும் எனக்கு ஒன்று தான். ஏழு நாட்களும், அதே வேலை தான்!
வை. மோகன்ராஜ், முதலிபாளையம், திருப்பூர்: கணவரை இழந்த பெண்ணுக்கு, மீண்டும் மண வாழ்வு தர நினைக்கிறார், என் நண்பர்; மற்ற நண்பர்களும் வரவேற்கின்றனர். தங்கள் கருத்து என்ன?
அத்திருமணத்திற்கு, மூன்று நாட்களுக்கு முன்பே, என்னை அழையுங்கள்... மணமகள் இல்லத்திற்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுக்கிறேன் - நீங்களும் திருமண வேலைகளில் எனக்கு உதவி செய்வீர்கள் தானே!
வி. முத்துராமு, பொன்னமராவதி: 'அந்துமணி தான் பொறுப்பாசிரியர்...' என்கிறாள், என் மனைவி; 'இல்லை, அவர், 'ஆபீஸ் பாய்' தான்...' என்கிறேன், நான்... எது உண்மை?
இருவரும், என் அலுவலகத்திற்கு நேரில் வாருங்கள்... தங்கள் மனைவி, உங்களுக்கு, இரண்டு சவரன் தங்க சங்கிலி பரிசளிப்பார்!
ஜி. குப்புசுவாமி, சங்கராபுரம்: பழைய சாதம் சாப்பிட்ட அனுபவம் பற்றி சொல்லுங்களேன்...
முதல் நாள் மீதமான, மதிய சோற்றில், தேவையான கல் உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து விட வேண்டும். மறுநாள் காலை, சோற்றை பிசைந்து, ஒரு வாய்க்கு, சின்ன வெங்காயம், மறு வாய்க்கு, உப்பு வைத்த பச்சை மிளகாய், பின், முதல் நாள் மிச்சமிருந்த குழம்பு மற்றும் காய்களை கொதிக்க வைத்த சுண்ட குழம்பு சேர்த்து ஒரு வாய்... ருசியோ ருசி!
ஏங்க என் வாயைக் கிளறுறீங்க... கோடை தான் முடியப் போகுதே!
* எஸ்.பி. கண்ணையா, மானாமதுரை: 'அட்வைஸ்' பண்ணுவது - கேட்பது... இதில் எது பிடிக்கும்?
இரண்டாவதே! நமக்கு தான் கொஞ்சம் மூளையை கொடுத்து இருக்கிறானே, 'அவன்!' அதனால், வேலைக்கு ஆகாதவைகளை, இந்த காதில் வாங்கி, அடுத்த காது வழியே துாக்கி போட்டு விடுவேன்!