பணக்கார அப்பா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2019
00:00

பரபரப்பில் இருந்தாள், சுகந்தி.
வாழ்க்கையில் இப்படி ஓர் இக்கட்டு ஏற்பட்டு, குழப்பத்தில் ஆழ்த்தி, நிலை குலைய வைக்கும் என்று, அவள் கனவில் கூட நினைக்கவில்லை.
பல்வேறு சலுகைகளையும், கல்வியறிவையும் அவள் கேட்காமலேயே அப்பா சாந்தலிங்கம் அளித்த போதிலும், 'அந்த விஷயத்தில்' தன் விருப்பத்துக்கு, ஒருபோதும் செவி சாய்க்க மாட்டார் என்பது தெரியும்.
அப்பாவிடம், சுருக்கெழுத்தாளனாய் பணிபுரியும், பிரபுவை, காதலிக்கிறாள், சுகந்தி. இந்த விஷயம் தெரிந்தால், கட்டையை எடுத்து அடிக்க முற்படாவிட்டாலும், அவளின் எண்ணத்தை அப்பா ஏற்க மாட்டார் என்பதில், எள்ளளவும் ஐயம் இல்லை.
அப்போது, சுகந்திக்கு, 10 வயது. 45 வயதில், மனைவியை இழந்தார், சாந்தலிங்கம். வேறு குழந்தைகள் இல்லை. உறவினர்களும், அவரின் நிலையை பயன்படுத்திக் கொள்ள நினைத்த சில நண்பர்களும், மறுமணத்துக்கு வற்புறுத்தினர்.
'என் ஒரே குறிக்கோள், மகள் சுகந்தி, கண் கலங்காமல் வாழ வேண்டும்... மறுமணம், அதற்கு தடையாக இருக்கக் கூடும். எனவே, அந்த பேச்சே இனி வேண்டாம்...' என்று, துளியும் வளைந்து கொடுக்காமல், திட்டவட்டமாக அறிவித்தார்.
'அப்பா... அப்பா...' என்று, அவளும், உயிராகத்தான் இருந்தாள். எனினும், பணக்கார இளைஞன் ஒருவன் தான், மாப்பிள்ளையாக வர வேண்டும் என்று, அப்பா ஆசைப்படுவார் என்பதற்காக, காதலைத் துறக்க, அவள் தயாரில்லை.
'இருவரும் வாழ்வோம். ஒரு நகை கூட, எடுத்து வரக்கூடாது...' என்பது, காதலன் பிரபுவின் கண்டிப்பான நிபந்தனை.
'அப்பா... என்னை மன்னித்து விடுங்கள். இது, என் வாழ்க்கை பிரச்னை...' என, நினைத்து கொண்டாள்.
வீட்டிலிருந்து புறப்படுகையில், இந்த புலம்பல்களை எல்லாம், ஒரு கடிதமாய் எழுதி, அப்பாவுக்கு வைக்கலாம் என்ற எண்ணம் மனதில் எழ, உடனே, அதை கைவிட்டாள். பின், மெதுவாக எழுதி அனுப்புவது தான் சரியாக இருக்கும் என்று தோன்றியது.
அன்று மாலை, அதிசயமாய், சீக்கிரம் வீடு திரும்பினார், சாந்தலிங்கம்.
சுகந்தி, வீட்டில் இல்லை.
படிப்பை முடித்து, வீட்டில் இருந்ததால், ஒருவேளை, தோழி யாரையாவது சந்திக்க போயிருப்பாள் என நினைத்து கொண்டார். வேலையாளை அழைத்து, ''சுகந்தி, வெளியே போயிருக்காளா?'' என்று விசாரித்தார்.
''ஆமாங்கய்யா... அம்மா, வர்றதுக்கு, 'லேட்' ஆகும்ன்னு சொல்லிட்டு போச்சு.''
''எங்க போயிருக்கான்னு தெரியுமா?''
''பிரெண்டு வீட்டுக்குன்னு சொன்னாங்க... 'எந்த பிரெண்டு...'ன்னு கேட்டேன், என்னைய மொறச்சுப் பாத்தாங்க... கையில ஒரு பெரிய பை வெச்சிருந்தாங்க... அது பத்தி வெசாரிச்சதுக்கு, 'யாத்திரை போறேன்...'ன்னு, சொல்லிச் சிரிச்சாங்க... அப்பால, ஏதோ, 'டிராமா'வில நடிக்கப் போற பிரெண்டுக்காக, தன்னோட, 'டிரெஸ்'சுங்களை குடுக்க போறதாச் சொன்னாங்க.''
''எப்ப திரும்புவேன்னு சொன்னாளா?''
''இல்லீங்கய்யா... காரை எடுத்துக்கிட்டு போகலை... 'ஆட்டோ ஸ்டாண்டு'க்கு போறதா சொன்னாங்க.''
''ஏன்னு கேட்டியா?''
''கேட்டேனுங்க... 'காரை எடுத்துக்கிட்டு போனா, டிரைவர் ரொம்ப நேரம் காத்துட்டு இருக்கும்படி இருக்கும்... அந்தாளு, காலா காலத்துல வீட்டுக்கு போக வேணாமா... அவரு, நமக்கென்ன கொத்தடிமையா...'ன்னு, கேட்டாங்க.'' சிரித்தார், சாந்தலிங்கம்.
''சரி... நீ போ!''
''அய்யா... உங்களாண்ட, ஒரு வெசயஞ் சொல்லணும்ங்க,'' என்றான்.
''சொல்லு... தயங்கித் தயங்கி பேசுறதை பாத்தா, விஷயம் பெரிசா இருக்கும் போல தோணுதே,'' என்றார்.
''அய்யாவோட, இஸ்டெனோ, பிரபு தம்பியும், சுகந்தி அம்மாவும், பழகிட்டு இருக்காங்க... அவங்க ரெண்டு பேத்தையும், 'பீச்'சுல வச்சு, நாலைஞ்சு தபா பாத்தேங்கய்யா.''
''எத்தினி நாளா, இது உனக்கு தெரியும்?''
''ஒரு ரெண்டு மாசமாத்தாங்கய்யா.''
''இதை ஏன், ஏங்கிட்ட அப்பவே சொல்லலே?''
தலையைத் தாழ்த்திக் கொண்டான், வேலையாள். குற்ற உணர்வில் அவன் முகம் வெளிறியது.
அன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு விடுப்பு எடுத்திருந்தான், பிரபு. அவன் விடுப்பு எடுத்திருந்ததையும், பெரிய பையுடன், சுகந்தி வெளியே புறப்பட்டு போயிருப்பதையும் முடிச்சுப் போட்டு பார்த்து, நிலைகுலைந்து போனார், சாந்தலிங்கம்.
உடனே, 'இண்டியன் டிடெக்டிவ் ஏஜென்சி' எனும், துப்பறியும் நிறுவன உரிமையாளரை தொடர்பு கொண்டார்.
பங்களாவை வந்தடைந்தார், துப்பறியும் வல்லுனர், துளசிங்கம்.
''சார்... உங்க ஆபீசுக்கு போய், பிரபுவோட, மேஜை இழுப்பறையை குடையணும்... அவனையும் அறியாம, ஏதாச்சும் தகவலை விட்டிருப்பான்... உங்க பொண்ணோட புகைப்படம் ஒண்ணு வேணும்.''
சுகந்தியின் புகைப்படம் ஒன்றை, துளசிங்கத்திடம் கொடுத்தார். பின், இருவரும், அலுவலகத்துக்கு காரில் பறந்தனர்.
பெட்டியிலிருந்து எடுத்த, நுனி வளைந்த ஓர் இரும்புக்கம்பியால், இரண்டே நொடிகளுள், பிரபுவின் மேஜை இழுப்பறையை திறந்தார், துளசிங்கம். அவனுடைய சுருக்கெழுத்து நோட்டு புத்தகத்தை புரட்டினார். அதன் அட்டையில், அவன் கிறுக்கியிருந்த ஒரு தொலைபேசி எண், அவர் கவனத்தை ஈர்த்தது.
சில நிமிடங்களிலேயே, அது, தனியார், 'டிராவல் ஏஜென்சி'யின் எண் என, தெரிந்தது. உடனே, தொடர்பு கொண்டார்.
''நாங்க, போலீஸ் டிபார்ட்மென்ட்லேர்ந்து பேசுறோம்... இன்னைக்கு, உங்க டிராவல் ஏஜென்சியில, பிரபுன்னு யாராச்சும், கார், 'புக்' பண்ணினாங்களா... அப்படியா... எந்த ஊருக்கு, திருச்சிக்கா... டாக்சி டிரைவர்கிட்ட மொபைல் போன் இருக்குல்ல...
''அவர்கிட்ட, எதுவுமே சொல்லாம, இப்ப, எந்த இடத்துல வண்டி ஓடிக்கிட்டு இருக்குன்னு, 'லேண்ட் மார்க்' கேட்டு, உடனே, தகவல் சொல்லுங்க... என்னோட மொபைல் நம்பரை குறிச்சுக்குங்க,'' என்றார், துளசிங்கம்.
மூன்றே நிமிடங்களில், கார் ஓடிக்கொண்டிருந்த இடம் தெரிந்து விட்டது.
தலையில் முண்டாசு கட்டி, கருப்பு கண்ணாடியை மாட்டியபடி, பின் இருக்கையில் அமர்ந்தார், சாந்தலிங்கம். கண்ணாடி ஜன்னல்களை ஏற்றிக் கொண்டனர். அவர்கள் சென்று கொண்டிருந்த காரை எளிதில் கண்டுபிடித்து, மடக்கி விட்டார், துளசிங்கம்.
ஏற்கனவே பேசி வைத்தபடி, துளசிங்கத்தின் காரிலிருந்து இறங்கி, வேறு கார் பிடித்து, வீடு நோக்கி பயணமானார், சாந்தலிங்கம்.
''இத பாரும்மா... துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த நான், உங்கப்பா குடுத்த புகாரின் படி, உங்களை கண்டுபிடிச்சிருக்கேன்... உங்கப்பா, மனசு ஒடிஞ்சு போயிருக்காரு... நீங்க மேஜராய் இருக்கலாம்... இருந்தாலும், எந்த தகராறும் பண்ணாம, ரெண்டு பேரும், என் வண்டியில -ஏறுங்க... இல்லாட்டி, அசிங்கமா போயிடும்,'' என்றார், துளசிங்கம்.
சுகந்தியை காட்டிலும், நா உலர்ந்து, அதிக அச்சத்தில் இருந்தான், பிரபு. வேர்த்துக் கொட்டி, சட்டை நனைந்து, மார்போடு ஒட்டிக் கொண்டது. இருவரும் மறுப்பு சொல்லாமல், துளசிங்கத்தின் காரில் ஏறிக்கொண்டனர்.
சாந்தலிங்கத்தின் பங்களா வாயிலில் நின்றது, கார்.
''போங்க உள்ளே... உங்க ரெண்டு பேரோடவும் பேசுறதுக்கு, காத்துக்கிட்டு இருக்காரு, உங்க அப்பா,'' என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த போது, வெளியே வந்து விட்டார், சாந்தலிங்கம்.
''ரொம்ப நன்றி, துளசிங்கம். நாளை சந்திக்கிறேன்,'' என்று, அவருக்கு விடை கொடுத்த பின், பிரபுவை, ஒரு பார்வை பார்த்தார்.
அவன் முகம், துவண்டது; சுகந்தியின் கண்களில், கண்ணீர் ததும்பியது.
''ரெண்டு பேரும், என் அறைக்கு போங்க!''
கதவை சாத்தினார், சாந்தலிங்கம்.
''உக்காருங்க!''
இருவரும், தலை கவிழ்ந்து நின்றனர்.
''அட... உக்காருங்கன்னு சொல்றேனில்லே!''
இருவரும் உட்கார்ந்த பின், முகத்தை பொத்தி, அழத் துவங்கினார், சாந்தலிங்கம். இப்படி ஒன்றை, சற்றும் எதிர்பார்த்திராத இருவரும், திகைத்து, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
சுகந்தி எழுந்து, சாந்தலிங்கத்தின் அருகே சென்று, ''எங்களை மன்னிச்சிடுங்கப்பா... முழுக்க முழுக்க, தப்பு என் மேலதாம்ப்பா... பிரபு, இதுக்கு லேசிலே ஒத்துக்கலே... நான் தான் அவரை கட்டாயப் படுத்தினேன்,'' என்றாள்.
கண்களை துடைத்துக் கொண்ட சாந்தலிங்கம், ''நான் என்ன தப்பும்மா செஞ்சேன்... பிரபுவை கல்யாணம் பண்ணிக்க, உனக்கு விருப்பம்னா, மனசு விட்டு அதை ஏங்கிட்ட சொல்லி இருந்திருக்கலாமேம்மா... அஞ்சி, நடுங்கும்படியாம்மா உன்னை வளர்த்தேன்...
''இவ்வளவு பெரிய விஷயத்துல, உன்னை கண்கலங்க விடுவேன்னு, உன் அப்பாவை பத்தி தப்பா எடை போடலாமா... எதுக்கு இப்படி செஞ்சே... எதனால உன்னோட எண்ணத்தை எங்கிட்ட சொல்லாம, ஓடிப்போக முடிவு பண்ணினே... சொல்லும்மா,''- என, மீண்டும் கண்ணீர் விட்டார்.
''பிரபு... ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்ன்றதால, எப்பவுமே லட்சம், கோடின்னு தொழில் பண்ற நீங்க, இதுக்கு ஒத்துக்க மாட்டீங்கன்னு தோணினது. அதனால தாம்ப்பா, இப்படி ஒரு முடிவை எடுத்தோம்,'' என்றாள், சுகந்தி.
''எல்லா பணக்கார அப்பனுங்களும், ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் இல்லம்மா... இதயம் உள்ளவங்களும், பணத்தை விடவும், தான் பெத்த குழந்தைகளோட மகிழ்ச்சி தான் பெரிசுன்னு நினைக்கிறவங்களும் இருக்காங்கம்மா... அந்த சிலர்ல, உன் அப்பாவும் ஒருத்தரா இருக்கக் கூடும்கிற நம்பிக்கை, உனக்கு ஏம்மா வரலே?''
''இவ்வளவு நாள், உங்க மகளாய் இருந்தும், உங்க மனசை புரிஞ்சுக்கலே... என்னை மன்னிச்சிடுங்கப்பா,'' என்றாள், சுகந்தி.
''தப்பெல்லாம் என் மேலதாம்மா... எப்ப பாரு, தொழில்ன்னு... நீ சொன்ன மாதிரி லட்சம், கோடின்னு பணத்தை பத்தியே பினாத்தல்ல இருக்கிற என்னை பத்தி, நீ வேற எப்படிம்மா கணிக்க முடியும்... பெத்த தாயும் சரி, தகப்பனும் சரி, குழந்தைங்களோட நிறையவே பேசணும்மா...
''தங்களோட கருத்துகளை எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லணும்மா... குழந்தைகளும் சரி, பெத்தவங்களும் சரி, ஒருத்தருக்கொருத்தர் மனசு விட்டு பேசிக்கிட்டா, இது மாதிரி தவறான கணிப்புக்கு இடமே இருக்காது. தப்பான முடிவுக்கு வரவும் மாட்டாங்க!''
''ஆமாம்ப்பா... நீங்க சொல்றது, நுாத்துக்கு நுாறு சரி... உங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டதால தான், இப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டேன்... மன்னிச்சுக்குங்கப்பா.''-
''சரி... உன் விருப்பப்படியே, ஒரு நல்ல நாள்லே நாலு பேர் அறிய, பத்திரிகை அடிச்சு, பெரிய கல்யாண மண்டபத்துல, பிரபுவை கல்யாணம் பண்ணிக்க... என் ஆசியோட, உங்க கல்யாணம், 'ஜாம் ஜாம்'ன்னு நடக்கும்... பிரபு, கண்ணைத் துடைச்சுக்க,'' என்றார்.
இருவரும் திகைத்தனர்.
கதவைத் திறந்து, வேலையாளிடம் மூன்று கோப்பைகளில் எலுமிச்சை சாறு எடுத்து வர பணித்தார், சாந்தலிங்கம்.
நடந்ததை ஓரளவுக்கு ஊகித்து, துள்ளலுடன் சமையல்கட்டுக்கு ஓடினான், வேலையாள்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், தான் விரும்பிய பெண்ணின் தந்தை, ஏழை என்பதற்காக, தன்னை நிராகரித்ததோடு, அடித்துப் போடவும் சதி செய்தார். ஆனால், அது பற்றி, தன் தோழியிடம் சொல்லி அனுப்பினாள், காதலி.
இதனால், தான் ஊரை விட்டே ஓட நேர்ந்ததையும், ஒரு வீம்போடு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு, பொருளீட்டி, பணக்காரன் ஆனதையும் அசை போட்டார், சாந்தலிங்கம்.
'நான் ஆட்பட்ட காதல் தோல்விக்கு, என் மகள் ஆளாகப் போவதில்லை...' என்று, மகிழ்ச்சி அடைந்தார்.

ஜோதிர்லதா கிரிஜா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-செப்-201914:02:57 IST Report Abuse
Kalyanaraman அதென்ன பணக்கார அப்பா தன் மகள் ஏழையை காதலித்தால் ஒப்புக்கொள்வதில்லை. அப்படி ஒப்புக்கொண்டால் அவருக்கும் இதே அனுபவம் உண்டு என்றே கதை சொல்கிறார்கள். இதே பணக்கார வாலிபன் ஏழைப்பெண் என்றால் உடனே தந்தை சாப்பிட்டு முடிச்சுட்டா கைகழுவிடணும்னு டயலாக் பேசுவார் அல்லது அந்த பெண்ணை கொல்ல முயற்சிப்பார். கொடுமைடா சாமி.
Rate this:
Cancel
Saravanan Raman - Neyveli ,இந்தியா
08-செப்-201912:24:25 IST Report Abuse
Saravanan Raman 'பணக்கார அப்பா' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள, சுவாரஸ்யமற்ற இச்சிறுகதையை, என் மதிப்பிற்குரிய மேடம், திருமதி ஜோதிர்லதா கிரிஜா அவர்களா எழுதினார்? சாரி, நம்ப முடியவில்லை என்றென்றும் அன்புடன், இராதா ராமன், நெய்வேலி
Rate this:
Cancel
Diya -  ( Posted via: Dinamalar Android App )
08-செப்-201912:00:50 IST Report Abuse
Diya Such a rare case. Very rare to hear such stories in real time. Otherwise, only the parents who failed to marry the loved one or those who were alienated by the parents after their love marriage accept the love marriage of their children easily. Our people are afraid of the society and not ready to relax the control over the children. But one thing for sure, love marriage happens mostly in the family where the parents see it as a bad thing whenever it happens in relatives family.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X