அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 30 வயது பெண். கல்லுாரியில் படிக்கும்போது, உடன் படித்த ஒருவரை காதலித்தேன். எவ்வளவோ போராடியும், ஜாதியை காரணம் காட்டி, இரு வீட்டினரும் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. இருவரும் பிரிந்து விட முடிவு செய்தோம்.
'இங்கே இருந்தால், உன் நினைவு என்னை பாடாய் படுத்தும். அதனால், வெளிநாடு செல்கிறேன்...' என்று, கூறி சென்று விட்டார், காதலர்.
என்னை வற்புறுத்தி, தாங்கள் பார்த்த மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தனர்.
பழைய காதல் எண்ணங்களை மனதிலிருந்து கஷ்டப்பட்டு துாக்கி எறிந்து, அந்த மாப்பிள்ளையை மனதார ஏற்றேன். சிறிது காலம், குடும்பம் அமைதியாக சென்றது. இந்நிலையில், பழைய காதல் விஷயத்தை, யாரோ, என் கணவர் காதில் போட்டுவிட, வாழ்வு நரகமானது.
'யார் அவன்... இன்னும் அவனோடு தொடர்பு வைத்திருக்கிறாயா... காதலர்களாக இருந்தபோது, எங்கெங்கு சுற்றினீர்கள்...' என்று, தினமும் கேட்டு, இம்சை செய்வார். இந்த பிரச்னையால் மது பழக்கத்திற்கும் அடிமையானார்.
இதற்கிடையில், எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. 'இது, எனக்கு பிறந்த குழந்தை இல்லை...' என்று கூறி, ஒருமுறை கூட அக்குழந்தையின் முகத்தை பார்க்க வரவில்லை.
பிரசவத்துக்காக, அம்மா வீட்டுக்கு வந்த நான், அங்கேயே நிரந்தரமாக தங்கும்படி ஆகிவிட்டது.
குழந்தைக்கு, இரண்டு வயதான போது, குடித்து, வண்டி ஓட்டியதில், விபத்தில் சிக்கி உயிரிழந்தார், கணவர்.
மாமியார் வீட்டில், 'உன்னால தான், என் புள்ளை வாழ்க்கையே போச்சு...' என்று கூறி, என்னையும், குழந்தையையும் ஒதுக்கினர்.
பெற்றோரின் ஆதரவில், நானும், குழந்தையும் இருக்கிறோம். தற்சமயம், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறேன். அஞ்சல் வழியில், மேற்படிப்பு படிப்பதோடு, போட்டி தேர்வுகளுக்கும் தயாராகி வருகிறேன்.
இந்நிலையில், நான் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு, பணி நிமித்தமாக, வெளிநாட்டிலிருந்து ஒரு குழு வந்திருந்தது. அவர்களில், என் முன்னாள் காதலரும் ஒருவர்.
எதிர்பாரா இந்த சந்திப்பு, இருவருக்குமே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்தது.
'நான், இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன்; இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை...' என்று கூறி, என்னைப் பற்றி விசாரித்தார்.
நடந்த அனைத்தையும் சொன்னேன்.
'இனி, நாம் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டாம். இருவரும் திருமணம் செய்து, புது வாழ்க்கை துவங்கலாம். ஊருக்கும், உறவுக்கும் பயந்து, இரண்டாவது முறையும் நாம் தோற்க வேண்டாம்...' என்றார்.
என் காதலரை திருமணம் செய்து கொள்வதா அல்லது குழந்தையுடன் தனியாக இருந்து விடுவதா... பின்னாளில், இவரும் என்னை குத்திக்காட்டி பேச மாட்டார் என்று நம்பலாமா... குழப்பமாக இருக்கிறது. நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
பருவ வயது, ஆண் - பெண்களின் மனதில் காதல் பொங்கி வழியும். 16 வயதிலிருந்து, 21 வயதுக்குள் ஒவ்வொரு ஆண் - பெண்ணுக்குள்ளும் குறைந்தபட்சம், 10 காதல்களாவது பூத்து உதிர்ந்து விடுகின்றன. சிலர், தங்களின் காதலை ரகசியமாக பாதுகாக்கின்றனர்; சிலரோ, சமூகத்தினர் கண்களுக்கு கண்காட்சி ஆக்கி விடுகின்றனர்.
மனைவியின் காதலை கைதட்டி வரவேற்கும் கணவர், இவ்வுலகில் பிறக்க போவதே இல்லை. உன் கணவரின் துர் நடத்தை, உலக ஆண்களின் குணம்.
இரண்டு வயது மகளுடன் விதவையாய் நிற்கும் உன்னை ஏற்க, முன்னாள் காதலன் முன் வந்துள்ளான்.
* ஜாதியை காரணம் காட்டி தான், உன் காதலை மறுத்தனர், பெற்றோர். இப்போது, அதே காதலனை மறுமணம் செய்து கொள்ள சம்மதிப்பரா... இருக்கும் ஒரே ஆதரவை ஒதுக்கி தள்ளி, இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு, உன் காதலன் உத்திரவாதம் உள்ளவனா... நன்கு யோசி
* பொதுவாக, ஆண் குழந்தைகள் உள்ள, குழந்தைகளே இல்லாத மற்றும் குழந்தையை பெற்றோரின் பராமரிப்பில் விட்டு வருகிற காதலிகளை தான், ஆண்கள் மறுமணம் செய்து கொள்வர். மனைவியின் முதல் திருமண பெண் குழந்தைகளை வளர்த்து, படிக்க வைத்து, பெரும் செலவுடன் திருமணம் செய்து வைக்கும் தியாக குணம், பெரும்பாலான ஆண்களிடம் இல்லை. இதில், உன் காதலன் எப்படிபட்டவன்
* காதலித்தவள், கணவனை இழந்து நிற்கிறாள். அவளை மணம் செய்து, ஒருமுறை தாம்பத்யம் அனுபவித்து விடவேண்டும். அதன்பின், என்ன ஆனாலும் சரி- என்ற மனோபாவத்தை, உன் காதலன் கொண்டிருக்கிறானா என்பதை ஆராய்ந்து அறி
* தனக்கு திருமணமாகி, மனைவியும், குழந்தையும் வெளிநாட்டில் இருப்பதை, உன் காதலன் மறைக்கிறானா என்பதை பரிசோதி
* கல்லுாரி நேர காதலின் போது, உன் காதலன், உடல் ரீதியாக காதலித்தானா, உள ரீதியாக காதலித்தானா... எதிலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என, முடிவெடுத்தானா... அவனை எவ்வளவு துாரம் நம்பலாம் என்பதை, தீர யோசித்து முடிவெடு
* முன்னாள் காதலனிடம், 'நான், உன் பழைய காதலி அல்ல... ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு, அவருடன் மூன்று ஆண்டு தாம்பத்யம் பண்ணி, ஒரு குழந்தையும் பெற்றிருக்கிறேன். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சில வடுக்கள் என்னிடம் உண்டு.
'உணர்ச்சிப் பூர்வமாக முடிவெடுத்து, பின், நாம் தோற்றுவிட்டால் தலைகீழாய் கவிழ்ந்து கிடப்போம். என்னை மணம் செய்து கொள்ள, உன் பெற்றோர் சம்மதிப்பரா... ஆறு மாதம், நம் திருமணம் வெற்றி பெறும் அல்லது தோல்வியுறும் காரணிகளை அலசி, ஒரு நல்ல முடிவெடுப்போம்...'- எனக் கூறு
* இடைப்பட்ட காலத்தில், உன் பெண் குழந்தையிடம், முன்னாள் காதலனை அன்பு பாராட்டச் சொல். இருவருக்கும் இடையில், தந்தை - மகள் பாசம் பூக்கட்டும்
* என்னதான் அலசி ஆராய்ந்து முடிவெடுத்தாலும், உன் மறுமணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதை, இறைவனே முழுமையாக அறிவான். 'யாரையோ ஒருவனை மறுமணம் செய்வதற்கு பதில், முன்னாள் காதலனையே செய்கிறோம். வரும் வாய்ப்பை மறுக்காமல், 'ரிஸ்க்' எடுப்போம். மறுமணத்திற்கு பின், ஒரு மனைவியாக, சிறப்பாக நடந்து, அதன் கண்ணியத்தை காப்பேன்...' என, கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக்கொள்.
நல்லதே நடக்கும் என நம்பி, புதிய வாழ்க்கைக்குள் அடி எடுத்து வை, மகிழம்பூவே!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.