பெரிய கோவில்களை கட்டும்போது, அதில் விழும் மழை நீரை, தெப்ப குளங்களில் சேரும் விதமாக அமைத்தனர்.
இதுபோக, குடிநீருக்கென்று குளங்கள், மற்ற நீர் தேவைகளுக்கு, தனி குளங்கள் என்று, ஊருக்குள்ளும் நிறைய நீர் சேமிப்பு மையங்களை அமைத்தனர். இதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக் கொண்டனர்.
கோடையில், சில சமயம் குளங்கள் வற்றிப் போகும். ஆண்டு முழுவதும் நிலத்தடி நீர் சேமிக்கப்படுவதால், சில நாட்களுக்கு மட்டும், கிணற்று நீரை பயன்படுத்திக் கொள்வர்.
இந்த குளங்களை எல்லாம் பராமரிக்கும் பொறுப்பு, மக்களிடமே விடப்பட்டது. இதற்கு, 'குடி மராமத்து' என, பெயர். அதாவது, குடிமக்கள் தாங்களாகவே குளங்களை பாதுகாத்து, பராமரித்துக் கொள்ளும் முறை.
வாரத்தில் ஒருநாள், வீட்டுக்கு ஒருவர் என்ற கணக்கில், ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, குளங்களை சுத்தப்படுத்துவர். இதனால், குளங்கள் துாய்மையாகவும், உயிர்ப்போடும் இருந்தன.
இப்படி ஊர் மக்களையும், உணவளிக்கும் விவசாயத்தையும், நீர் மேலாண்மையால் கட்டிப்போட்டனர், தமிழர்கள்.
மனிதன் உருவாக்கிய நீர் நிலை கட்டுமானங்களுக்கு, இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை...
வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம் மற்றும் கண்மாய் என்று ஏகப்பட்ட பெயர்கள் உள்ளன. இத்தனை பெயர்களையும், அதன் பயன்பாட்டை பொறுத்து, அந்தந்த நீர்நிலைக்கு வைத்திருந்தனர்.
இயற்கையான நீர் ஊற்றுகள் உள்ள இடங்களில் அமைந்த நீர் நிலைகளுக்கு, 'பொய்கை ஊற்று' என்று பெயர். தானாகவே நீர் கசிந்து சிறிய அளவில் தோன்றும் நீர் நிலைகளுக்கு, 'சுனை, கயம்' என்று பெயர்.
ஊற்றுகள் எதுவும் இல்லாமல், மழை நீர் மட்டும் தேங்கியிருக்கும் சிறிய நீர் தேக்கத்திற்கு, 'குட்டை' என்று பெயர். இன்றைக்கு இந்த சொல், சாக்கடை நீர் தேங்கும் இடத்தை குறிப்பதாக மாறி விட்டது.
மக்கள், குளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நீர் நிலைகளுக்கு, 'குளம்' என்று பெயர். அழுக்கு போக குளிப்பது இன்றைய வழக்கம். ஆனால், அன்றைய குளித்தலின் அர்த்தம் வேறு.
பகல் முழுதும் வயல்களில் வேலை செய்து, வெப்பமான உடலை குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நடைமுறையே குளிர்த்தல். இதுவே காலப்போக்கில், 'குளி(ர்)த்தல்' என்று மாறியது. குளங்கள், மனிதர்களின் உடலை குளிர்வித்தன.
குடிப்பதற்கும், சமைப்பதற்கும், உணவு தேவைகளுக்கும் பயன்படும் நீர்நிலைகளை, 'ஊருணி' என்று அழைத்தனர். இத்தகைய நீர் நிலைகளை அமைப்பதற்கு, நிலத்தின் தன்மையை ஆராய்வர். நிலத்தின் உவர்ப்பு தன்மை, நீரில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், கவனமாக இருந்தனர்.
நிலத்தால் மாறுபடும் நீரின் சுவையை இனிமையாக்க, ஊரணி கரைகளில், நெல்லி மரங்களை நட்டு வைத்தனர். அது, நீரின் சுவையை கூட்டும்; அதே வேளையில், கிருமிகளை கொல்லும் மருந்தாகவும் பயன்பட்டன. ஊரணி அமைப்பதற்கும் நிறைய வரைமுறைகள் உண்டு.
ஏர் உழுதல் தொழிலுக்கு நீர் தருபவைகளை, 'ஏரி' என்று பெயர் வைத்தனர். வெறும் மழை நீரை மட்டுமே ஏந்தி, தன்னுள் சேர்த்து வைத்துக்கொள்ளும் நீர் நிலைகளுக்கு, 'ஏந்தல்' என்று பெயர். இதில், நதி நீர் சேர்வதில்லை.
நதியின் நீரை, கால்வாய் மூலம் கொண்டு வந்து சேர்த்து, அதன் மூலம் உருவாக்கப்பட்ட நீர் நிலைகளுக்கு, 'கண்மாய்' என்று பெயர். இந்த பெயர்களை வைத்தே, அந்தந்த நீர் நிலைகளின் தன்மையை அறிந்து கொள்ள முடியும்.
அன்றே, மழை எப்படி உருவாகிறது, எப்படி பொழிகிறது என்ற ஞானத்தை பெற்றிருந்தனர், நம் முன்னோர்.
வடகிழக்கு பருவ மழையை பற்றியும் கணித்து வைத்திருந்தனர், தமிழர்கள். தமிழகத்திற்கு பெரு மழையை கொண்டு வந்து சேர்ப்பது, இது தான். இது, ஒரு கொடூரமான பருவ மழை; இதன் போக்கை அவ்வளவு சுலபமாக புரிந்துகொள்ள முடியாது.
நினைத்தால், மேகமே வெடித்தது போல் கொட்டி தீர்த்து, ஊரெல்லாம் வெள்ளக்காடாக மாற்றி விடும்; இல்லையென்றால், ஒரு சொட்டு நீர் கூட விழாமல் பெரும் வறட்சியை தந்துவிடும்.
அப்படிப்பட்ட இந்த காட்டுத்தனமான பருவ மழையை, தங்களின் நீர் மேலாண்மையால் கட்டிப்போட்டு வைத்தனர். அதற்காக அவர்கள் உருவாக்கியது தான், சங்கிலி தொடர் ஏரிகள்.
மூன்று மாதங்கள் பெய்யும் மழையை தேக்கி வைத்து, ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யும் தொழில்நுட்பம் தான், சங்கிலி தொடர் ஏரிகள்.
முதல் ஏரியில், பாதியளவு மட்டும் தண்ணீர் நிறைப்பர். அதன்பின், அந்த நீர் அடுத்த ஏரிக்கு போகும்; அந்த ஏரியும் பாதியளவு நிறைந்ததும், அதற்கடுத்த ஏரிக்கு தண்ணீர் போகும். இப்படியே கடைசி ஏரி வரை எல்லா ஏரிகளும் பாதியளவு மட்டுமே நீரை நிரப்புவர். அங்கு தான், நம் நீர் பங்கீட்டு முறையின் உன்னதம் இருக்கிறது.
முதல் ஏரி முழுதாக நிறைந்தால் தான், அடுத்த ஏரிக்கு தண்ணீர் என்றால், கடைசியில் இருக்கும் ஏரிகள் எல்லாம் நிறைவதற்கே வழியில்லாமல் போய்விடும். இதனால், முதல் ஏரி பாசனம் பெரும் விவசாயிகள் உயர்ந்தவர்களாகவும், கடைசி ஏரி பாசன விவசாயிகள் கையேந்துபவர்களாகவும் மாறி விடுவர். விவசாயிகளிடம் இந்த ஏற்றத்தாழ்வு வந்துவிடக் கூடாது என்பதில், கவனமாக இருந்தனர்.
மழை எப்படி பொழிகிறது என்று உலகம் அறியாத காலத்திலேயே, அதை பற்றி பாடல்களை எழுதியிருக்கின்றனர், தமிழர்கள். மாவீரர் அலெக்சாண்டரின் ஆசிரியர், அரிஸ்டாட்டில், கி.மு., 4ம் நுாற்றாண்டில், 'குளிர்ச்சியான காலத்தில் காற்று உறைந்து மழை பொழிகிறது...' என்று, மழைக்கு விளக்கம் கொடுத்தார்.
மற்றொரு கிரேக்க அறிஞரான, தேல்ஸ், 'கடலின் அடி தளத்தில் நீர் உற்பத்தியாகிறது. அந்த நீர் மண்ணால் உறிஞ்சப்பட்டு, மலை உச்சிக்கு சென்று அங்கிருந்து ஆறாக வெளிப்படுகிறது...' என்றார். எப்படிப்பட்ட அறிஞர்கள், எவ்வளவு அறியாமையில் இருந்திருக்கின்றனர்.
ஆனால், அதே காலகட்டத்தில் வாழ்ந்த புலவர், கடியலுார், உருத்திரங்கண்ணனார், தன் பட்டினப்பாலை, 126 - 131 பாடலில்:
'வான் முகந்த நீர் மழை பொழியவும்
மழை பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல்
நீரின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர் பரப்பவும்
அளந்து அறியா பல பண்டம்'
என்று, பூம்புகார் துறைமுகத்தின் பெருமையை பாடியுள்ளார்.
— தொடரும்.
தொகுப்பு : சி.பி. செந்தில்குமார்.