எதையாவது செய்து, எப்படியாவது தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்; பலர் நம்மைப் பாராட்ட வேண்டும் என்ற மனோபாவம், பலரையும் ஆட்டிப்படைக்கிறது. விளைவு...
இந்த புராணக் கதையை படியுங்கள்:
சதானீகன் எனும் மன்னர், நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். ஏழை எளியவருக்கும், வேத வல்லுனர்களுக்கும், வாரிவாரி வழங்குவதில், தனி ஆர்வம் கொண்டவர். அம்மன்னரை தெய்வப்பிறவி என்றே போற்றினர், புலவர்கள்.
புகழ்ச்சியில் மயங்கிய மன்னர், நாட்டின் நிதி நிலைமையையோ, வரி வசூலிக்கப்படும் முறையையோ, கவனிக்கவே இல்லை.
மன்னர், சதானீகன் இறந்ததும், அவர் மகன், சகஸ்ரானீகன் ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சிக்கு வந்ததும், தானமாக வாரி வழங்குவதை நிறுத்தி விட்டார். ஊனமுற்றோர், முதியோர், அனாதைகள் ஆகியோருக்கு மட்டும் பொருள் வழங்கினார்.
கல்வி பயிற்சி, நீதி பரிபாலனம், பொது நல நோக்கு என இருந்த, சகஸ்ரானீகனுக்கு, பொதுமக்கள் மத்தியில் பெரும் புகழ் பரவியது. இருந்தாலும், தானம் வாங்கியே வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள், மனம் வருந்தினர்.
'உங்கள் தந்தை செய்து வந்த தானங்களை நிறுத்தி விட்டீர்களே... இது, பாவம் என்று தெரியாதா... நாடு முழுவதும், அவர் புகழ் பரவியிருக்கிறது. நாங்களும், இன்று வரை, உங்கள் தந்தையை புகழ்ந்து வருகிறோம்...' என்றெல்லாம் மன்னரிடம் சொல்லி, தானம் பெற முயன்றனர்.
'உங்கள் சொற்படியே, தானம் செய்த தந்தைக்கு, எவ்வளவு புண்ணியம் கிடைத்திருக்கும் என்பதை ஆராய்ந்து சொல்லுங்கள்...' என்று கூறி, தானம் தர மறுத்தார், சகஸ்ரானீகன்.
தானம் பெற முயன்றவர்களோ, 'உங்கள் தந்தை செய்த தானத்தின் காரணமாக, சொர்க்கத்தில் சுக வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பார். இதில் ஆராய என்ன இருக்கிறது...' என்றனர்.
'எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நீங்கள் போய், தேவதைகளை பூஜித்து, என் தந்தையின், மேல் உலக வாழ்வை பற்றி தெரிந்து வாருங்கள்... பிறகு, உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன்...' என்றார், சகஸ்ரானீகன்.
அவர்களில் சிலர், தாங்கள் அறிந்த வேதங்கள் மூலம், அக்கினி பகவானை நினைத்து, 48 நாட்கள் யாகம் செய்தனர்.
யாகம் நிறைவு பெறும் நேரம், 'நீங்கள் எல்லாரும், இன்று இரவு, யாக மண்டபத்திலேயே படுத்து உறங்குங்கள். உங்கள் எண்ணம் ஈடேறும்...' என, அசரீரி கூறியது.
அப்படியே செய்தனர்.
நள்ளிரவு தாண்டியதும், உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு, கனவு வந்தது. அவர்கள் அனைவரையும் தங்க தேரில் ஏற்றிய தெய்வ புருஷன் ஒருவன், 'சற்று துாரம் சென்று பாருங்கள்...' என்றார்.
அங்கு போய் பார்த்த போது, நரகலோகத்தில், கடுமையாகத் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருந்தார், மன்னர் சதானீகன்.
உடலெங்கும் ரத்த காயங்களும், தீப்புண்களும் நிறைந்து கோரமாகக் காட்சியளித்த சதானீகன், தேரில் வந்தவர்களை கண்டதும், ஓடி வந்தார்.
'புண்ணியம் அதிகமாக கிடைக்கும் என்ற எண்ணத்தில், பெருமைக்காக வாரி வாரி கொடுத்தேன். அதை ஈடுகட்ட, ஏராளமான வரி விதித்து, மக்களை துன்புறுத்தினேன். இரக்கமில்லாமல், பேருக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டதன் விளைவு தான் இது. இதை, என் மகனிடம் சொல்லுங்கள்...' என்றார் மறைந்தபடியே.
கனவு கலைந்தது. உறங்கியவர்கள் விழித்தனர்.
சதானீகன் சொன்ன உண்மையை உணர்ந்து, அப்படியே போய் இளவரசரிடம் சொல்லி, அவரை வாழ்த்தினர்.
பேருக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு, தானம் செய்வதை விட, அன்போடும், இரக்கத்தோடும் தானம் செய்வதே உயர்ந்தது என்பதை விளக்கும், கதையிது.
பி.என். பரசுராமன்