அய்யம் விட்டு வாழ்!
மூளை வளர்ச்சியின்
முட்டுக்கட்டை
சந்தேகம்!
அது -
சாத்தான் வழங்கும்
வரம்!
மனதை அரிக்கும்
மாயக் கரையான்!
நித்திரை கெடுக்கும்
நித்திய சாபம்!
தலைமுறைக்கும் பாவங்களை
தருவிக்கும் தவறு!
அப்பிய நேரத்தில்
சிகப்பைச் சேர்த்து
கால மாற்றத்தில்
கறுத்து விடும் மருதாணி!
பற்ற வைத்தவன்
பதுங்கிக் கொள்ள
எரிக்க இடமளித்தவனை
தகிக்கும் மயானம்!
ஒளியில்லா இதயங்களில்
இதன் கரு ஊடுருவி
ஒளிமிக்க வாழ்வை
ஒழித்துக் கட்டிவிடும்!
தன்னை நம்பாதவர்களையே
சந்தேகம்
தான் வளர
பெரிதும் நம்புகிறது!
வாழ்க்கை
இறைவன் வழங்கிய கொடை
அதை -
அற்ப சந்தேகங்களுக்கு
ஆகுதியாக்குபவர்கள்
சந்தோஷத்தை சந்திக்காமலேயே
சமாதியாகி விடுகின்றனர்!
விட்டு வாழ வேண்டியது
ஆசையை மட்டுமல்ல
'அய்யத்தை'யும் தான்!
வளர்கவி, கோவை