வழிகாட்டி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2019
00:00

''விஷயம் தெரியுமா?'' என்று, பரபரப்பாக வந்த சேகர் முகத்தில் அதிர்ச்சியும், வருத்தமும் தெரிந்தது.
படித்துக் கொண்டிருந்த பேப்பரை மடித்து, ''என்ன?'' என்றார், சம்பத்.
''வேலன், இப்ப மருத்துவமனையில...'' மேற்கொண்டு பேச முடியாமல் மூச்சிறைத்தது.
''யார் சொன்னது... என்ன பிரச்னை அவருக்கு?'' நெற்றி சுருக்கினார், சம்பத்.
''அடையாளம் தெரியாத வாகனம் அடிச்சுட்டு போயிருச்சாம்... பார்த்தவங்க சொன்னத கேட்டதும், இதயமே வெடிச்சிரும் போல் ஆயிடுச்சு,'' என்று, பெருமூச்சு விட்டார், சேகர்.
''கடவுளே... ரொம்ப நல்ல மனுஷன், பரோபகாரி, சிரிச்ச முகம். எதிரிக்கு ஒரு ஆபத்துன்னா ஓடிப்போய் உதவுவார்... அவருக்கா இப்படி, நல்லதுக்கு காலமில்லை... கடவுளுக்கு கண் இல்லைன்னு சொல்வாங்களே அது, இதுதான் போலிருக்கு,'' என்று அரற்றினார், சம்பத்.
''மத்தவங்களுக்கு உதவி செய்தே ஏழையானவர். இப்போ, வைத்தியத்திற்கு என்ன செய்யப் போறாரோ, யார் உதவப் போறாங்களோ... நிறைய, 'ஆபரேஷன்' செய்ய வேண்டி இருக்குமாம்... அத்தனை வலுவானவரும் இல்லை, உடம்பு தாங்கணும்...
''மனைவி, குழந்தைகளை நினைச்சா வருத்தமா இருக்கு... கூடவே, வயசான அப்பா - அம்மா. இவரின் சம்பாத்தியத்துல தான், குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போ, இவருக்கே நிறைய பணம் வேண்டியிருக்கும் நிலையில், எங்கிருந்து குடும்பத்தை கவனிக்க முடியும்...
''ச்சே, அவருக்கு இந்த நிலை வந்திருக்கக் கூடாது. நாட்டில் எத்தனையோ அயோக்கியர்கள், மோசடி பேர்வழிகள் இருக்காங்க... அடுத்தவன் சொத்தை அசராமல் அடிச்சு முழுங்கறவங்க, லஞ்சம் வாங்கி, வயிறு வளர்க்கறவங்க, ஊழல் பண்ணி, ஊரை அழிக்கறவங்கன்னு... அவங்களுக்கு வரக்கூடாதா இந்த விபத்து...
''அந்த வாகன ஓட்டி மட்டும் என் கண்ணில் சிக்கினால், அடிச்சே கொன்னுடுவேன்... மோதிட்டு போக, இவர் தான் கிடைச்சாரான்னு முகரையை உடைச்சிருப்பேன்,'' என்று உணர்ச்சி வசப்பட்டார், சேகர்.
''அவரை பற்றி தான் யோசிச்சுகிட்டு இருந்தேன்... 10 நாள் முன்பு கூட, கடைத்தெருவில், 'பிளஸ் 2ல, 90 சதவீதம் மார்க் வாங்கியிருக்கான்... என்ன கோர்ஸ் எடுத்தால் சரிப்படும்...' என்று, பையனோட மேல் படிப்பு பத்தி பேசினார்.
''பையனை கேளுங்க... எதுல அதிக மார்க் வாங்கியிருக்கான், அவனுக்கு எதுல விருப்பம்ன்னு பார்த்து, அதுக்கு ஏத்த மாதிரி படிக்க வைங்கன்னு சொன்னேன். அவர் கனவெல்லாம், ஒரு விபத்தா போயிடுச்சே,'' என்றார், சம்பத்.
இரு நாட்களுக்கு பின், ''என்ன... வீட்டில் ஏதோ வேலை நடக்கறாப்ல இருக்கு?'' என்றபடி, திண்ணையில் அமர்ந்தார், சேகர்.
''சாக்கடை அடைப்பு, தண்ணி போகலை... தேடித் தேடி, இன்னைக்கு தான் ஒரு ஆள் கிடைச்சான்... அரை மணி நேர வேலை தான்... 500 ரூபாய் கேட்கறான்,'' என்றார், சம்பத்.
''மருத்துவமனைக்கு போய், வேலனை பார்த்தீங்களா?'' என்றார், சேகர்.
''ஆரோக்கியமா, சிரிச்ச முகமா பார்த்தே பழக்கப் பட்டுட்டேன்... அவரை நினைக்கும் போது, கபடமில்லாத புன்னகை தான் நினைவுக்கு வருது. அப்படி பழகிட்டு, மருத்துவமனையில, வாடி, வதங்கி படுத்திருக்கிற கோலத்தை எப்படி கண் கொண்டு பார்க்க முடியும்; அந்த தைரியம் எனக்கில்லை...
''நான் போகலை... ஆனால், அவர் நிலையை எண்ணி வருந்தாமல் இருக்க முடியலை... கேள்விப்பட்டதில் இருந்து துாக்கமே இல்லை... சரியா சாப்பிடக் கூட முடியலைன்னா பார்த்துக்குங்க,'' என்றார், சம்பத்.
''விதின்னு கூட சொல்லலாம்... எந்த ஜென்மத்தில், என்ன பாவம் செய்தாரோ... இவர் செய்யலைன்னாலும் முன்னோர் செய்த வினையாக கூட இருக்கும்... கொடுமையான வலியா இருக்குமாமே,'' துடித்தார், சேகர்.
''அதுக்கெல்லாம், ஊசி, மருந்து போட்டு, 'சர்ஜரி' பண்ணி சரி செய்வாங்க... ஆனால், செலவுக்கு என்ன செய்வார்... அவர் குடும்பத்தை நினைக்கும்போது தான், பாவம், மனசு தாங்க முடியலை... நாம ஏதாவது செய்யணும்,'' என்றார், சம்பத்.
''எனக்கும் அந்த நினைப்பு தான். ஆனால், உதவ நினைச்சாலும் பணத்துக்கு எங்க போறது... அதிகபட்சம், 1,000 - 500 ரூபாய் சாத்தியம்... அது எந்த அளவுக்கு போதும்... ஒரு, 5,000 - 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தானே சரியா இருக்கும்... அதான் யோசிக்கறேன்,'' என்றார், சேகர்.
''மனு போட்டால், உதவி கிடைக்கும்; சாப்பாடு, தங்கும் வசதியெல்லாம் கொடுத்து, மருத்துவ உதவி செய்ய நிறைய, 'டிரஸ்டு'கள் இருக்குன்னு கேள்விபட்டிருக்கேன்... அதைப்பத்தி விசாரிச்சு சொல்லணும்,'' என்றார், சம்பத்
சாக்கடை அடைப்பை சரி செய்து, முகம், கை, கால் கழுவி, மண் வெட்டியை சுத்தப்படுத்தினான், மாரிமுத்து; கழற்றி வைத்திருந்த சட்டையை எடுத்து போட்டு, காசுக்கு வந்து நின்றான்.
அவன் வந்தது கூட தெரியாமல் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில், அவனை கவனித்த சம்பத், ''எல்லாம் சரி பண்ணிட்டியா?'' என்றார்.
மண்வெட்டியை தோளில் மாட்டியபடி, ''நீங்க நல்லா பாத்துக்கோங்க,'' என்றான்.
மனைவியை அழைத்து, ''என்ன... எல்லாம் சரியா செய்திருக்கானா?'' என்று கேட்டார், சம்பத்.
''இப்ப, தண்ணி நல்லா போவுது,'' என்றார், அவரது மனைவி.
''ஒரு மணி நேர வேலைக்கு, 500 அதிகம்... 300 ரூபாய் தர்றேன்,'' என்றார், சம்பத்.
''இதற்கு குறைவா, இந்த வேலைக்கு யாரும் வரமாட்டாங்க... முதுகு உடைஞ்சு போச்சு... அவ்வளவு குப்பையையும் ஒருத்தனா இருந்து அள்ளியிருக்கேன்... அதிகமா கொடுக்கலைன்னாலும் பரவாயில்லை... குறைச்சுடாதீங்க,'' என்று, வாதிட்டான், மாரிமுத்து.
''என்ன... இவனோடெல்லாம் மல்லுகட்டிகிட்டு, கேட்டதை கொடுத்து தொலைங்க... அதிகமா கொடுத்தா மட்டும் என்ன... சேர்த்து வச்சு மாடி வீடு கட்டிக்கிட்டா வாழப் போறான்... மதுக்கடையில அதிகமா இன்னுமொரு, 'ரவுண்டு' அடிச்சுட்டு போகப் போறான்,'' சலிப்புடன் சொன்னார், சேகர்.
''வரும்போதே, அப்படி தான் சார்... கொஞ்சமாவது போட்டுகிட்டு இறங்கலைன்னா, இந்த நாத்தத்துல உயிர் போயிடும்... சகிச்சுக்கணும்ன்னா, எதனா போட்டுக்க வேண்டியிருக்கு... இத்தனை பேசறீங்களே, ஒரு நாள், ஒரே ஒருநாள் நீங்க செய்து பாருங்க,'' என்றான், மாரிமுத்து.
''ரொம்ப பேசற,'' என்றார், சம்பத்.
''கேட்டதை கொடுத்தா, என் வேலையை பார்த்துக்கிட்டு போய்கிட்டிருப்பேன்... 'எவ்வளவு வேணும்ன்னா வாங்கிக்க, வந்து செய்து கொடு...'ன்னு கூப்பிட வேண்டியது... வந்து செய்தால், 'இந்த வேலைக்கு, இது போதும்...'ன்னு முகத்தில் அடிக்க வேண்டியது,'' என்றான்.
''எத்தனை வேதனையான விஷயத்தை பேசிக்கிட்டிருக்கோம்... இவனானால் இங்கே நின்னு தொல்லை பண்ணிகிட்டிருக்கான்... கொடுத்து அனுப்பிடுங்களேன்,'' என்றார், சேகர்.
''நீங்க ஒருத்தரை பத்தி பேசிக்கிட்டிருந்தீங்க... கேட்கவே பரிதாபமா இருந்தது... எந்த மருத்துவமனை,'' என்று விசாரித்தான், மாரிமுத்து.
''தெரிஞ்சு என்ன செய்யப் போற... அவர்கிட்ட போய், 'உங்க வீட்ல ஏதும் சாக்கடை வேலை இருக்குமா...'ன்னு, கேட்கப் போறியா... இருந்தாலும், கொடுக்கற நிலையில் இல்லை... நீ போய் நின்னுடாதே,'' என்றார், சேகர்.
பணத்தை கொடுத்து, ''எண்ணிக்கோ,'' என்றார், சம்பத்.
சரி பார்த்து, அதிலிருந்து, 200 ரூபாயை எடுத்தான், மாரிமுத்து.
''யாரோ ஒருத்தர், விபத்தில் சிக்கி, அபாய நிலையில் இருக்கிறதா பேசிகிட்டீங்க... நல்ல மனிதர், பரோபகாரின்னும் உங்க பேச்சிலிருந்து தெரியுது... எப்படியும் ஒரு தொகை திரட்டி எடுத்து போய், அவரை பார்ப்பீங்க... அதோடு, இந்த சின்ன தொகையையும் சேர்த்துக்குங்க...
''ஏதோ என்னாலானது... விபத்தில் அப்பா மாட்டிகிட்டால், குழந்தைங்களுக்கு ஏற்படும் மன காயம் ரொம்ப பெருசுங்க,'' என்று, அவன் வைத்துச் சென்ற ரூபாய், இருவரின் மனசாட்சியை தட்டி எழுப்பியது.
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
'ஒரு தொகையை, 'ரெடி' பண்ணி, இப்பவே மருத்துவமனைக்கு புறப்படுவோம்...' என்று கலைந்தனர்.

படுதலம் சுகுமாரன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-செப்-201922:04:17 IST Report Abuse
D.Ambujavalli ஏழைக்கு உதவ ஏழை தான் முன்வருவான் நெத்தியடி
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
08-செப்-201913:29:25 IST Report Abuse
Girija நல்ல கருத்து சபாஷ், சாமானியர்கள் தான் உடனே உதவி செய்வார்கள், நன்கு தெரிந்த வசதியான நண்பர்கள் கூட லேசில் அசையமாட்டார்கள், காசை எடுக்கமாட்டார்கள், வாய்பந்தல் போடுவதோடு சரி. ஆள் போய்விட்டால் அப்படியே சைலெண்டாக இருந்துவிடுவர்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08-செப்-201908:41:42 IST Report Abuse
skv srinivasankrishnaveni எனக்கும் அனுபவம் உண்டே என் நெருங்கிய உறவு அவர் போனவருஷம் விஷு அன்று வீட்டுலே பூஜைமுடிஞ்சதும் தன 2வீலர்களே சிவன்கோயில்போய்யிட்டுஅர்ச்சனைமுடிச்சு வீடு திரும்பறச்ச அவரை போதைலக்கார் ஒட்டியவன் அடிச்சுட்டுப்போயிட்டான் அவர் விழா அவர்மீது அவரோர வண்டியும் வீழ்ந்தது ஒரு நல்ல உள்ளம் படைச்ச ஆட்டோக்காரர் அவரையே எழுப்பிஉக்காரவச்சு உதவினார் , சமாளிச்சுண்டு எப்படியோ வீடும் வந்துட்டார் , கரெக்ட்டா ஒருமாசம் இருந்தால் தனது 69vayasule மூலையில் ரத்தம் கட்டியதுனாலஅறிவையும் நடக்க மறுநாள் உயிர் பிரிஞ்சது இந்த விஷுக்கு ஆபிதிகம் முடிஞ்சுது என்று டாஸ்மாக் ஒழியுமோ அன்றுதான் தமிழனு நிஜமான சுதந்திரம் என்பேன் , தண்ணீ அடிச்சுட்டு வண்டிஓட்டக்கூடாதுன்னு சட்டமாவது இருக்கா ?பள்ளி ஆசிரியர் லெந்து பொலிசுஅதிகாரிகள் எல்லாப்பெரியமனுஷாளும் பரமேலைகளும் கூட பேதமே இல்லாது தான் குடிக்குறாங்க அப்பாவிகள் மரணம் அடைந்து மேலே போயிடுறாங்க குடிப்பது நாகரீகம் என்று சப்பைக்கட்டு வேறு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X