சிக்கனம்
எங்கம்மாவிடம் வழக்கமாக ஒரு பர்ஸ் உண்டு. எங்கே வெளியே போனாலும், அதில் இருந்து ரூபாயை எடுத்துச் செலவு செய்வார். ஒருமுறை, கடையில் நாங்கள் வாங்கிய பொருட்கள் அதிகம். பர்ஸில் இருந்த தொகை போதவில்லை. அம்மா கவலையே படாமல், பர்ஸை வைக்கும் தோள்பட்டைப் பையில் கைவிட, அதன் இரகசிய அறைகளில் இருந்து இன்னும் கொஞ்சம் ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொடுத்தார்!
இன்னொருமுறை வீட்டில் சுத்தம் செய்துகொண்டிருந்தோம். பீரோவில், அடுக்கிவைக்கப்பட்ட துணிகளுக்குக் கீழே கொஞ்சம் ரூபாய் நோட்டுகளைப் பார்த்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ரூபாயை வைக்கும் இடங்களா இவை? பத்திரமாக வங்கியிலேயே வைத்துக்கொள்ளலாமே?
“ஆத்திர, அவசரத்துக்கு உதவறதுக்காக வெச்சிருக்கிற ரூபாய் அது, கதிர்...” என்று விளக்கினார் உமா மிஸ்.
“ஆத்திர, அவசரம்னு எதை சொல்றீங்க மிஸ்?”
“திடீர்னு உடம்புக்கு முடியலை. டாக்டர்கிட்ட போகணும். எதிர்பாராம, வாசல்ல கேஸ் வந்து நிக்குது. கொடுக்க பணம் வேணுமில்லையா? இது மாதிரி எதிர்பாராத செலவுகளை யோசிச்சுத்தான், வீட்டுல பணத்தை வெச்சுப்பாங்க. அதேநேரம், அது மறைமுக சேமிப்பு. எடுக்காமலேயே இருந்தால், அது அப்படியே கண்ணுக்குத் தெரியாத சேமிப்பாத்தானே இருக்கும்.”
“இது ஒரு பெரிய இம்சை மிஸ். எங்கப்பா கையில காசு கொடுத்துட்டு, 'பார்த்துச் செலவு பண்ணு'ன்னு சொல்வார். அப்புறம், காசு கொடுக்கவே வேணாமே?”
ஒரு நிமிடம், உமா மிஸ் என் முகத்தையே பார்த்தார். நான் கேட்டதில் எந்தத் தவறும் இல்லையென்றுதான் தோன்றியது. ஒரு சில நொடிகள் உமா மிஸ் அமைதி காத்துவிட்டு, “வாரன் பஃபெட் என்கிறவரைப் பத்தி கேள்விப்பட்டிருக்கியா?” என்றார்.
“தெரியும் மிஸ். உலகின் மூன்றாவது பணக்காரர். கோடி, கோடீஸ்வரர்...”
“அவர் வாழ்க்கை எப்படிப்பட்டது தெரியுமா?”
“அவருக்கு என்ன மிஸ்? ஜாலியா ஒவ்வொரு நாளும் ஃபைவ் ஸ்டார் ஓட்டலா சாப்பிடலாம், உசத்தியான துணியா வாங்கி போட்டுக்கலாம், சூப்பர் காரா வாங்கி ஓட்டலாம்...”
“அதுதான் இல்ல.”
“அப்படின்னா?”
“அவர மாதிரி சிக்கனமான மனுஷனைப் பார்க்கவே முடியாது. 1958இல வாங்குன வீட்டுல தான் இன்னும் இருக்கார். காலையில் ஒரு சாதாரண மெக்டொனால்டு கடையில தான் பிரேக்பாஸ்ட்.
சாதாரண கார். அவரோட ஆபீஸ்ல எந்த மாற்றமும் இல்லை. பழைய செல்போனைத்தான் இன்னமும் பயன்படுத்திக்கிட்டு இருக்கார்.”
“ஓ! ஏன் மிஸ் இவ்வளவு கஞ்சத்தனம்?”
உமா மிஸ் சற்று நிறுத்தி, என்னை முறைப்பது போல் பார்த்தார்.
“இது கஞ்சத்தனம் இல்ல கதிர், சிக்கனம்! பணம் இருக்குங்கறதுக்காக வாரி விடறதுனால என்ன லாபம்? எது தேவையோ, எவ்வளவு தேவையோ, அதை மட்டும் செலவு செஞ்சா போதும். உண்மையில், சிக்கனம்ங்கறதை நாம் வேற விதமா பார்க்கணும்.”
“எப்படி பார்க்கணும் மிஸ்?”
“சிக்கனம்ங்கறது வெறும் பணம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அது இயற்கை சம்பந்தப்பட்டது. வீணா ஓர் அறையில, விளங்கு எரிஞ்சுக்கிட்டே இருந்தா, யாருக்கு நஷ்டம்? கூடுதலா கார் உற்பத்தி அதிகரிச்சா, யாருக்குப் பாதிப்பு? தேவையில்லாமல் பேப்பரை செலவு செய்யறதால, எத்தனை மரங்கள் அழிஞ்சுபோகும்? நாம ஒவ்வொருவரும், இயற்கையைச் சுரண்டிக்கிட்டே இருக்கோம்.
நீர் வளம், நில வளம், வன வளம் என்று எல்லாத்தையும் காலி பண்ணிக்கிட்டே இருக்கோம். அதாவது, தேவைக்கு அதிகமாக, ஊதாரித்தனமாகச் சுரண்டிக்கிட்டு இருக்கோம்.
இங்கதான் சிக்கனம் வேண்டும். ஒவ்வொருவரும் தங்களால முடிஞ்ச அளவு சேமிச்சா, சிறுதுளி பெருவெள்ளம் இல்லையா? 50 அண்டுகள் தான் தாக்குப் பிடிக்கும்னு சொல்ற கச்சா எண்ணெய், இன்னும் ஒரு முப்பது ஆண்டுகள் கூடுதலா இருக்கும்.
பத்து ஆண்டுகள்ல காணாமல் போற நிலக்கரிச் சுரங்கம், இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் தாக்குப் பிடிக்குமே. வளங்கள் எல்லையற்றவை அல்ல. எல்லாத்துக்கும் ஓர் எல்லை உண்டு.
பெரியவங்க மீண்டும் மீண்டும் சிக்கனமா இருன்னு சொல்றதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. அதீதமா செலவு செஞ்சு, எல்லா வளங்களையும் அழிச்சுட்டா, நாம் நடுத்தெருவுல தான் வந்து நிற்கணும். அதனால்தான், வரவுக்குள்ள செலவு செய்யணும். இருப்பதற்குள் வாழப் பழகணும். தேவைகளைக் குறைச்சுக்கிட்டு, மனநிம்மதியோட வாழணும்னு சொல்றாங்க. சிக்கனங்கறது ஒரு பாதுகாப்பு.”
“சிக்கனம் எப்படி மிஸ் மனநிம்மதி தரும்?”
“மனசு எப்போ பார்த்தாலும் அலைபாயும். அதுவும் அடுத்தவங்களோட கார், வீடு, வசதி, வாய்ப்புகளைப் பார்த்து பொறாமை ஏற்படும். அது மாதிரி வாழணும்னு முயற்சி செய்யும்போது, அது நடக்காது. அப்போ, இன்னும் வெறுப்பும் வேதனையும் தான் அதிகமாகும்.
இந்த இடத்துல தான் சிக்கனம்ங்கறது மனப்பக்குவத்தைக் கொடுக்கும். துன்பம்ங்கறது வெளியே இருந்து வருவதில்லை. அதை நாமே தான் ஏற்படுத்திக்கறோம். சிக்கனமா இருந்தா, இந்தப் பிரச்னையெல்லாம் இல்லாமல், சந்தோஷமா இருக்கலாமே!” என்றார் உமா மிஸ்.
எனக்கு இந்தக் கோணம் புதுசு. மெல்ல யோசிக்கத் தொடங்கினேன்.
தேவையில்லாத பொருட்களை நீங்கள் வாங்கினால், விரைவில் உங்களுக்குத் தேவையான பொருட்களையும் விற்க வேண்டியிருக்கும்.
- வாரன் பஃபெட்