இருபத்தி நாலு மணிநேரமும் கடைகள் திறந்து வைக்கலாம் எனும் ஆணையை, தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்தது. அதையொட்டி, “நடுராத்திரியில் ஷாப்பிங் செய்வீர்களா?” என்று கேட்டிருந்தோம். மாணவர்களின் கருத்தறிய, கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம், தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றிருந்தோம். அந்த மாணவர்களின் கருத்துகள் இதோ:
சூர்யதர்ஷினி 12ஆம் வகுப்பு
நிச்சயம் கடைக்குப் போவேன். 24 மணிநேரமும் கடைகள் திறந்திருப்பது வரவேற்கத்தக்கது. இரவுநேர திருட்டுகள் குறையும். மேலை நாடுகளில் உள்ளதுபோல், பெண்களின் பாதுகாப்பை அரசு ஏற்படுத்தவேண்டும். இரவுநேர வியாபாரத்தால் அரசின் வருமானம் உயரும்.
அஷ்வின் 10ஆம் வகுப்பு
தேவையானவற்றை திட்டமிட்டு முன்னாடியே வாங்கிவிட்டால், கடைசிநேர பரபரப்பு இருக்காது. அவரசகதியில் பொருட்களை வாங்கும்போது, அதன் தரத்தைச் சரிபார்க்க முடியாது. அதனால, நைட் ஷாப்பிங் செய்ய மாட்டேன்.
மேகவர்ஷினி 12ஆம் வகுப்பு
எங்க வீட்டில் இரவு வெளியே சுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டாங்க. இப்படி ஒரு யோசனையை அரசு முன்வைப்பதே தேவையில்லாத வேலை. குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கலாம். கடைகளுக்கு வியாபாரம் பெருகலாம். அரசுக்கும் வருவாய் வரலாம். ஆனா, மக்களிடம் சேமிப்பே இல்லாம போய்விடும் ஆபத்து இருக்கு.
மகிபாலன் 12ஆம் வகுப்பு
தேவையான பொருட்களைத் தேவையான நேரத்தில் வாங்க, இரவுநேரம் கடை திறந்திருப்பது நல்லதுதான். எதையும் ஸ்டாக் செய்து வைக்கவேண்டாம். நான் குடும்பத்துடன் ஷாப்பிங் செய்வேன்.
காருண்யா 11ஆம் வகுப்பு
படிக்கவும், எழுதவுமே நேரம் பத்தல. இதுல நடுராத்திரி ஷாப்பிங் எல்லாம் போகவே முடியாது. அப்படி ஷாப்பிங் போனால், அடுத்த நாள் பகல் முழுக்க தூங்கி வழியணும். இதுக்கு பகலில் ஷாப்பிங் செய்யுறதுதான் நல்லது.
சுபிக் ஷா 9ஆம் வகுப்பு
வேலைக்குப் போய்ட்டு வர்ற அப்பா, அம்மாவே லேட் நைட்லதான் வீட்டுக்கு வருவாங்க. இதுல கடைகளையும் இப்படித் திறக்க அனுமதிச்சா என்னவாகும்?! குடும்பத்துடன் பிறகு எப்ப நேரம் செலவழிப்பது? நிச்சயமாக எங்க வீட்டில் நடுராத்திரியில் ஷாப்பிங் போக மாட்டோம்.