சென்னை, மேற்கு மாம்பலம், அஞ்சுகம் பள்ளியில், 1976ல், 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பாட்டி, அத்தைகள், சித்தப்பா என்று, பெரிய குடும்பத்தில், அப்பாவின் சம்பளம் மட்டுமே வருமானம். வீட்டு நிலை உணர்ந்து, படிப்பில் கவனம் செலுத்தினேன்.
பள்ளிக் கட்டணம் செலுத்த, ஒன்பது ரூபாயை, சின்னஞ்சிறு கறுப்பு பர்சில் வைத்து கொடுத்தார் அப்பா.
மதிய உணவு இடைவேளையில், கட்டணம் செலுத்த பர்சை திறந்தேன். பணத்தை காணாமல், 'பகீர்' என்றது. வகுப்பு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.
அப்பாவின் கடின உழைப்பும், தளர்ந்த உடலும், மனக்கண்ணில் வர, கதறி அழுதேன்.
தமிழ் ஆசிரியை வத்சலா, பணம் கொடுக்க முன்வந்தார்; வாங்க மறுத்தேன். கட்டண பணத்தை திணித்து, 'தமிழ் பாடத்தில், முதல் மதிப்பெண் எடுத்து, இந்த பணத்தை ஈடு செய்...' என்றார்.
அத்துடன், 'கடின உழைப்பால் ஈட்டும் பணத்தை, பாதுகாப்பதில் கவனம் வேண்டும். விரயம் செய்யாமல் பயனுள்ள வகையில் செலவிட பழக வேண்டும்...' என்றும் அறிவுரை கூறினார்.
அதை மனதில் பதித்தேன். கடும் முயற்சி செய்து படித்தேன்.
சென்னை மாவட்ட தமிழ் மாணவர் மன்ற தேர்வில், 96 மதிப்பெண் வாங்கி, முதலிடம் பிடித்து, பாராட்டு பெற்றேன்.
அந்த ஆசிரியையின் அறிவுரையை மனதில் கொண்டு வாழ்கிறேன்!
- வானதி, சென்னை.